இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 நவம்பர், 2021

காமுகனே கொஞ்சம் நில்!



பலவந்தமாக நடத்தப்படுவதோ அல்லது சூழல் காரணமாக நடப்பதோ எந்த வகை  கற்பழிப்பாகவோ இருக்கட்டும். ஒரு பெண்ணை முழுமையாக அடையும் வாய்ப்பு உங்களுக்கு வாய்த்துவிட்டது என வைத்துக் கொள்வோம். நீங்களும் அந்தப் பெண்ணும் மட்டும் தனிமையில் இருக்கிறீர்கள்.  அவளின் பெற்றோரோ உடன்பிறப்புக்களோ, உறவினர்களோ காவல் துறையோ அல்லது வேறு ஏதேனும் கண்காணிப்போ என எதுவுமே அங்கு இல்லை. உங்கள் இச்சையை நிறைவேற்ற எந்தத் தடையும் அங்கு இல்லை. இன்னும் அந்தப் பெண்ணே கூட உங்களுக்கு முழு சம்மதம் தெரிவிக்கிறாள் என்றே எடுத்துக் கொள்வோம். இன்னும் ஒருபடி மேலே போய் அந்தப் பெண்ணே உங்களை காமத்துக்குத் தூண்டுகிறாள் என்றே கூட வைத்துக் கொள்வோம்.

இப்படிப்பட்ட சூழலில் அப்பெண்ணை அனுபவிப்பதில் தவறேதும் இல்லை, தடையேதும் இல்லை என்று நினைக்கிறீர்களா? உங்களுக்குள் எழுந்துள்ள காமவெறி அல்லது காமுகன் என்ற ஷைத்தான் உங்களை அவ்வாறு எண்ணவைப்பான். முக்கியமான உண்மைகளை மறக்கடித்துவிடுவான்.

அவை யாவை? அவற்றை நீங்கள் நிதானத்தில் இருக்கும்போதே சிந்தித்து உணர்ந்தால் மேற்கொண்டு இக்குற்றச்செயலை செய்யத் துணியமாட்டீர்கள்!

உங்களை அறியுங்கள்:

1.முதலில் நீங்கள் யார்? உங்களது நிலை என்ன என்பன பற்றி அறியுங்கள்:

-    இம்மாபெரும் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு அற்பத்திலும் அற்பமான துகள் போன்றவர் நீங்கள்.

-    இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட உங்களுக்கு பங்களிப்பு இல்லை.

-    மட்டுமல்ல நீங்கள் என்னுடையது என்று சொல்லிக்கொள்ளும் உங்கள் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே உங்களுடையது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக உங்கள் கைவசம் இல்லை.

-     நீங்கள் இங்கு வருவதும் போவதும் - அதாவது உங்கள் பிறப்பும் இறப்பும் உங்கள்  விருப்பப்படி நடப்பது அல்ல.

-    உங்களை மீறிய உங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது என்பதை மறுக்க மாட்டீர்கள். அந்த சக்தியையே தமிழில் இறைவன் அல்லது கடவுள் என்கிறோம். அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறுகிறோம்.

இவ்வுலக வாழ்க்கையை அறியுங்கள்:

2. அந்த இறைவன் இந்தக் குறுகிய தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளான். இதில் இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வெல்பவர்கள் மறுமையில் சொர்க்கத்தை நிரந்தர வாழ்விடமாக அடைகிறார்கள்.  இதில் தோல்வி அடைபவர்கள் நரகத்தை அடைகிறார்கள்.

சாட்சிகளுக்குப் பஞ்சமில்லை

3. நீங்கள் செய்யவிருக்கும் செயலுக்கு உங்கள் இருவரைத்தவிர சாட்சிகள் ஏதும் இல்லையென்று நீங்கள் கருதலாம். ஆனால் அது தவறு.  இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் அவற்றின் பார்வையில் படும் நிகழ்வுகளை பதிவு செய்வதை நாம் அறிவோம். அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை மட்டுமல்லநமது காதுகளும் தோல்களும் அதுபோலவே பதிவு செய்கின்றன என்றும் அவை மறுமையில் மனிதனுக்கெதிராக சாட்சி கூறும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது:

= தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையாமேலும் நாவையும்இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7-9 )

=மேலும்இறைவனின்  பகைவர்கள் (நரகத்)தீயின்  பால்  ஒன்று  திரட்டப்படும்  நாளில்அவர்கள் ( தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.   இறுதியில்அவர்கள் (அத்தீயை) அடையும்  போதுஅவர்களுக்கு எதிராக   அவர்களுடைய காதுகளும் அவர்களுடைய  கண்களும்அவர்களுடைய  தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை  பற்றி சாட்சி  கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)

ஏன் பாவம்?

4. இவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் சமூக நலன் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு கருதி இங்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று தனது  வரையறைகளை வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் அவ்வப்போது அறிவித்துள்ளான். அந்த வரிசையில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் அவர்களின் மொழிகளும் அவர் மூலமாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆனும் அந்நிய ஆண்- பெண் உறவின் வரையறைகளை அறிவிக்கின்றன. அதன்படி 

= தாம்பத்தியம் அல்லது உடலுறவு  என்பதை  திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது.

.= ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

=  ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் உடலுறவு கொள்வது பெரும் பாவமாகும். கற்பழிப்பு அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான கசையடிகள் மற்றும் சாகும் வரை கல்லால் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.

அந்தப் பெண் யார்?

5. அடுத்ததாக நீங்கள் அனுபவிக்க உள்ள பெண்ணைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள்:

= அவள் யாருக்கேனும் மகளாக அல்லது சகோதரியாக அல்லது மனைவியாக அல்லது தாயாக இருக்கக்கூடும். உங்கள் மகளிடம் அல்லது சகோதரியிடம் அல்லது மனைவியிடம் அல்லது தாயிடம் நீங்கள் செய்ய நினைத்த காரியத்தை வேறு யாராவது அந்நியன் செய்வதை விரும்புவீர்களா?

 மீறினால் என்ன நடக்கும்?

இனி மேற்கூறப்பட்ட வரம்புகளையெல்லாம் மீறி விட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்து எறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நீங்கள் நடந்து கொள்ளலாம். காவல்துறை அல்லது நீதிமன்றத்தை சரிக்கட்டி தண்டனையேதும் பெறாதவாறு தப்பிக்கவும் செய்யலாம்.  ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் மூளையிலும் அதன் பதிவைக் காணலாம்! இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று உங்களுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும்.

= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)

= எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)

விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.

அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.

= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30)

.....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘ (திருக்குர்ஆன் 18:29)  

எந்த உடலைக்கொண்டு அனைத்து அட்டூழியங்களையும் நிகழ்த்தினீர்களோ அதன் கதி நாளை இதுதான்! இது நூறு சதவீத உண்மை! இது வேண்டுமா? சிந்தியுங்கள்! இன்றே திருந்தி உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள்! உங்கள் வாழ்க்கையை சீர்திருத்திக்கொள்ளுங்கள்!

= நபியே!) கூறுவீராக: தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக, அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். (திருக்குர்ஆன் 39:53)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

அவ்வாறு சீர்திருந்தி இறைவனுக்குப் பொருத்தமான வாழ்வை வாழ்ந்து செல்வோருக்கு மறுமையில் சொர்க்கச் சோலைகளும் காத்திருக்கின்றன.

================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக