ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தவணை இருக்கிறது. அவரவரின் தவணை பூர்த்தியாகிவிட்டால் ஒரு வினாடிகூட அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 7:34)
(மேலும் முதல் மனிதரைப் படைத்தபோதே அல்லாஹ் இதைத் தெளிவாக்கி விட்டான்; அதாவது) ஆதத்தின் மக்களே...! (நினைவில் வையுங்கள்:) உங்களிலிருந்தே என்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கின்ற தூதர்கள் உங்களிடம் வந்தால், அப்போது எவர்கள் மாறு செய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றார்களோ, மேலும் தங்களுடைய நடத்தையைச் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 7:35)
ஆனால் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென வாதிட்டு அவற்றை ஏற்காமல் ஆணவம் கொண்டார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அவர்கள் என்றென்றும் அதில் வீழ்ந்து கிடப்பார்கள்.
(அல்குர்ஆன் : 7:36)
எவன் அல்லாஹ்வின் பெயரில் பொய்களைப் புனைந்துரைக்கின்றானோ அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றானோ அவனைவிட அக்கிரமக்காரன் யார்? எனினும், அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட பங்கு அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். இறுதியில் நாம் அனுப்பிய வானவர்கள் அவர்களுடைய ஆன்மாக்களைக் கைப்பற்றுவதற்காக அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்களிடம் கேட்பார்கள்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்த தெய்வங்களை அழைத்து வந்தீர்களோ அந்த தெய்வங்கள் (இப்போது) எங்கே?” அதற்கு அவர்கள் “அவை அனைத்தும் எங்களை விட்டுக் காணாமல் போய்விட்டன” என்று கூறுவார்கள். பிறகு “நாங்கள் உண்மையிலேயே சத்தியத்தை நிராகரிப்பவர்களாய் இருந்தோம்” என்று தங்களுக்கு எதிராகத் தாங்களே சாட்சி கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 7:37)
அல்லாஹ் கூறுவான்: “உங்களுக்கு முன் சென்ற ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களுடன் நீங்களும் நரகத்திற்குச் செல்லுங்கள்!” ஒவ்வொரு கூட்டத்தாரும், (நரகத்தினுள்) நுழையும்போது தமக்கு முன்சென்ற கூட்டத்தாரைச் சபித்தவாறே செல்வார்கள். இறுதியில் எல்லோரும் அங்கு ஒன்று கூடும்போது அவர்களில் பிந்தைய கூட்டத்தார் முந்தைய கூட்டத்தாரைப் பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தார்கள்! எனவே, இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையை அளிப்பாயாக!” என்று கூறுவார்கள். (அதற்கு மறுமொழியாக) அல்லாஹ் கூறுவான்: “ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு வேதனைதான் உண்டு. ஆயினும், நீங்கள் அறிவதில்லை.”
(அல்குர்ஆன் : 7:38)
மேலும், அவர்களில் முந்தைய கூட்டத்தார் பிந்தைய கூட்டத்தாரைப் பார்த்து “(நாங்கள் குற்றவாளிகள் என்றால்) எங்களைவிட நீங்கள் சிறந்தவர்களா என்ன? எனவே (இப்பொழுது) நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 7:39)
(உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்:) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக்கூறி அவற்றைப் புறக்கணித்து ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப்படமாட்டா! அவர்கள் சொர்க்கத்தில் நுழைவது என்பது, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது போன்று இயலாத ஒன்றாகும். மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலிதான் கிடைக்கும்.
(அல்குர்ஆன் : 7:40)
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், அவர்கள் போர்த்திக்கொள்ள நெருப்புப் போர்வைகளுமே கிடைக்கும். இவ்வாறே அக்கிரமக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்!
(அல்குர்ஆன் : 7:41)
(இதற்கு மாறாக) எவர்கள் (நம்முடைய திருவசனங்கள் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ இது விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சக்திக்கு ஏற்பவே நாம் பொறுப்பினைச் சுமத்துகின்றோம் அவர்கள் சுவனவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.
(அல்குர்ஆன் : 7:42)
மேலும், அவர்களின் நெஞ்சங்களில் (ஒருவர் மீது மற்றவருக்கு) இருந்த காழ்ப்புணர்வை நாம் போக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிராவிடில், நாங்கள் நேர்வழியை அடைந்திருக்கவே மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இதுதான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!”
(அல்குர்ஆன் : 7:43)
பிறகு சுவனவாசிகள் நரகவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவையே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவைதாம் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” அதற்கவர்கள், “ஆம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கு மத்தியில் ஒருவர் அறிவிப்பார்: அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாவதாக!
(அல்குர்ஆன் : 7:44)
அவர்கள் (எத்தகையவர்களெனில்) அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்தார்கள்; மேலும் அதனைக் கோணலாக்க விரும்பினார்கள்; மேலும் மறுமையை மறுத்தார்கள்.
(அல்குர்ஆன் : 7:45)
மேலும், அவ்விரு பிரிவினருக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பு இருக்கும். அதன் உச்சிகளில் மனிதர்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் (இப்பிரிவினர்) ஒவ்வொருவரையும் அவரவரின் முகக்கூறுகள் மூலம் அறிந்து கொள்வார்கள். மேலும், அவர்கள் சுவனவாசிகளை அழைத்துக் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்!” இவர்கள் இன்னும் சுவனம் புகவில்லை; ஆயினும் (அதனை அடைவதற்கு) ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 7:46)
மேலும், இவர்களின் பார்வைகள் நரக வாசிகளின் பக்கம் திரும்பும்போது கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! இவ்வக்கிரமக்காரர்களோடு எங்களைச் சேர்த்துவிடாதே!”
(அல்குர்ஆன் : 7:47)
பிறகு, உச்சிகளில் இருக்கும் இவர்கள் (நரகில் வீழ்ந்து கிடக்கும்) பெரும் பெரும் மனிதர்கள் சிலரை அவர்களுடைய முகக்கூறுகள் மூலம் அறிந்து அவர்களை அழைத்துக் கூறுவார்கள்: “(பார்த்தீர்களா!) உங்களுடைய கூட்டத்தினரும் நீங்கள் பெரிதாகக் கருதி வந்த சாதனங்களும் (இன்று) உங்களுக்கு எப்பலனையும் அளிக்கவில்லை.”
(அல்குர்ஆன் : 7:48)
மேலும், அல்லாஹ் இவர்களுக்கு எந்த அருளையும் வழங்கிடமாட்டான் என்று யாரைப் பற்றி நீங்கள் சத்தியம் செய்து கூறினீர்களோ, அவர்கள்தானே இந்த சொர்க்கவாசிகள்! (இன்று அவர்களை நோக்கியே கூறப்படும்:) “நுழைந்து விடுங்கள் சொர்க்கத்தில்! உங்களுக்கு யாதொரு அச்சமுமில்லை; நீங்கள் துயரப்படவும் மாட்டீர்கள்.”
(அல்குர்ஆன் : 7:49)
மேலும், நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் மீது சிறிது தண்ணீரை ஊற்றுங்கள்; அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து சிறிதளவு கொடுங்கள்.” அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்: “திண்ணமாக, அல்லாஹ் இவ்விரண்டையும் சத்தியத்தை மறுத்தவர்களுக்குத் தடைசெய்து விட்டான்.”
(அல்குர்ஆன் : 7:50)
அவர்கள் எத்தகையோர் என்றால் தமது தீனை (நெறியை) வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டார்கள். மேலும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருந்தது! (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம்!”
(அல்குர்ஆன் : 7:51)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக