இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கடமை தவறாத சீர்திருத்தவாதி!


ஏதேனும் ஒரு பிரபலம் அல்லது அரசியல் தலைவர் ஒரு ஊருக்கு வந்தவுடன் மழை பெய்தது என்றால் மகராசன், அல்லது மகராசி வந்தவுடன் மழை பொழிகிறது என்று மக்கள் கூறுகின்றனர். அந்தத் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே இவ்வாறு புகழ்ந்து பேசுகின்றனர்.
இதைக் கேட்கின்ற அவர் முகத்தில்தான் எத்தனை பிரகாசம்! பகுத்தறிவு பேசும் தலைவரும், அதை எதிர்க்கும் தலைவரும் இதில் சமமே! தெய்வீக அம்சம் அற்றவர்கள் எனக் கருதப்படும் தலைவருக்கே இந்நிலை என்றால் என்றால் ஆன்மீகத் தலைமைப் பீடத்தில் உள்ளவர்கள் பற்றி கேட்கவா வேண்டும்? அவர்களுக்காக கோவிலே கட்டப்படும், பக்தர்களின் கூட்டம் கூடும் என்பதெல்லாம் நாம் அறிவோம்.

அப்படிப்பட்ட நிகழ்வொன்று இறைவனின் இறுதித்தூதர் வாழ்வில் நடந்த போது என்ன நிகழ்ந்தது என்பதையே இங்கு நாம் காண இருக்கிறோம்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரலி) மூலம் அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும், சில ஆண் குழந்தைகளும் பிறந்தனர். ஆனாலும், ஆண் குழந்தைகள் அனைவரும் சிறு பிராயத்திலேயே மரணித்து விட நான்கு பெண் மக்கள் மாத்திரமே அவர்களுக்கு இருந்தனர்.

மதீனாவுக்கு வந்து அங்கே மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய பின் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தமது பாட்டனார் இப்ராஹீம் நபியின் பெயரை அக் குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தார்கள்.
நான்கு பெண் குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததால் எல்லா தந்தையரும் மகிழ்ச்சியடைவதைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், ஆண் குழந்தையைக் கொடுத்த இறைவன் சிறு வயதிலேயே அக்குழந்தையைத் தன் வசம் எடுத்துக் கொண்டான். பதினாறு மாதக் குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் மகன் இப்ராஹீம் இறந்தார்.
(நூல் : அஹ்மத் )
இக்குழந்தை மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வைத்திருந்த அன்பைப் பின் வரும் ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது…
இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் வீட்டில் நுழைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அல்லாஹ்வின் தூதரே நீங்களுமா? என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது இரக்க உணர்வாகும் என்று கூறி விட்டு மீண்டும் அழுதார்கள். கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் வேதனைப்படுகிறது; எங்கள் இறைவனுக்குப் பிடிக்காத எதையும் நாம் பேச மாட்டோம்; இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம் என்றும் கூறினார்கள்.
நூல் : புகாரி
தமது ஆண் குழந்தை இறந்ததற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு கவலைப்பட்டார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த நாளில் மதீனா நகரில் சூரியக் கிரகணம் ஏற்பட்டது.
சூரிய, சந்திர கிரகணம் எதனால் ஏற்படுகிறது என்ற அறிவு அன்றைய மக்களுக்கு இருந்ததில்லை. உலகில் முக்கியமான யாரோ ஒருவர் மரணித்து விட்டார் என்பதைச் சொல்வதற்கே கிரகணம் ஏற்படுகிறது என்பது தான் கிரகணத்தைப் பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு.
யார் இறந்து விட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் யாரோ ஒரு முக்கியமானவர் மறைந்து விட்டார் என்று நினைத்துக் கொள்வார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்தவுடன் கிரகணம் ஏற்பட்டதால் இப்ராஹீமின் மரணத்திற்காகவே இது நிகழ்ந்துள்ளது என்று மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர்.
மக்கள் பேசிக் கொள்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காதுகளிலும் விழுந்தது.
கடமை தவறாத தலைவர்:
அவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம். இதனால் அவர்களது மதிப்பு உயரும். நபிகள் நாயகத்தின் மகனுக்கே சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்றால் இவர் எவ்வளவு ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டுமென்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படும்.
மக்கள் இது போல் பரவலாகப் பேசிக் கொண்டது தெரிய வந்தாலும் அதைக் கண்டிக்கின்ற மனநிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை.
சாதாரண நேரத்தில் தவறுகளை உடனுக்குடன் தயவு தாட்சண்யமின்றி கண்டிக்கின்ற எத்தனையோ பேர், சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் போது தமது கண் முன்னே நடக்கின்ற தவறுகளைக் கண்டு கொள்ளாது இருந்து விடுவார்கள். தவறைக் கண்டிப்பதை விட முக்கியமான இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போன்ற கவலையில்தான் இருந்தார்கள்.
ஆனால், தமக்கு ஏற்பட்ட மாபெரும் துன்பத்தை விட மக்கள் அறியாமையில் விழுவது தான் அவர்களுக்கு மிகப் பெரிய துன்பமாகத் தெரிகின்றது. உடனே மக்களைக் கூட்டி அவர்களின் அறியாமையை அகற்றுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்) இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள்.
(நூல் : புகாரி)

இது போன்ற நிகழ்ச்சிகள் யாருடைய மரணத்திற்காகவும் ஏற்படாது. யாருடைய பிறப்பிற்காகவும் ஏற்படாது எனக் கூறி தமது மகனின் மரணத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.
===============
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக