இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஜனவரி, 2013

பெண்ணுரிமை வாதிகளின் இரட்டை முகம்!



பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். "இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச்சட்டம் இங்கும் வேண்டும்'' என்றெல்லாம் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.
பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது?
பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா? பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் என்?
பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும்போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?
பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?
எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.
கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபட கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக்கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். அதனால்தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.
இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக்கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.
முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.
இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.
பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் ஆடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக்கொண்டிருப்பதில்லை.
ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.
ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாறாக நடப்பதுதான் நமக்கு வியப்பாகவுள்ளது.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் பர்தா என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் பர்தாவைக் குறை கூற முடியாது.
நன்றி : பிஜே.

1 கருத்து:

  1. miga arumaiyaana thelivaana karuththu.asadu vazhiyum aangal iyakkaththirkku burka pottaal ondrum paarkka mudiyaadhe endra varuththam. maadhar sangangalukku idhu muslim sattamaache enbadhaal etrukolla thayangukiraargal.

    பதிலளிநீக்கு