இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 ஜூலை, 2017

தடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்!

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்ஆன் மற்றும் முஹம்மது நபி அவர்களின் வரவும் இவ்வுலகில் நிகழ்த்திய மாற்றங்களும் சீர்திருத்தங்களும் கொஞ்சநஞ்சமல்ல! உலகெங்கும் கோடானுகோடி உள்ளங்கள் சீர்திருந்துவதற்கும் குடும்பங்கள் புதுவாழ்வு காண்பதற்கும் பல்லாயிரக்கணக்கான சமூகங்கள் தங்களைப் பீடித்திருந்த இன, நிற, ஜாதி, போன்ற அடிமைத்தளைகளிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும் காரணமாக அமைந்தன திருக்குர்ஆனின் போதனைகளும் அதைக் கொண்டுவந்த முஹம்மது நபிகளாரின் முன்மாதிரி வாழ்க்கை நடைமுறைகளும்!
மாற்றங்களை நோக்கி மக்கள் பயணித்தபோது ஆதிக்க சக்திகள் ஆட்டம் கண்டன. இஸ்லாத்தின் எழுச்சியைத் தடுக்க பல்வேறு தந்திரங்கள் கையாண்டார்கள். இஸ்லாத்தைப் பற்றி கட்டுக்கதைகளையும் பொய்களையும் கட்டவிழ்த்துவிட்டனர். இஸ்லாத்தைக் காட்டுமிராண்டி மார்க்கமாக சித்தரித்தனர். நபிகளாரைப் பற்றி அவதூறுகள் கற்பனை செய்து உருவாக்கிப் பரப்பினார்கள்.  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரை சித்திரவதைகளுக்கு உட்படுத்தினார்கள். கொன்று குவித்தார்கள். இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பரப்புரைகள் மேற்கொண்டார்கள். எண்ணெய் வளங்கள் நிறைந்த இஸ்லாமிய நாடுகளை சதா போர்முனையில் நிறுத்த சதித்திட்டங்கள் மேற்கொண்டார்கள்.
ஆதிக்க சக்திகள் அனைத்துத் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும் கையாண்டபோதும் இந்த இறைமார்க்கத்தின் வளர்ச்சியை எள்ளளவும் அவர்களால் தடுத்திட முடியவில்லை என்பதே உண்மை! 
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட  அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32) 
 இவ்வாறு இஸ்லாம் என்ற மார்க்கம் இதுவரை உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அதிகமானோரை இன்று ஈர்த்து நிற்பதும் தொடர்ந்து அதிகமானோரை ஈர்த்து வருவதும் இம்மார்க்கம் இவ்வுலகைப் படைத்தவனால் அருளப்பட்ட ஒன்று என்பதற்குப் போதிய சான்றாக உள்ளது.
அவதூறுகளைத் துடைத்தெறிந்த நல்லோர்  
ஆதிக்க சக்திகளால் அவ்வப்போது  அவதூறுகள் பல அள்ளிவீசப்பட்டாலும் அவை கற்றறிந்த நடுநிலை பேணிய மேதைகளால் இவை துடைத்தெறியப் பட்டும் வந்துள்ளன. ஆங்கில தத்துவவாதியும் தனது "The Heroes" என்ற புத்தகத்திற்காக நோபெல் பரிசு பெற்றவருமான  தாமஸ் கார்லைல் (Thomas Carlyle) பின்வருமாறு எழுதுகிறார்:
"இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கம் என்றும் முஹம்மது ஒரு பொய்யர் மற்றும் ஏமாற்றுக்காரர் என்றும் ஐரோப்பியர்கள் கூறி பரப்புரை செய்தது மிகப்பெரிய அவமானத்துக்குரிய ஒரு செயலாகும். அவர் தனது கொள்கைகளில் அசைக்கமுடியாத உறுதியோடு இருந்தார் என்பதையும், அன்பு, கருணை, பரிவு, பயபக்தி, நேர்மை, ஆண்மை, கடின உழைப்பு, நம்பகத்தன்மை இப்படிப்பட்ட நற்குணங்களோடு திகழ்ந்தார் என்பதையுமே நம்மால் காணமுடிகிறது. இந்த நற்பண்புகளோடு மற்றவர்களுடன் தாராள மனதோடும் விட்டுக்கொடுக்கும் குணத்துடனும் பெருந்தன்மையோடும் மகிழ்வோடும் நடந்து கொண்டுள்ளார். பெரும் தலைவராக  இருந்தும் மக்களோடு மக்களாக ஒன்று கலந்து வாழ்ந்துள்ளார். சிலவேளைகளில் தனது தோழர்களோடு நகைச்சுவை உணர்வோடு நடந்து கொண்டிருக்கிறார். அவர்களை கேலியும் செய்திருக்கிறார். அவர் வாய்மை, நீதி, துடிப்பு, தூய்மை, பெருந்தன்மை, காரிய முனைப்பு போன்றவற்றின் உறைவிடமாகத் திகழ்ந்துள்ளார்.  உள்ளுக்குள் ஒளிக்கிரணங்களை தாங்கி நின்றது போல காரிருள் சூழ்ந்த  இரவுகளிலும்   அவரது முகம் ஒளிமயமானதாக விளங்கியது. அவர் பள்ளிக்கூடம் செல்லவுமில்லை. எந்த ஆசிரியரும் அவருக்கு பாடம் கற்பிக்கவில்லை. அவருக்கு அதற்கான தேவையும் இருந்ததில்லை." 

Thomas Carlyle
“நம்மவர்கள் ரொம்ப உற்சாகமாக முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது”.
       – தாமஸ் கார்லைல் – (Heroes and Hero Worship and the Heroic in History, 1840)

“சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த - ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ!!”
        தாமஸ் கார்லைல் (Thomas_Carlyle), Heroes_and_Hero_Worship

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப் புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
       – தாமஸ் கார்லைல் – (Heroes and Hero Worship and the Heroic in History)

ஒரு வாழ்வியல் நெறியை அல்லது மார்கத்தைப் பற்றி அதை ஏற்றவர்கள் கூறும்போது உணர்ச்சிவசப்பட்டு கூறப்படும் கருத்துக்கள் இருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு இல்லாமல்  இருக்க நடுநிலை பேணிய நல்லோர்கள் நபிகளாரைப்  பற்றியும் இஸ்லாம் மற்றும்  திருக்குர்ஆன் குறித்து முன்வைத்த கருத்துக்களில் மேலும் சிலவற்றை கீழே காண்போம்:


Annie Besant
அரேபியாவின் இந்தத் தூதருடையவாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அவர்மீது மரியாதைத் தவிர வேறு எதுவும் ஏற்படாது. அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரான இறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அந்த அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும், புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான் உணர்கிறேன்.
       – அன்னி பெசன்ட் (Annie Besant) - The life and Teachings of Mohamed 1932, page 4

இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவிய ஒருவர் முஹம்மத் அவர்கள்!மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்டமுடியாது!
       – லா மார்ட்டின், ஹிஸ்டரி தெலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.

தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள் நம்பிக்கைகளை நிலை நாட்டியவர், மாயைகள்/கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கி அளித்த மாமேதை, ஒரே ஆன்மீகத் தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர்தாம் முஹம்மத் அவர்கள்.
       – லா மார்ட்டின்(Lamartine) – 

Alphonse Lamartine
“உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும்தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முஹம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாதாயக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவமுடிந்தது. ஆனால் முஹம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின்போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள், அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.”
 அல்போன்சு லாமார்ட்டின் - (Alphonse Lamartine - Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276-277)

Diwan Chand Sharma
முஹம்மது இரக்கமே உருவானவர். அவரது இரக்கம் அவரைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்ந்திழுத்தது.
  – திவான் சந்த் ஷர்மா (D.C.Sharma – The Prophets of the East Calcutta 1935 pp 12)

அன்பின் ஆன்மாவாக முஹம்மத் இருந்தார். அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்க முடியாததாக இருந்தது.
– திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122.


= நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றுமுழுதும் ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும்! மனித குலம் முழுவதும் பின்பற்றத்தக்க உயரிய கோட்பாடுகளை உடையதுநபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத் தன்மையை தெளிவாக்கியுள்ளது.
       – டாக்டர் ஜான்சன் 

ஆட்சி புரியும் அமைச்சர்கள் (முஹம்மது) நபிபெருமான் வகுத்த சீர்திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
       –  காந்திஜி 
  

Gandhiji
= “மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும்போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். முஹம்மது நபி நாயகத்தின்மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்துக் கொள்ளும் உயர்பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணிக் காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டுவந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது!”
         மகாத்மா காந்தி – 'யங் இந்தியா’ (Young India) பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.

Michael H. Hart
= “உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலி முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே”
  – M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978)

= சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்.
       – மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33. 

Bosworth Smith
= போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர்முஹம்மது. தெய்வீக கட்டளைக் கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.
       – பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.

Bernard Shaw
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டுவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.
    ஜார்ஜ் பெர்னாட்ஷா –

முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity)இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்து பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன். அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்கமுடியும்.
       –  ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).


ஐரோப்பியர்களாகிய நாம் நமது அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி முஹம்மதின் சாதனைகளை முறியடிக்கவோ முந்தவோ முடியவில்லை என்பதே உண்மை. மானிட சரித்திரம் முழுவதையும் ஆராய்ந்ததில் இறுதியாக முஹம்மது அவர்களை மட்டுமே மானிடற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் காண முடிந்தது. உண்மையில் முஹம்மது ஓரிறைக் கொள்கை மூலம் முழு உலகையும் கீழடக்கினார் என்றே சொல்லவேண்டும்.
ஜோன் வுல்ப்கங்க் (Johann Wolfgang von Goethe), என்ற ஜெர்மனி எழுத்தாளர்- 


இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர்முஹம்மதுதான்.
       – என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா 

Napoleon
= திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
       – நெப்போலியன் 

= துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கிவிட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல்நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக் கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம்அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
       – எஸ். எச். லீடர்    

= முஹம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் அவற்றிற்கு நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! “பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது” என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத – விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது! மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்! இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முஹம்மது நபி. 

C. N. Annadurai
(Arignar Anna)

நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று! சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு! நபிகள் நாயகம்சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார்! அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.

நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது” என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்ட துயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி! இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.
       – அறிஞர் அண்ணா – 


=இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, 'ஒருவனே தேவன்' என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறை நம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமைக் கொண்டாடியமுஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்?
       – வாஷிங்டன் இர்விங் –Washington Irving
= ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோமுஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்றுக் கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்தபோதும் இருந்தார். அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்.
       – வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.

Edward Gibbon
= அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபிஒருவரே.
       – எட்வர்டு கிப்பன் 

Sarojini Nayudu
= எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஓட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேல்நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.
       – கவிக்குயில் சரோஜினி நாயுடு 

Dr. Ambedkar


= பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள்  கிடையாது.
 டாக்டர் அம்பேத்கார் Leo Tolstoy
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
       – டால்ஸ்டாய் 

William Moore
சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்க முடியாது.
       – வில்லியம்மூர் 

இஸ்லாத்தின் நிறுவனர் (முஹம்மத் நபி) உடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
       – ஜி.ஜி. கெல்லட் –    

நன்றி: http://payanikkumpaathai.blogspot.in

படங்கள்: இணையம்

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html


இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html

2 கருத்துகள்:

  1. 👌 Excellent compilation of the frank and real views and opinions of many influential personalities in history confirming the best and beautiful characters of the last and final Prophet Muhammad (peace and blessings be upon him).

    பதிலளிநீக்கு