இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 டிசம்பர், 2012

திரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்!

Related image
தீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது...
 மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப்படத் தக்கது அல்ல, மாறாக நமக்கு உலக அரங்கிலேயே தமிழினத்திற்கு இழிவைத் தேடித் தரும் விடயம் அது! ஆம், ஒரு காலத்தில் தீண்டத் தகாதவர்கள் என்று தமிழினமே முத்திரை குத்தி வைத்திருந்த ஒரு கூட்டத்தை இன்று அவர்கள் திரையில் செய்யும் சாகசங்களை உண்மை என்று கருதி அவர்களை அனைத்து மக்களுக்கும் மேலே உயர்த்திவைத்து அழகுப்பார்க்கும் விந்தையே அது! பொறுப்பற்ற இந்த சமூகப் போக்கு கட்டுப்படுத்தப் படாததன் விளைவாக இன்று பல அபாயங்கள் நம்மை அலைகழித்துக் கொண்டிருக்கின்றன.
துணைபோகும் ஊடகக் கும்பல் 
 கலைச் சேவை என்ற பெயரில் திரை வழியாக ஆபாசத்தையும் காமவெறியையும் கொலைவெறியையும் விதைத்து சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் வழிகெடுக்கும் பணியில் நடிக நடிகையர்கள், கதாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் என ஒரு பெரும் படையே திரண்டு இயங்கி வருகிறது. திரைக்கும்பல் மூலம் உருவாகப்பபட்டு காட்டுத்தீயாக பரவிவரும் இத்தீமைகளுக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்து வருகின்றது ஊடகக் கும்பல்.
பொதுமக்களின் பொருளை கொள்ளையடிப்பது ஒன்றே இவ்விரண்டு கும்பலகளுக்கும் உள்ள பொது நோக்கம்! அவர்களின் காமப் பசிக்கும் ஆர்வப் பசிக்கும் தீனி போட்டு தங்கள் வயிறை வளர்ப்பது ஒன்றே இவர்களின் இலட்சியம்! சமூகம் எக்கேடு கேட்டுப் போனால் நமக்கென்ன, ,நமக்கு வேண்டியது பணம் என்ற கண்மூடித்தனமான வெறிகொண்டு இயங்கி வருகிறது இக்கூட்டணி! அதேவேளையில் இவர்களின் பணப்பசிக்கு இரையாகும் ரசிகர் கூட்டமோ தங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நாசத்தையோ, தங்கள் நாடே பறிபோய்க் கொண்டிருக்கும் அபாயத்தையோ, உலக அரங்கில் தமிழினத்திற்கு உண்டாகும் அவமானத்தையோ கண்டுகொள்ளாமல் ஒருவிதமான போதையில் ஊறிப்போயுள்ளது. 
  
நோய் முற்றும் முன்......
 இந்த இரு கும்பல்களும் சின்னத்திரை மூலமாகவும், பெரியதிரை மூலமாகவும் நம் வீடுகளுக்குள்ளும் உறவுகளுக்குள்ளும் சமூகத்திற்குள்ளும் ஊடுருவிப் பாய்ச்சி வரும் நச்சுக் கிருமிகள் ஏராளம், ஏராளம்! அவற்றின் விளைவாக நம் குடும்ப உறவுகளையும் உயர்ந்த பண்பாடுகளையும் மானம் மரியாதை அனைத்தையும் தொலைத்துவிட்டு நிர்கதியாக நிற்கும் அவலநிலையில் உள்ளோம்! எங்கு பார்த்தாலும் உடைந்து போன உறவுகள், பெற்றோரை மதிக்காத பிள்ளைகள், முதியோர் இல்லங்கள், கள்ளக்காதல் உறவுகள், விபச்சாரம், போதைப்பொருள் ஆதிக்கம், நம்பிக்கை மோசடிகள்..... என முடிவுறாத பட்டியல்! .....இனி என்னதான் இல்லை என்று நம்மைக் குழப்பங்கள் சூழ்ந்து நிற்கின்றன! இனியாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டாமா?
இந்த நோய் முழுவதுமாக முற்றி நம்மை அழித்துவிடும் முன் எவ்வாறு இதைத் தடுப்பது? தன்னலமற்ற சமூக அக்கறை கொண்ட அனைவரின் இதயத் துடிப்பும் இவ்விடயத்தில் பலமாகவே ஒலிப்பதை நாம் கேட்கமுடிகிறது! ஒவ்வொரு குடும்பங்களிலும் தனிநபர் வாழ்விலும் இவ்வளவு மோசமாகப் புரையோடிப் போயுள்ள இந்தக் கலாசாரத்தை மாற்ற முடியுமா? 

கலை உணர்வு, வேடிக்கையை ரசித்தல், காம உணர்வு, பொருளாசை, புகழாசை...  போன்றவை எல்லா மனிதனுக்குள்ளும்  குடிகொள்வது இயற்கையே. இவைதானே இன்றைய இந்த இழிநிலைக்கு நம்மை இட்டுச்செல்கின்றன? இவற்றிற்கு வடிகால் போடமுடியுமா? என்றெல்லாம் நீங்கள் கேட்பதும் உரக்கவே கேட்கிறது.

தனிநபர் சீர்திருத்தம்
ஆம் அன்பர்களே, சீர்கேட்டின் சிகரம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் தமிழகத்தைக் காப்பாற்ற ஒரே வழிதான் உள்ளது. அது தனிநபர் சீர்திருத்தம் மூலம் மட்டுமே சாத்தியம்! ஆம், இங்கு தீமைகளை விதைப்போரையும் அவற்றிற்குத் துணைபோவோரையும் பாதிக்கப் படுவோரையும் என அனைவரையும் ஒருசேர சீர்திருத்தியாக வேண்டும். அது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியமே! அதற்கு மனிதகுலம் அடிக்கடி மறந்துவிடும் சில அடிப்படை உண்மைகளை மீண்டும் அவர்களின் மனங்களில் விதைக்க வேண்டும். சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் இவற்றை நினைவூட்ட ஆவன செய்யவேண்டும்.
அதில் முதல் அடிப்படை நாம் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியவர்களே என்ற உண்மை. அதாவது நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்ற மறுக்கமுடியாத உண்மையை நாம் மறந்து விட்டதனால்தான் ஒருவரை ஒருவர் வெல்லவேண்டும், கொல்லவேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்ற சுயநலம் நமக்குள் தலை தூக்குகிறது. மட்டுமல்ல மனித சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் நாம் மறந்துவிடுகிறோம்.

இரண்டாவது அடிப்படை, நம் அனைவரையும் படைத்தவனும் பரிபாலித்து வரக்கூடியவனும் ஆகிய இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதும் அவன் ஒரே ஒருவன்தான், என்ற உண்மை. அந்தப் படைத்தவன் மட்டுமே இறைவன் அவனுக்கு மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க சக்தியுள்ளது என்ற உண்மையை மறந்துவிடுவதால்தான் நம்மில் பலரும் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் கண்டவர்களையும் கடவுளாக பாவிக்கத் தலைப்படுகிறார்கள். அதனால் கடவுளைப் பற்றிய பயமே இல்லாமல் போகிறது. பாவங்கள் சமூகத்தில் மலிகின்றன.

மூன்றாவது அடிப்படை, அந்த இறைவனுக்கு நாம் இன்று செய்துகொண்டிருக்கக் கூடிய செயல்கள் அனைத்துக்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பேருண்மை. அதாவது இந்தத் தற்காலிகமான உலகை ஒருநாள் இறைவன் அழித்துவிட்டு மீண்டும் அனைவரையும் எழுப்பி விசாரணை செய்வான். அதன்பின் பாவிகளுக்கு தண்டனையாக நரகத்தையும் புண்ணியவான்களுக்குப் பரிசாக சொர்க்கத்தையும் வழங்கவுள்ளான் என்ற உணர்வு சமூகத்தில் பொறுப்புணர்வு வளர மிகமிக அவசியம்.

  சமூகம் சீர்கெடும்போது இந்த அடிப்படை உண்மைகளைத்தான் தொன்றுதொட்டு பூமியின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்த இறைவனுடைய தூதர்கள் மக்களுக்கு நினைவூட்டி அவர்களை நெறிப்படுத்திச் சென்றார்கள்.
சமூக நலனில் அக்கறை கொண்டுள்ளவர்களும் சீர்திருத்தவாதிகளும் இன்றும் அதே வழிமுறையைத்தான் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம். பெருகி வரும் பேராபத்துகளில் இருந்து நம்மையும் நம் தலைமுறைகளையும் காப்பாற்றி  மீண்டும் நாட்டில் தர்மத்தை நிலைநாட்ட யாருக்கெல்லாம் நாட்டம் உள்ளதோ அவர்கள் ஓரணியில் திரளவேண்டும். நமது மதம், ஜாதி, குலம் , நிறம் மொழி போன்ற வேற்றுமைகளை மறந்து நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற அடிப்படை உணர்வோடு இணைந்து செயல்பட வேண்டும்.  மனிதனின் எதிரியான ஷைத்தான் என்ற கொடிய சக்திதான் நம் வேற்றுமைகளைப் பெரிதாகக் காட்டி நம்மைப் பிரித்தாள்கிறான். அதன்மூலம் நம்மில் இருந்து இறைவனின் மீதுள்ள பக்தியையும் பயத்தையும் மறக்கடிக்கிறான்.

மேற்கண்ட அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைப்பதோடு இறைவன் இவ்வுலகில் எதையெல்லாம் நமக்கு அனுமதித்திருக்கிறான், எதையெல்லாம் தடுத்திருக்கிறான் என்ற வரையறைகளையும் அவற்றைப்  பேணுவதால் இவ்வுலகில் நமக்கு சில கஷ்டங்கள் வந்தாலும் அவற்றிற்குப் பரிசாக மறுமையில் சொர்க்க இன்பங்களை இறைவன் வழங்க இருக்கிறான் என்ற உண்மையையும் இறைவன் தடுத்த பாவகாரியங்களைச் செய்தால் மறுமையில் நரக நெருப்பின் வேதனை காத்திருக்கிறது என்ற உண்மையையும் அறிவுபூர்வமான முறைகளில் மக்களின் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் போதிக்கவேண்டும். அதேவேளையில் நீதிபோதனை என்ற பெயரில் கட்டுக்கதைகளையும் காலாவதியாகிப் போன பழம் புராணங்களையும் மூடநம்பிக்கைகளையும் போதித்தால் மீண்டும் மனிதனின் கடவுள் நம்பிக்கையும் இழந்துவிடுவான் இறையச்சமும் அவனைவிட்டுப் போய்விடும். தமிழ்நாட்டில் நாத்திகம் தலைதூக்கக் காரணம் அதுவாகத்தான் இருந்தது என்பதை நாம் அறிவோம்.

பிறகு எவ்வாறு அறிவுபூர்வமான முறையில் போதிப்பது?
அதற்காக இன்றைய காலகட்டத்தில் வாழும் மக்களைச் சீர்திருத்துவதற்காக  இறைவன் அனுப்பிய வேதமாம் திருக்குர்ஆனையும் இறுதித் தூதரின் மொழிகளையும் நாம் நாடியே ஆகவேண்டும். காரணம் இவை மட்டுமே எந்தக் கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இறை உபதேசங்களைக் கொண்டவையாக இருக்கின்றன என்பதையும் முந்தைய வேதங்கள் காலாவதியாகிவிட்ட காரணத்தால் அவற்றில் மனித வாக்குகள் கலந்து விட்டன எனபதையும் நடுநிலையோடு ஆராய்வோர் அறியலாம்.
--------------------- 
இறையச்சத்தை எவ்வாறு விதைப்பது என்பதை அறிய இதையும் படியுங்கள் :
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_1.html

இப்பதிவோடு தொடர்புள்ள இதையும் படியுங்கள்: http://quranmalar.blogspot.com/2012/12/blog-post_8721.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக