இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஏப்ரல், 2023

அந்தோ! அதனை (இன்றே) அவர்கள் உணர்ந்து கொண்டால் எத்துணை நன்றாயிருக்கும்!

உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை;
(அல்குர்ஆன் : 2:163)
(இந்த உண்மையை அறிந்துகொள்ள சான்று வேண்டுமாயின்) வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்குப் பயன் தருபவற்றைச் சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதைக்கொண்டு பூமியை அது இறந்து போன பின்னர்கூட உயிர்ப்பித்து மேலும் (தனது இந்த ஏற்பாட்டின் மூலம்) அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளைச் சுழலச் செய்வதிலும், வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 2:164)

(ஆனால் இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவுபடுத்தும் இத்தகைய தெளிவான சான்றுகள் இருந்தும்) மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் (அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள். மேலும், அல்லாஹ்வை எவ்வாறு நேசிக்க வேண்டுமோ அது போல அவர்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இறைநம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை அனைவரையும்விட அதிகமாக நேசிக்கிறார்கள். ஆற்றல் முழுவதும் அல்லாஹ்வின் பிடியிலேதான் இருக்கிறது; மேலும், அல்லாஹ் கடுமையாக தண்டனை கொடுப்பவன் என்பதை இந்த அக்கிரமக்காரர்கள் வேதனையை (நேரில்) காணும்போது அறியத்தான் போகின்றார்கள்! அந்தோ! அதனை (இன்றே) அவர்கள் உணர்ந்து கொண்டால் எத்துணை நன்றாயிருக்கும்!
(அல்குர்ஆன் : 2:165)

(தண்டனை வழங்கப்படும்) அந்த நேரத்தில், (இவ்வுலகில்) பின்பற்றப்பட்டு வந்த (வழிகாட்டிகள் மற்றும் தலை)வர்கள் தம்மைப் பின்பற்றி வந்தோரை விட்டு (அவர்களுக்கும் தமக்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை என்று கூறி) விலகி விடுவார்கள். ஆயினும் அவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்! மேலும் அவர்களுக்கிடையே இருந்த எல்லா உறவுகளும் முற்றிலும் அறுந்துவிடும்!
(அல்குர்ஆன் : 2:166)

அப்பொழுது அத்தலைவர்களைப் பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால், இன்று நம்மைவிட்டு அவர்கள் விலகிக் கொண்டது போல நாமும் அவர்களை விட்டு விலகிக் கொள்வோமே!” இவ்வாறு வேதனையாலும், துக்கத்தாலும் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கும் வகையில் அவர்கள் (இவ்வுலகில்) செய்த தீய செயல்களை அல்லாஹ் அவர்களுக்குக் காண்பித்துக் கொடுப்பான். மேலும், நெருப்பிலிருந்து (எவ்வகையிலும்) அவர்கள் வெளியேறிவிட முடியாது.
(அல்குர்ஆன் : 2:167)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக