மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால் மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
(அல்குர்ஆன் : 2:21)
அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான். எனவே, (இவற்றை எல்லாம்) நீங்கள் அறிந்திருந்தும் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
(அல்குர்ஆன் : 2:22)
நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்)!
(அல்குர்ஆன் : 2:23)
நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால், நிச்சயமாக உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது; மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்டதும், (சத்தியத்தை) நிராகரிப்பவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டதுமான நரக நெருப்புக்கு அஞ்சுங்கள்!
(அல்குர்ஆன் : 2:24)
மேலும், (நபியே! இவ்வேதத்தில்) நம்பிக்கை கொண்டு (அதன் அறிவுரைகளுக்கேற்ப) நற்செயல்கள் புரிவோர்க்கு, கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்கள் நிச்சயமாக உண்டு எனும் நற்செய்தியைக் கூறுவீராக! அந்தச் சுவனங்களில் ஏதேனும் ஒரு கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் அக்கனிகள் பூமியிலுள்ள கனிகளைப் போல் தோற்றத்தில் ஒத்திருப்பதால், “இத்தகைய கனிதான் முன்பு (உலகில்) நமக்கு உணவாக வழங்கப்பட்டது” என அவர்கள் கூறுவார்கள். இன்னும் அங்கு அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உண்டு. மேலும், அங்கு அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:25)
நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக் கூறுவார்கள். (இவ்வாறாக) ஒரே விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் பலரை வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்; மேலும் அதனைக் கொண்டு பலருக்கு நேர்வழியும் காட்டுகின்றான். ஆனால் கீழ்ப்படியாதவர்களைத் தவிர வேறு எவரையும் இதனைக் கொண்டு அவன் வழிகேட்டில் ஆழ்த்துவதில்லை.
(அல்குர்ஆன் : 2:26)
அவர்கள் எத்தகையவர்கள் எனில், அல்லாஹ்வுடன் உறுதியான உடன்பாடு செய்துகொண்ட பின்னர் அதை முறித்து விடுவார்கள். மேலும், எந்த உறவு முறைகள் இணைத்து வைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவற்றைத் துண்டிப்பார்கள். மேலும், பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிவார்கள். (உண்மையில்) இத்தகையோரே இழப்புக்குரியவர்களாவர்.
(அல்குர்ஆன் : 2:27)
அல்லாஹ்வை நிராகரிக்கும் போக்கினை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? (உண்மை யாதெனில்) நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) அவனே உங்களுக்கு உயிர் கொடுப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:29)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக