இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 நவம்பர், 2021

அவரது சாதனைகளுக்கு நிகராகுமா எதுவும்?


 அநியாயங்களுக்கு விருதுகள் வழங்குவோரும் ஒத்து ஊதும் ஊடகங்களும்:

ஆண்டு தோறும் நாடுகள் தோறும் அற்பமான சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்குக் கூட அரசுகள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கவுரவிப்பதை அவ்வப்போது கண்டு வருகிறோம். இன்னும் பலரை அவர்கள் இறந்து ஆண்டுகள் பல கழிந்தும் அரசுகள் நாட்டின் உயர்விருதுகள் வழங்கி கவுரவிப்பதையும் காணலாம். அதிலும் குறிப்பாக சினிமாவில் அட்டைக் கத்தி வீரர்களுக்கும் திரையில் அப்பட்டமாக விபச்சார சாகசங்கள் நிகழ்த்தி கலாச்சார சீரழிவை நிகழ்த்துவோருக்கும் மக்களின் வரிப்பணங்களில் இருந்து அரசுகள் வழங்கும் கவுரவமும் அலாதியானவை. இவர்களுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் வியப்புக்குரியவை! அந்த “சாதனையாளர்களைப்” பற்றி பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்தி சேனல்களும் யூடியூபர்களும் எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் வாரம் வாரமாக நீட்டி முழக்குவதை நாம் காண்கிறோம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிகழ்த்திய – நூற்றாண்டுகளாக நிகழ்த்திக் கொண்டு இருக்கின்ற – பயனுள்ள சாதனைகளுக்கு இணையான எதையும் ஊடகங்களால் காட்ட இயலுமா? மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் அவர் புரிந்த மற்றும் தொடர்ந்து புரிந்து வருகின்ற சாதனைகள் ஈடிணையற்றவை. ஒரு சிறு உதாரணமாக கீழ்கண்ட விடயத்தைப் பாருங்கள்:

சர்வசாதாரணமான பெண் கருக்கொலைகள்:
= 2020 வருட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை 2013 முதல் 2017 வரை ஒவ்வொரு ஆண்டும் 4.6 லட்சம் சிறுமிகள் பிறக்கும்போது “காணவில்லை” (missing at birth) என்று கூறுகிறது. அதாவது அவை கருவிலேயே கொன்றொழிக்கப் படுகின்றன என்பது இதன் பொருள்! இதற்குக் காரணம் பாலியல் தேர்வின் விளைவாக ஆண் குழந்தையை பெறுவதை மக்கள் விரும்புவதும் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பதுமே! கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் இவ்வாறு "காணாமல்" போயுள்ளார்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் பாலியல் தேர்வு சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆயினும் இடையறாது நிகழ்கிறது இக்கொடுமை!
= உலக மக்கள் தொகை அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் உலகளவில், "காணாமல் போன" பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 14.2 கோடி என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (United Nations Population Fund) கூறியுள்ளது. (ஆதாரம்: UN’s World Population Report, 2020 says 4.6 crore women are ‘missing’ in India due to sex selection (scroll.in)
ஆனால் உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள் – அதாவது இஸ்லாமியர்கள் - இக்கொடுமையை நிகழ்த்தாமல் தங்களைத் தாங்களே தடுத்து வருகிறார்கள் என்பது நபிகளாரால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் சாதனை அல்லவா?

இவ்வாறு  இஸ்லாம் வழங்கிவரும் பெண்ணுரிமைகள் காரணமாக 

-    உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்சிசுக்களும் கருக்களும் கொல்லப்படாமல் தடுக்கப்பட்டு உயிர்வாழ்ந்து வருவதும் பெற்றோர் அரவணைப்பில் வளர்ந்து வருவதும்..   

-    உலகங்கும் கோடிக்கணக்கான பெண்கள் வரதட்சணைக் கொடுமையில் இருந்து காப்பாற்றப்படுவதும்.. அதற்கு எதிரான மஹர் என்ற வதுதட்சனை பெற்று மணமுடிப்பதும்... 

-    உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் முதியோர் இல்லங்களுக்கு விரட்டப்படாமலும் கருணைக் கொலைக்கு உட்படுத்தப்படாமலும் தங்கள் பிள்ளைகள் அரவணைப்பில் வாழ்ந்து வருவதும்..

-    உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் குடிகார ஆண்களின் அடிக்கும் குத்துக்கும் சித்திரவதைக்கும் ஆளாகாமல் வாழ்வதும்..

-    உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் பெண்ணுடலை வேட்டையாடி தூக்கி எறிந்துவிட்டு செல்லும் காம வெறியர்களுக்கு பலியாகாமல் இருப்பதும், அந்நியனின் கருவை அநியாயமாக சுமந்து சீரழியாமல் இருப்பதும்..

-    உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை, போன்று ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெற்று வாழ்வதும்.. எல்லாம் அந்த மாமனிதர் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திச் சென்ற இஸ்லாம் என்ற சித்தாந்தத்தின் விளைவே!

இப்படிப்பட்ட ஒரு புரட்சி சித்தாந்தத்தை வழங்கி அவற்றைப் பின்பற்றி வாழும் உலகளாவிய ஒரு சமூகத்தை உருவாக்கி அதன்மூலம் பெண்ணினத்தின் உரிமைகளை நிலைநாட்டிய  எவராக இருந்தாலும் அவர் கவுரவிக்கப்பட வேண்டியவர்தானே? 

அவர் இவ்வுலகில் இருந்து மறைந்து பதினான்கு நூற்றாண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அதே புரட்சி தொடர்கிறது என்றால் எப்பேர்பட்ட கவுரவத்திற்கு உரிய மனிதர் அவர் என்பதை கற்பனை செய்து பார்க்கலாம்.

ஆனால் அந்த மாமனிதருக்கு அரசுகளோ ஊடகங்களோ உரிய கவுரவம் கொடுப்பதோ மரியாதை செய்வதோ நினைவுகூரல் நடத்துவதோ எதுவுமே இல்லை. மட்டுமல்ல, அவர் மனிதகுலத்துக்கு குறிப்பாக பெண்ணினத்துக்கு செய்த சாதனைச் சேவைகளைக் குறித்து மூச்சு விடுவதும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பள்ளிக்கூட பாடப்புத்தகங்களிலும் கூட அவரைப் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளதை நீங்கள் காணலாம்.


இந்த பாரபட்சமான போக்குக்கு என்ன காரணம்?

இதற்கு முக்கிய காரணம், நபிகளார் அறிமுகப்படுத்திய இஸ்லாம் அனைத்து  தீய சக்திகளுக்கும் எதிரானது. இஸ்லாமின் பரவல் உலக மக்களைப் பிரித்தாண்டு அவர்களின் வளங்களையும் உழைப்பையும் சுரண்டி வாழும் ஆதிக்க சக்திகளுக்கும் பாசிச மதவாத சக்திகளுக்கும் தடையாக உள்ளதால் அதன் வளர்ச்சியை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்கிறார்கள். மட்டுமல்ல இஸ்லாத்தை தீவிரவாதமாகவும்  இஸ்லாமியர்களை தீவிரவாதமாகவும் தங்கள் கைப்பாவை ஊடகங்கள் மூலம் சித்திரிக்கிறார்கள். 

ஆனால் இஸ்லாம் இவ்வுலகைப் படைத்தவன் வகுத்து வழங்கிய வாழ்வியல் கொள்கை. அது யார் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் மென்மேலும் மெருகோடு பரவவே செய்யும். படைத்தவனே இதைப் பற்றி கூறுகிறான் கேளுங்கள்:

'தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதிஅணைத்துவிட அவர்கள்  விரும்புகின்றார்கள். ஆனால் சத்தியமறுப்பாளர்கள்  வெறுத்த போதிலும் இறைவன்  தன் ஒளியை  பூர்த்தியாக்கி  வைக்காமல் இருக்க மாட்டான்.' (திருக்குர்ஆன் 9:32)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

மேலும் இஸ்லாம் என்ற இறைவனின் அருட்கொடையை மக்களிடம் இருந்து இருட்டடிப்பு செய்யும் அரசாள்வோரும், ஆதிக்க வாதிகளும் அவர்களின் அடிமையாக செயல்படும் ஊடக செயல்பாட்டாளர்களும் இறைவனின் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கிறது திருக்குர்ஆன்:

= அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) சத்திய மறுப்பாளர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,? (திருக்குர்ஆன்  29:68) 

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக