இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 ஜனவரி, 2025

இளைஞர்களை சீர்திருத்த இஸ்லாம் கூறும் வழிகள்!

 

வழிகேட்டுக்கான காரணங்கள்:

இளைஞர்கள் வழிகெடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாகக் கீழ்கண்டவற்றை நாம் கூறலாம்:

அ) கடவுள் மறுப்பு கலந்த கல்வி. ஒழுக்கம் பேணுவதற்கு அடிப்படையான கடவுள் கொள்கை, மறுமை, நீதி, நியாயம் போன்ற விழுமியங்கள் புறக்கணிப்பு. 

ஆ) தன்னைத் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ யாரும் இல்லை என்ற தைரியம் அம்மக்களிடையே பெருகி வருவது.

இ)  குற்றங்களைப் பற்றிய வெட்க உணர்வு மழுங்கி வருவது.  தீமைகளைக் காண்போர் அவற்றை சொல்லாலோ செயலாலோ தடுக்காமல் இருப்பது அத்தீமைகளுக்கு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது.

ஈ) சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை மக்கள் சொந்த மனோ இச்சைப்படி முடிவு செய்வதால் அவரவர் செய்யும் தவறுகளையும்  நியாப்படுத்தும் போக்கு. சட்டங்களில் ஓட்டைகள்.

சீர்திருத்த நடவடிக்கைகள்:

இளைஞர்களை சீர்திருத்த வேண்டுமானால் கீழ்கண்டவை நடைபெறவேண்டும்:

அ) முதற்கண் மனித மனங்களை சீர்திருத்த வேண்டும். அவற்றிற்கு வாழ்க்கையின் முக்கியமான உண்மைகளை உணர்த்தி அவற்றை நல்வழிப்படுத்த வேண்டும். 

ஆ) சீர்திருத்தக் கருத்துக்களை வெறும் போதனைகளோடு நிறுத்திவிடாமல் அன்றாட வாழ்வில் அவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யவேண்டும். 

இ) அவ்வாறு திருந்துவோர் கட்டுப்பாட்டோடும் பொறுப்புணர்வோடும் வாழ்வதற்கு   ஒருவருக்கொருவர் உறுதுணையாக இயக்கமாக செயல்பட வேண்டும். சமூக உறவுகள் வலுப்பட வேண்டும்.

ஈ) சரி எது தவறு எது, பாவம் எது புண்ணியம் எது, நியாயம் எது அநியாயம் எது என்பவற்றை வரையறுக்கும் தெளிவான உறுதியான அளவுகோல் அல்லது சட்டங்கள் தேவை.  

உ) தீமைகள் மீண்டும் சமூகத்தில் ஊடுருவாமல் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் நம்மைப் படைத்த இறைவன் வழங்கும் வாழ்வியல் கொள்கையான இஸ்லாம் நிறைவு செய்வதை ஆராய்வோர் அறியமுடியும்.

இஸ்லாம் மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகள்:

மேலே குறிப்பிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை இஸ்லாம் எவ்வாறு மேற்கொள்கிறது என்பதை ஒவ்வொன்றாகப் பாருங்கள்:

 அ) சிறுவயதிலிருந்தே இறைவேதம் திருக்குர்ஆன், மற்றும் நபிமொழிகள் மூலம் முறையான ஆன்மீகக் கல்வி வழங்கல். அதாவது இறைவனின் வல்லமை, உள்ளமை மற்றும் மறுமை வாழ்வு பற்றிய உண்மைகள் - பகுத்தறிவு பூர்வமாக இளைய உள்ளங்களில் விதைக்கப் படுகிறது. குறிப்பாக ஆங்காங்கே பள்ளிவாசல்களை ஒட்டிய மதரசாக்கள் மூலம் இது நடத்தப் படுகிறது.

ஆ) தொழுகை ஜகாத் போன்றவை இஸ்லாத்தில் கட்டாயக் கடமைகள். ஐவேளைத் தொழுகைகள் மூலம் கற்ற கல்வி அன்றாடம் நினைவூட்டப்படுவதால் சதா மனிதனுக்குள் இறை உணர்வு இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக பாவச்செயல்களில் இருந்து தூரமாக்கப் படுகிறான். தொடர்ந்து இஸ்லாம் கற்பிக்கும் மறுமைக் கொள்கை மனிதனை ஜகாத், தானதர்மங்கள், பிறர் நலன் நாடுதல் போன்ற பல நற்செயல்களுக்கு தூண்டுபவையாக உள்ளன.

இ) மேற்படி தொழுகைகளை கூட்டாக நிறைவேற்ற இஸ்லாம் ஊக்குவிக்கிறது. இதன் மூலம் தொழுகையாளிகள் ஐவேளையும் பள்ளிவாசல்களில் அடிக்கடி சந்திப்பதும் நலன் விசாரிப்பதும் நட்பு பாராட்டுவதும் கூட்டுறவும் வழக்கமாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக பாவங்களில் இருந்து மீண்டு திருந்திய வாழ்வு வாழ முற்படுபவர்கள் மீண்டும் பாவங்கள் பால் போகாதிருக்கும்படி பாதுகாக்கப் படுகிறார்கள்.

ஈ) இஸ்லாமிய வரைமுறைகள், சட்டங்கள் இறைவேதம் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டவை. மனிதர்கள் இயற்றும் சட்டங்களுக்கு உள்ள பலவீனங்கள் இவற்றுக்கு இல்லை.

உ) தீமைகள் சமூகத்தில் ஊடுருவாமல் இருக்க மது, போதைபொருள் உபயோகம், திருட்டு, விபச்சாரம், கொலை, போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை அரசாங்கங்களுக்கு இஸ்லாம் பரிந்துரைக்கிறது. 

=================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக