இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஏப்ரல், 2014

எல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல வெள்ளியே!


ஏதேனும் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, ஒவ்வொரு வெள்ளியும் நல்ல வெள்ளியே! நாட்களிலே சிறந்த நாள் இறைவனின் பார்வையில் வெள்ளிக்கிழமையே என்று தனது இறுதித் தூதர் வாயிலாக மனிதகுலத்துக்கு இறைவன் அறிவிக்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 (புகாரி 1548 )
ஆம், மனிதகுலம் சிறப்பாக கொண்டாடவேண்டிய நாள் இதுவே.. ஏனெனில் இன்றுதான் மனிதகுலம் பிறந்த நாள்! மனித சரித்திரத்தின் முதல் நாள்! நம்மை அளவில்லாத அன்போடும் கருணையோடும் அரவணைத்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பொழிந்துகொண்டு இருக்கும் இறைவனோடு தொடர்பு ஏற்பட்ட நாள் இதுவே. எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் நாம்!

அவனது கருணைக்கும் அன்புக்கும் அரவணைப்புக்கும் அருட்கொடைகளுக்கும் நன்றி கூறும் வண்ணம் இந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்பதையும் நமக்கு தன் திருத்தூதர் மூலம் கற்றுத் தருகிறான்:
= நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.”
அறிவிப்பு: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
(புகாரி 1535)

=   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து சுத்தம் செய்துகொண்டு, தலையில் எண்ணை தெய்த்து,வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு பின்னர் பிரை கடந்து செல்லாமல்  பள்ளியினுள்  நுழைந்து தனக்கு கடமையான தொழுகையை தொழுகின்றாரோ அவரது  இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும் (ஆதாரம்:புகாரி)

பல சம்பவங்கள் அந்நாளிலே நடந்ததாக இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள். பின்வரும் நபிமொழியில் இருந்து அதை அறியலாம்:

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களிடத்தில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அத்தினத்தில் தான் நபி ஆதம் (ஆலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர் மரணித்தார், அதிலேதான் மறுமை நாள் நிகழும், மனிதன்  விசாரணைக்காக மீண்டும் எழுப்பப்படுவான். இத்தினத்தில் அதிகமதிகம் என் மீது ஸலவாத்து (நபிகளாருக்காக இறைவனிடம் கோரும் பிரார்த்தனை) சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள்  சொல்லக்கூடிய ஸலவாத்து என்னிடத்தில்  எடுத்துக் காட்டப்படும், நபிமார்கள் உடலை  பூமி உண்பதை (அழிப்பதை) விட்டும்  இறைவன் தடுத்துள்ளான்  (ஆதாரம்: அஹ்மத்)

கிருஸ்துவ அன்பர்கள் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட நாள் என்று அவர்கள் நம்பும் நாளை புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது குட் பிரைடே என்றும் கூறி அனுஷ்டிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கைப்படி அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை. அவ்வாறு அறையப்படுவதில் இருந்தும் இறைவனால் காப்பற்றப்பட்டு அவனளவில் உயர்த்திக் கொள்ளப்பட்டார் என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.
4:157.இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (யூதர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ்விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

4:158.ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)


அவ்வாறு அந்த சம்பவம் நடந்த நாள் வெள்ளிக்கிழமையே என்றாலும் அது துக்கத்துக்கு உரியதல்ல, மாறாக அவர் யூதர்களின் சதியில் இருந்து அற்புதமான முறையில் காப்பாற்றப்பட்டார் என்பதால் அதுவும் மகிழ்ச்சிக்குரிய நாளே என்பது இஸ்லாமிய நம்பிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக