இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

கவர்ணர் மாளிகையில் கலீபா!

அரசியல் வாதிகளிடமும் அரசியல் முனைவோரிடமும்ஆட்சிப்பொறுப்பில் உள்ளோரிடமும் இறைவனுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வு ஊட்டப்பட்டு அதை அவர்கள் சரிவர உணர்ந்தால் அவர்களில் யாரும் ஆட்சிப்பொறுப்பை தேடி அலைய மாட்டார்கள்! ஏற்றவர்கள் அதை விட்டும் ஓடி ஒழிவார்கள்! ..... அல்லது ஏற்ற பொறுப்பை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துவிட்டு சென்றார்கள்:
= நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 7148)
இந்த அச்சம் ஆட்சியாளர்களை பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஆக்குகிறது. அதனால் சரித்திரத்தில் பல இஸ்லாமிய ஜனாதிபதிகள் இரவுபகலாக கண்விழித்து மக்கள் சேவையாற்றினார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அவ்வாறு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சான்றோர்கள் அவர்களாக அதைத் தேடி அலையவில்லை. மாறாக ஆட்சிப்பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்பட்டது. 
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் அவர் கைவசமே இருந்தது. இரு தலைமையும் ஒருசேர அவரிடம் இருந்தும் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கை பிற்காலத்தவருக்கு  முன்மாதிரியானது. அரசுக் கருவூலம் செல்வத்தால் நிரம்பி வழிந்தபோதும் அவரும் அவரது குடும்பத்தாரும் வறுமையிலேயே வாழ்ந்தனர். அன்னாரின் மரணத்துக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னாள் ஜனாதிபதிகளின் வாழ்விலும் இன்ன பிற ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நன்மக்களிடமும் அதே வறுமையைக் கண்டது வரலாறு...... 

எளிமையானவர் என்று பெயரெடுத்தவர் நபித்தோழர் அபுதர்தா (ரலி). நபிகளாரின் மறைவுக்குப் பின் உமர் ரலி அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது சிரியாவுக்கு அவர் ஆளுநராக நியமிக்கப் பட்டு இருந்தார். சிரியாவை மேற்பார்வை இட வந்திருந்தார் ஜனாதிபதி உமர். அபுதர்தாவை அவரது விட்டில் சந்திக்கப் போனபோது அவரது வீட்டில் விளக்கு இல்லை. ஒரே இருட்டு. வந்தவரை வரவேற்று அமரச்செய்தார் அபுதர்தா. இருவரும் இருட்டில் அமர்ந்து கொண்டு உரையாடினார்கள்.
உரையாடலின் போது அபுதர்தா தலையணையாக பயன்படுத்திய பொருள் கைக்கு தட்டுப்பட்டது. அது குதிரையின் சேணம் என்பதை புரிந்து கொண்டார் உமர். அவர் படுக்கும் இடத்தை தடவிப்பார்த்த பொது அங்கு எங்கும் பொடிக்கற்களாக இருந்தது. அவர் பயன்படுத்திய போர்வை டமாஸ்கஸின் குளிரை தாங்கக்கூடியதாகவும் இருக்கவில்லை.
ஜனாதிபதி உமர் கவலை கொண்டவராக ஆளுனரை விசாரித்தார்... “நான் உங்களுக்கு சற்று வசதியை செய்து தரலாமா? உங்களுக்கு எதையாவது அனுப்பட்டுமா?”
உடனே அபுதர்தா(ரலி) நபிகளாரின் கூற்றை நினைவு படுத்தினார்... “ஒரு வழி யாத்திரைக்காரனுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கே இவ்வுலகில் உங்கள் தேவைகளை போதுமாக்கிக் கொள்ளுங்கள்”. இதைக் கேட்ட மாத்திரத்திலேயே இருவரும் அழு ஆரம்பித்தார்கள். இந்த சோகமான நினைவிலேயே இரவைக் கழித்தனர் அந்த சரித்திரம் படைத்த ஆட்சியாளர்கள்.
மறுமையில் வாய்க்க இருக்கும் சொர்க்கப்பெற்றிற்காக தன்னலங்களை பொதுநலத்திற்காக தியாகம் செய்த உத்தமர்கள் அவர்கள்.

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?  (திருக்குர்ஆன் 6:32)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக