இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 ஏப்ரல், 2023

ரமலான்- முடியாட்சியை வீழ்த்திய புரட்சி!

 

 மக்களாட்சிக்கு வித்திட்ட மாமனிதர்!

ரமலான் மாதத்தை ஏன் இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து கொண்டாடுகிறார்கள்?
பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று இது..
ஆம், ரமலான் மாதத்தில் இறங்கிய திருக்குர்ஆனும் அதை தன் முன்மாதிரி வாழ்க்கை மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிய நபிகளாரும் இஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் மூலம் உலகின் அரசியல் நடைமுறைகளை தலைகீழாக மாற்றின!

= மன்னர்களும் மன்னர்களின் பரம்பரைகள் மட்டுமல்ல, திறமையுள்ள எந்தப் பாமரனும் ஆட்சிக் கட்டிலில் ஏறலாம் என்பதை உலகில் முதன்முதலாக விதியாக்கியதும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தியதும் இஸ்லாம்தான்!

= நாடும் மக்களும் நாட்டு வளங்களும் அனைத்தும் மன்னனுக்கே சொந்தம் என்ற எழுதப்படாத விதியையும் ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி!’ என்ற மரபுகளையும் மாற்றி அமைத்தது இஸ்லாத்தின் வரவு!

நாடும் மக்களும் மட்டுமல்ல, உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்றும் மனிதனிடம் தற்காலிகமாக வழங்கப்படுவதே ஆட்சியதிகாரம் என்று அரசியலுக்கு புது இலக்கணம் வகுத்தது இஸ்லாம்.

= ஆட்சி பற்றிய பொறுப்புணர்வு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
= நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)
= நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நபிமொழி நூல்: புகாரி )

அரசனாயினும் ஆண்டியாயினும் அவரவர்க்கு இவ்வுலகில் இறைவனால் வழங்கப்பட்ட பொறுப்புகள் குறித்து மறுமையில் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்ற உண்மையை நினைவூட்டி அதை அரசியலுக்கு அடிப்படையாக்கியது இஸ்லாம்!

நபிகளார் நிறுவிய சமத்துவ அரசாங்கம்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆன்மீகத் தலைமையும் ஆட்சித் தலைமையும் அன்னாரது இறுதிக் காலத்தில் கைவந்தது. அன்றுவரை இருந்து வந்த அரசர்களின் அல்லது ஆட்சியாளர்களின் நடைமுறைகளை இஸ்லாமிய நடைமுறை மூலம் மாற்றிக் காண்பித்தார் நபிகளார்.

= பொதுவாக உலகில் முடியாட்சிகள் எப்படி இருக்குமோ அவ்வாறே அரபு நாட்டு அரசாங்கங்கள் செயற்பட்டுவந்தன. அரசாங்க அலங்காரங்களோடு உயர்ந்த அரண்மனை மாட மாளிகைகளில் சகல வசதிகளோடு தாங்கிய சௌந்தர்ய சிம்மாசனங்களில் பெருமைமிகு பட்டாடைகளை உடுத்திக் கொண்டு உடல் முழுக்க பொன் நகைகளைப் போர்த்திக் கொண்டு பொன்னாலும், வெள்ளியாலும் இழைக்கப்பட்ட இருக்கைகளில் சுற்றி நிற்கும் இளநங்கையர் வீசும் சாமரத்திலிருந்து வெளிப்படும் காற்றை அனுபவித்துக் கொண்டு உல்லாச வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள், அரசவை பிரபுக்களுக்கு செலுத்தப்பட்டு வந்த மரியாதை இஸ்லாம் ஆட்சிக் கட்டில் ஏறியபின் தடுத்து நிறுத்தப் பட்டது.

= அரசவைக்கே அணிகலன்களாக திகழ்ந்த பொன் ஆசனங்களும், வெள்ளி இருக்கைகளும் இல்லாது போயின.

= ஆட்சியாளர்களின் வருகையை கட்டியம் கூறி அறிவிக்கும் நடைமுறையும் பராக், பராக் ஒலி ஓசைகளும் ஒழிந்து போயின.

= ஆட்சியாளரை சந்திக்க வந்துள்ளோரை வடிகட்டுவதற்காக நியமிக்கப் பட்டிருந்த தனி அதிகாரிகள் காணாமல் போயினர்.

= அரசன் விதிப்பதே சட்டம் என்ற நிலைமாறி இறைவன் விதிப்பதே சட்டம் என்ற நிலை அமுலுக்கு வந்தது.

= போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் மற்ற மக்களுக்கு இல்லாத வகையில் தலைவர்களுக்கென்று சிறப்புப்பங்கு இருந்தது. அவை அனைத்தையும் இல்லாதொழித்து ஐந்தில் ஒரு பங்கு என்ற நடைமுறையை இஸ்லாம் கடமையாக்கியது.

= பொது அவைகளில் தலைவர்களுக்கு முன்னால் வெளிப்படையாக மக்கள் பேசுவதற்குக்கூட சுதந்திரம் இல்லாமல் இருந்தது. ஆனால் இக்குறையைப் போக்க ஆட்சித் தலைவரும் அவருடைய அதிகாரிகளும் பொதுமக்கள் எளிதாகச் சந்தித்துக் கொள்ளும் பள்ளி வாசல்களையே தங்களுடைய செயலகங்களாக ஆக்கிக் கொண்டனர்.

அந்த காலகட்டத்தில் ஆட்சியாளர்களும், மன்னர்களும் அரசவையை சார்ந்தவர்களும் பொதுமக்களுக்கு மட்டுமல்ல எந்த சட்டத்திற்கும் எட்டாத தூரத்தில் இருந்தார்கள். சட்ட நெறிமுறைகள் அவர்களை ஒரு போதும் கட்டுப்படுத்தாது. ஆனால், இங்கு பார்த்தால் இறைத்தூதர் இடத்திலும் அவருடைய வீட்டார்களிடத்திலும் தான் முதன் முதலில் சட்டம் செயல்படத் தொடங்கும். இறைத்தூதரின் வீட்டைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு தவறை செய்து விட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை கிடைக்கும் என்று இறைவன் கட்டளையே பிறப்பித்திருந்தான்.

உலகெங்கும் வல்லரசுகள் கோலோச்சிக் கொண்டிருந்த வேளையில் பிற்காலத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் தங்களால் இயன்றவரை அந்த அழகிய முன்மாதிரியையே பின்பற்றினர்.
==================
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக