பாலியல் குற்றங்களின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, இந்த சமூகம் பெண்களின் மீது கொண்டுள்ள தவறான பார்வை. நமது சமூகம் பெண்களை ஒரு போகப் பொருளாகவும், அற்பமானவளாகவுமே பார்க்கிறது கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவளை களங்கப்பட்டவளாகப் பார்க்கும் இந்த சமூகத்தின் பார்வை மாறவேண்டும். தலைகுனிவும், குற்ற உணர்வும், அவமானமும் எவன் இக்குற்றத்தைப் புரிந்தானோ அவன்தான் பெற வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவள் அல்ல. தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்களின் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க, நாம் முதலில் நமது சமூகம் பெண்களின் மீது கொண்டுள்ள தவறான பார்வையை மாற்ற வேண்டும்.
பெருமதிப்புக்குரியது பெண்ணினம் என்ற உண்மையை சமூகம் உணரவேண்டும்.
குடும்பங்களே சமூக அமைப்பின் ஊற்றுக்கண்கள் எனபதையும் அதில் பெண்கள்தான் மனித இனத்தின் விளைநிலங்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதில் உருவாகும் குழந்தைகள் எவ்வளவு நல்லோழுக்க்கத்தொடும் கட்டுப்பட்டோடும் வளர்கிறார்களோ அதைப் பொறுத்தே சமூகமும் ஒழுக்கமுள்ளதாக அமையும். சமூக வாழ்விலும் அமைதி நிலவும். தாய்மை என்ற புனிதமான பொறுப்பு பெண்கள் மீதுதான் சார்ந்திருப்பதால் அதைப் பாதுகாப்பதும் அவசியம் அதை மதிப்போடு நடத்துவதும் அவசியம்.
பெண்களுக்கு மதிப்பு அளிக்கவும் மரியாதை செய்யவும் கற்றுக்கொடுக்கிறான் இறைவன். பெண்களுக்கு உரிமைகளையும், கண்ணியத்தையும் உரிய முறையில் வழங்க தனது வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் நீங்கள் காணலாம்.
பெண்குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதம்
பெண் குழந்தை பிறந்தால் இழிவாகக் கருதும் பெற்றோர்களிடம்தான் பெண்ணை இழிவு படுத்தும் செயல் முதன் முதலில் துவங்குகிறது. திருக்குர்ஆனில் இறைவன் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறான்.:
= இவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி சொல்லப்பட்டால், அவரது முகத்தில் கருமை கவ்விக் கொள்கின்றது! துக்கத்தால் அவர் தொண்டை அடைத்துக் கொள்கிறது..இந்தக் ‘கேவலமான’ செய்தி கிடைத்துவிட்டதே என்பதற்காக இனி யார் முகத்திலும் விழிக்கக்கூடாது என்று மக்களைவிட்டு ஒதுங்கிச் செல்கின்றார். அவமானப்பட்டுக் கொண்டு அப்பெண் குழந்தையை வைத்திருப்பதா அல்லது அதனை மண்ணில் புதைத்து விடுவதா என்று சிந்திக்கின்றார் பாருங்கள்! இறைவனைப் பற்றி இவர்கள் எடுத்த முடிவு எத்துணைக் கெட்டது!" - (திருக்குர்ஆன் 16:58,59).
பெண் குழந்தை என்றால் இழிவு எனக் கருதி அவர்களை உயிருடன் புதைக்கும் பழக்கம் அங்கு அராபியர்களிடம் இருந்து வந்தது. குழந்தைகளை கொலை செய்வதை குறிப்பாக பெண்குழந்தைகளை கொல்வதை கடுமையாக எச்சரித்து தடுத்தது. அதனை மறுமை வாழ்வுடன் தொடர்புபடுத்தி அச்சமூட்டுகிறான் இறைவன்:
= 'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)
பெண்களுக்கு அனைத்திலும் உரிமை
ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் இயற்கைக்கும் ஏற்றவாறு இறைவன் உரிமைகளும் கடமைகளும் வழங்கியிருப்பதை நீங்கள் காணமுடியும்: எந்த பெண்ணுரிமை அமைப்புகளும் போராடமலேயே கீழ்கண்ட உரிமைகளை இஸ்லாமிய பெண்கள் பதினான்கு நூற்றாண்டுகளாக அனுபவித்து வருவதை நீங்கள் காணலாம்:
# படிப்பதற்கு உரிமை,
# பொருள் சேர்க்கும் உரிமை. தான் சம்பாதித்ததை தானே வைத்துக்கொள்ளும் உரிமை.
# மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை
# வரதட்சணைக்கு நேர்மாற்றமான மஹர் (வதுதட்சணை) பெறும் உரிமை,
# விவாக ரத்து உரிமை
# பெற்றோர், கணவன், சகோதரன், மகன் இவர்களின் சொத்துகளில் இருந்து வாரிசுரிமை.
மட்டுமல்ல கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோருக்கு கடுமையான தண்டனைகள், முதிய வயதில் பராமரிக்க மறுக்கும் பிள்ளைகளுக்கு கடுமையான எச்சரிகைகள் இவை போன்ற பல நடவடிக்கைகள் மூலம் பெண்ணினத்தின் கண்ணியத்தையும் தன்னம்பிக்கையையும் இஸ்லாம் பாதுகாப்பதை நாம் காணலாம்.
இல்லறத்தில் சம உரிமை
= "அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்." – (திருக்குர்ஆன் 2:187)
= "உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் அவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி! நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே!" – (திருக்குர்ஆன் 3:195)
= "பெண்களைக் குறித்து இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு அவர்களின் மீது சில உரிமைகள் உள்ளன, அவ்வாறே அவர்களுக்கும் உங்களின் மீது சில உரிமைகள் உள்ளன" – நபிமொழி
= "உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியிடத்தில் சிறந்தவரே" – நபிமொழி
அதாவது யார் பெண்களிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்கிறாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்பதை மிக அழகாக இங்கு போதிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக