இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 ஏப்ரல், 2014

பகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்!

பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை  பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி 34 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் மெய்ப்பொருள் இயல் பேராசிரியராகப் பணி ஆற்றினார்.
டாக்டர் அம்பேத்கருடைய அனைத்து நூல்களையும் தந்தை பெரியாரின் எழுத்துகளையும் பழுதறக் கற்றுஆய்ந்து அறிந்து, அவற்றில் அவர் பெற்ற பாண்டித்தியத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. பெரியாரின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்று திராவிடர் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இயங்கியவர். தனது வாதத் திறமை காரணமாக பல ஆன்மீகத் தலைவர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். 56 நூல்களைத் தந்து உள்ள பெரியார்தாசன்  அம்பேத்கர் தொகுத்த புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை, தமிழில் மொழி ஆக்கம் செய்தார்.  அந்தநூல் தைவான் நாட்டில் மூன்று இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு  உலகெங்கும் பரப்பப்பட்டன.
ஷேஷாச்சலம் ஆகப் பிறந்து பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை பெரியார்தாசனாக மாற்றிக் கொண்டவர் அவர். கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் காட்டு மிராண்டிஎன்ற பெரியாரின் வாசகங்களை நாடு முழுக்க நாற்பது வருடங்களாக முழங்கி வந்தவர் அவர். அவரை திசை மாற்றியது எது?
ஆம் தனிமையில் ஒருநாள் இருக்கும்போது அந்த அக்கேள்விதான் அவரது மனதை துளைத்து எடுத்தது.....
கடவுள் இருக்கிறானா? இல்லையா? இருந்துவிட்டால்....? மரணத்துக்குப் பின் நம் நிலை என்ன...? நாம் பிரச்சாரம் செய்து வருவதுபோல் கடவுள் இல்லை என்றால், எந்த விபரீதமும் எனக்கு ஏற்படாது. நான் தப்பித்துக் கொள்வேன்,  என் பிரச்சாரத்தினால் திசை திருப்பப் பட்டவர்களும் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் கடவுள் இருந்துவிட்டால்... ஆத்திகர்கள் சொல்வதுபோல் மரணத்துக்குப் பின் விசாரணை உண்டாகும்  தீர்ப்புநாள் உண்டாகும், சொர்க்கம், நரகம் எல்லாம் இருக்கும் ,.......நம் நிலை....? இவ்வாறு சிந்திக்க ஆரபித்தார் பெரியார்தாசன்.

இச்சிந்தனை பல மத நூல்களையும் ஏற்கனவே கற்றறிந்திருந்த அவரை இறுதியாக திருக்குர்ஆனின் பக்கம் கொண்டு சேர்த்தது.    திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் படிக்கப் படிக்க அவருக்கு படைத்தவனைப் பற்றியும் வாழ்க்கையின் நோக்கம் பற்றியும் சரியான தெளிவு  ஏற்பட்டது. இஸ்லாம்தான் உண்மையான இறைமார்க்கம் என்று முழுமையாக புரிந்து கொண்ட பின் தன்னை அதில் இணைத்துக் கொண்டார்.  ஆம், உண்மையான பகுத்தறிவுத் தேடல் அவரை சத்தியத்தின்பால் கொண்டு சென்றிருக்கிறது!
குறிப்பாக மரணத்துக்குப் பின் உள்ள வாழ்வு பற்றிய திருக்குர்ஆன் வசனங்கள் எந்த ஒரு உண்மையான பகுத்தறிவு சிந்தனையாளனையும் சத்தியத்தை உணர வைத்துவிடும்...
இதோ உறுதிமிக்க வார்த்தைகளில் இவ்வுலகைப் படைத்தவன் பறைசாற்றுகிறான் பாருங்கள்:
3:185  ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;  இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
பகுத்தறிவு என்றால் என்ன?
கண்களால் நேரடியாகக் கண்டு ஒரு விடயத்தை நம்புவதற்குப் பெயரல்ல பகுத்தறிவு என்பது. அவ்வாறு நம்புவது உணவை மோப்பம் பிடித்து கண்டுகொள்ளும் ஜீவிகளை விட தாழ்ந்த நிலை! உண்மையில் நம் புலன்களுக்கு எட்டும் தகவல்களைக் கொண்டு எட்டாத விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என்பது. அவ்வாறுதான் பகுத்தறிவால் ஆராயச் சொல்கிறான் இறைவன்:  
= மனிதன் தான் கடந்து வந்த கட்டங்களைப் பற்றி சற்று சிந்தித்தாலே இறைவன் கூறுவது உண்மையே என்பது புலப்பட்டுவிடும்.
22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறைக்கும் போது அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
= மறுமையை நம்பமுடியவில்லை என்போருக்கு உண்மை எதுவென்பதைப் பகுத்தறியச் சொல்கிறான் இறைவன்:
 36:77 .மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான்.
36:78  .மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று.
36:79  .''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:80  .''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:81  .வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
36:82  .எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ''குன்'' (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
ஆம், மனிதனை முதலில் படைத்தவனுக்கு மீண்டும் படைப்பது என்பது மிக எளிதானது என்று கூறுகிறான் இறைவன்! அதுவும் மிகமிகப் பக்குவமாக படைப்பான் என்கிறான் இறைவன்:
75:3, 4 (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
பகுத்தறிவுக்கான சவால்:
 மரணத்துக்குப் பின் வாழ்வு உள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சி நமது பகுத்தறிவுக்கு விடப்படும் ஒரு பெரும் சவால். நம்மைச் சுற்றுமுள்ள அத்தாட்சிகளை ஆராய்ந்து அதை அறியத் தூண்டுகிறான் இறைவன்:
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின்  உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.  
= மரணத்தையும் உயிர்தெழுதலையும்  ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறோம்:
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம்.  திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம்.
39:42      அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்;. மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குரிய ஒரே இறைவன் என்று பொருள்)
பகுத்தறிவினால் ஆய பலன்!
நம் உணவையும் உறைவிடத்தையும் தேடி அடைவதல்ல பகுத்தறிவின் உண்மை பயன். காரணம் நம்மைவிடக் குறைந்த அறிவுகொண்ட ஜீவிகள் இவற்றை எளிதாக தேடி அடைவதை நாம் அன்றாடம் காண்கிறோம். மாறாக  மரணம் நம்மைத் தழுவும் முன் நம்மைப் படைத்தவன் பால் திரும்புவதே பகுத்தறிவின் உண்மை பயன் என்பதை உண்மையான பகுத்தறிவாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். பெரியார்தாசனும் அவர்களில் ஒருவர்!
 10:31.    ''உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும் பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ''அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள் ; ''அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.

ஆம் நம்மைப் படைத்து பரிபாலித்து வருபவன் நம் இறைவன். அவனுக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். நமது உடல் பொருள், ஆவி என அனைத்தும் அவனுடையதே. அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் நாம் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம். மறுமையிலும் சொர்க்கத்தை அடையலாம். அந்த அடிபணிதலுக்கே அரபு மொழியில் இஸ்லாம் என்று வழங்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக