இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

2012 –இல் உலகம் ஏன் அழியவில்லை? – பாகம் ஆறு



  மறுமை நாள் எப்படி சாத்தியமாகும்?
    நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.
    மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும் அழிந்து பின்னர் அவன் எப்படித் திரும்பவும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான்? இதை எங்களால் நம்ப முடியவில்லையே? மறுமை நாள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றது.
    நாங்கள் எலும்புகளாகவும், மக்கிய பொருட்களாகவும் ஆன பின்பு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன் 17:49, 17:98, 23:82, 37:15, 37:53, 56:47)
    ''நிச்சயமாக நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப் படுவீர்கள்' என்று அவர் உங்களை எச்சரிக்கிறாரா? நீங்கள் எச்சரிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்!! நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாம் வாழ்ந்து மடிகிறோம். மீண்டும் நாம் எழுப்பப் படப்போகிறவர் அல்லர்' (எனக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 23:35,36,37)
    இறந்தவன் உயிர்பிக்கப்படுவதும் அவன் விசாரிக்கப்படுவதும் சாத்தியமே இல்லை என்று அவர்கள் கருதியதால் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். இந்த கேள்விக்கு மனிதன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணரும்வண்ணம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது.
 ஒருமுறை நபிகளாரிடம் மக்கிப்போன மனித எலும்புகளைக் கொண்டு பொடித்துக் காட்டி அதை ஊதிச் சிதறடித்து இவையெல்லாம் மீண்டும் உயிர்பெற்று வரும் என்றா போதிக்கிறீர் என்று ஏளனமாகக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் இறைவன் கீழ்கண்ட குர்ஆன் வசனங்களை அருளினான்
 36:77-83. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு பபடைப்பையும் அறிந்தவன்'' என்று நபியே கூறுவீராக!
 அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள். வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அனைத்தும் அறிந்தவன்.
ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும். எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
    மக்கிப்போய் ஒன்றுமில்லாமல் ஆன பின் எப்படி உயிர்ப்பிக்கப்பட முடியும்? என்பது உங்கள் கேள்வி என்றால் ஒரு காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுமில்லாமல் இருக்க வில்லையா? இன்ன பொருளாக இருந்தோம். இந்த இடத்தில் இருந்தோம். என்றெல்லாம் கூறமுடியாத நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் இருந்ததில்லையா?
    ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தான் நீங்கள் ஆரம்பமாகப் படைக்கப்பட்டீர்கள்! ஒன்றுமில்லாமல் இருந்தால் கூட படைக்கப்பட முடியும் என்பதை இது உணர்த்த வில்லையா? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து முதன் முதலில் படைப்பது ஆச்சரியமானதா? ஒரு முறை படைத்து பின்னர் அழித்து அதையே மறுபடியும் படைப்பது ஆச்சரியமானதா? என்றெல்லாம் சற்று சிதித்தால் இதற்கான விடை காணலாம் என்கிறது திருக்குர்ஆன்.
22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்
75:3. 4  (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
உங்களைச் சுற்றுமுள்ள அத்தாட்சிகளைப் பாருங்கள்:
நம் புலன்களுக்கு எட்டும் தகவல்களைக் கொண்டு எட்டாத விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என்பது. அவ்வாறு பகுத்தறிவால் ஆராயச் சொல்கிறான் இறைவன்
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.  
மரணத்தையும் உயிர்தெழுதலையும்  ஒவ்வொருநாளும் அனுபவிக்கிறீர்கள்!
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம்.  திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம். இந்த உண்மையைப் பின்வரும் வசனம் மூலமாக நினைவூட்டுகிறான் இறைவன்
39:42     .அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.   
 இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டால், அந்த இறைவன் எல்லாவிதமான பலவீனங்களிலிருந்தும் தூயவன் என்பதையும் அறிந்து கொண்டால், அவனது அதிகாரத்திற்கும், ஆற்றலுக்கும் எந்த எல்லையும் கிடையாது என்பதை விளங்கிக் கொண்டால், தனது வல்லமையை உலகறியச் செய்யும் வகையில் அவன் படைத்து வைத்திருக்கின்ற அதியசயங்களைப் பற்றி சிந்தித்தால் 'எப்படி உயிர்ப்பிக்க முடியும்' என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள். எப்படி என்பதைச் சிந்திப்பதை விட இதைச் செய்யக் கூடியவன் எத்தகையவன் என்பதை சிந்தியுங்கள்! அவ்வாறு சிந்தித்தால் மனிதன் மண்ணோடு மண்ணாக மக்கி ஒன்றுமற்றுப் போனாலும் அந்த வல்லவனால் மீண்டும் அவனை உருவாக்க முடியும் என்பதை ஐயமற உணர்வீர்கள் என்கிறது திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக