அன்று – அதாவது பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் - அரபு நாட்டில் பெண்குழந்தை என்றாலே இழிவு என்று சொல்லி பிறந்த உடனேயே புதைத்து மூடினார்கள். ஒரு சிலர் வளர்ந்த பிறகும் கூட அவர்களை ஈவிரக்கமின்றி குழி தோண்டிப் புதைத்தார்கள். அந்த அளவுக்கு பெண்கள் மீது கருணை என்பதே இல்லாமல் கல்லாக இறுகி இருந்தது அம்மக்களின் மனம். அந்தக் கற்களை எவ்வாறு கரைய வைத்தார்கள் நபிகளார்?
மனமாற்றம் ஒன்றே மாற்றத்திற்கான வழி
சமூகத்தில் பொதுவாக பாவங்கள் பெருகுவதற்கும் பாவங்களில் மக்கள் நிலைத்து இருப்பதற்கும் மூடநம்பிக்கைகளில் காலாகாலமாக மூழ்கி இருப்பதற்கும் முக்கியமான காரணமாக இருப்பது படைத்தவனின் உள்ளமையும் வல்லமையும் பற்றி உணராமல் இருப்பதும் இந்த உலகம்தான் எல்லாமே, இதற்கப்பால் ஒன்றுமே இல்லை என்ற குறுகிய சிந்தனையும்தான். இதன் விளைவாக தான் எதைச் செய்தாலும் தனக்கு மேலே தட்டிக் கேட்க யாருமில்லை என்ற அறியாமை உணர்வு மேலிடுகிறது. அப்படிப்பட்ட உணர்வில் திளைத்து இருந்த மக்களிடையே உண்மை இறைவனைப் பற்றியும் வாழக்கையின் நோக்கத்தைப் பற்றியும், இந்தத் தற்காலிக பரீட்சை வாழ்க்கை பற்றியும் இறுதித்தீர்ப்பு நாள் பற்றியும் மறுமையில் வரவுள்ள சொர்க்கம் நரகம் பற்றியும் பகுத்தறிவு பூர்வமாக – இறைவேதம் திருக்குர்ஆனின் துணையோடு- போதித்தார்கள்.
நபிகளாரின் சீரிய போதனைகள்:
சிலை வணக்கத்தில் மூழ்கி இருந்த மக்களுக்கு படைத்த இறைவனை பற்றிய பகுத்தறிவு பூர்வமான அறிமுகத்தை வழங்கி அவர்களை சீர்திருத்தினார்கள்.
= சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
ஏகனான, தன்னிகரற்ற, ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனின் வல்லமையையும் உள்ளமையையும் போதித்ததோடு இந்த தற்காலிக வாழ்க்கைக்கு பிறகு இங்கே நாம் செய்த ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடம் மறுமையில் விசாரணையும் அதற்கு அதற்கேற்ப வெகுமதியும் தண்டனையும் உண்டு என்ற உணர்வை ஊட்டினார்கள்:
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார்கள்.
மறுமை வாழ்க்கை பற்றிய சந்தேகம்:
ஆயினும் இறந்தபின் மீண்டும் உயிரோடு வருவோம் என்பதில் அம்மக்கள் சந்தேகத்திலேயே நீடித்தார்கள். மண்ணோடு மண்ணாகி மக்கிப்போன எலும்புகளையெல்லாம் கொண்டுவந்து இவையெல்லாம் மீண்டும் உயிரோடு வர முடியுமா என்று கூறி எள்ளிநகையாடினார்கள். அப்போது இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வசனங்களே கீழ்கண்டவை:
= மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 36:77-79)
இன்னும் இவைபோன்ற திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் இறைவனின் வல்லமையைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் மக்கள் தெளிவு பெற்றார்கள்.
இறைவனின் ஏவல்- விலக்கல்கள்
தொடர்ந்து இறைவன் வழங்கும் வாழ்வியல் நெறிப்படி வாழவேண்டியதை வலியுறுத்தினார்கள் நபிகளார். இறைவனுக்கு சொந்தமான இவ்வுலகில் நாம் அவனுக்குக் கீழ்படிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை. ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான தண்டனையைப் பெறாவிட்டாலும், மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.
குழந்தைகளைக் கொல்வது பாவம்!
= கண்ணுக்குத் தெரியும் உயிராயினும் தெரியாத உயிராயினும் சரி பெரிதாயினும் சிறிதாயினும் அவற்றை அநியாயமாக நோவினை செய்தாலோ அல்லது கொன்றாலோ அது இறைவனிடம் பாவமே! மறுமை நாளில் அதற்கான விசாரணை உண்டு. அந்த வகையில் சிசுக்கொலைகளுக்கும் தண்டனை உண்டு என்று இறைவன் எச்சரிக்கிறான்
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (திருக்குர்ஆன் 17:31)
இன்று உயிரோடு புதைக்கப்பட்ட பெண்குழந்தைகள் மறுமை நாளில் உயிரோடு வருவார்கள் என்ற இறைவசனங்களை அம்மக்களுக்கு நினைவூட்டினார்கள் நபிகளார். அவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே அவர்களின் பெற்றோர்கள் செய்த குற்றத்திற்கு சாட்சியாக நிற்பார்கள் என்றார்.
= உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று- (திருக்குர்ஆன் 81:7-9)
பெண்குழந்தைகளை வளர்ப்போருக்கு நற்செய்தி:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு இறைவன் வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள்: "வீட்டில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" பின்னர் அக்குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள். மேலும் அதன் தலை மீது கரங்களால் தடவியவாறு கூறுகின்றார்கள் "இது ஒரு பலவீனமான ஆன்மாவாகும். இக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரையில் இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்" அறிவிப்பாளர்: நபித்இப்னு ஷுரைத் (ரலி) ஆதாரம்: அல்முஅஜமுஸ் ஸகீர்
‘எவருக்கு பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து
பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சொர்க்கம் கடமையாகி விட்டது’ என்றார் நபிகளார்
(ஆதாரம்:அஹ்மத்)
பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும்போது அதுவே இம்மையில் தொடர்ந்து இறை உதவி கிடைப்பதற்கும் மறுமையில் நாம் சொர்க்கம் செல்வதற்கும் காரணமாகி விடுகிறது என்பதை மக்களுக்குப் புரியவைத்தார்கள்.
==================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக