இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஜனவரி, 2013

பெண்களுக்கு எதிரான முதல் குற்றம்!இவ்வுலகில் மனிதன் அமைதியாக இனிமையான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக இங்கு ஆணுக்குத் துணையாக பெண்ணையும் படைத்து அவர்களுக்கு தன் புறத்தில் இருந்து நேர்வழிகாட்டுதலையும் தந்தருளியுள்ளான் இறைவன். ஆனால் மனிதனின் குறுகிய மற்றும் சுயநலம் வாய்ந்த செயல்பாட்டின் காரணமாக அவனது வழிகாட்டுதலைப் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக வாழ விழைந்ததன் காரணமாக பல துன்பங்களை மனித இனம் அனுபவிக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது. இன்று பெருகிவரும் பாலியல் வன்முறைகளாக ஆங்காங்கே நடப்பவை அதன் ஒரு சிறிய வெளிப்பாடுதான். இந்த பாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு ஒன்றல்ல இரண்டல்ல பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் குறைந்து வரும் ஆண் – பெண் விகிதம். அதாவது பெண்களின் எண்ணிக்கைத் தட்டுப்பாடு! இன்று காண்பது இதன் தொடக்கம்தான். இது முழுமையாக பரிணமிக்கும்போது என்னென்ன நடக்கும்! கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. எங்காவது ஒரு வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்று தெரிந்தால் அதை மோப்பம் பிடித்து அந்த வீட்டை சுற்றி நாய்கள் காத்துக் கிடப்பதைப் போல ஆண்களின் கூட்டம் காத்துக் கிடக்கும் ஒரு சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை!
இதைப் புரியவைக்க ஆதாரங்கள் ஒன்றும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அந்த அளவுக்கு இது வெட்ட வெளிச்சம்! இருந்தாலும் அதையும் சிறிது முன்வைத்து விட்டு தொடருவோம்.
It is alarming fact that male female ratio in India is dropping every year. There are only 914 females for every 1000 male as per the 2011 Census statistics. This is an alarming ratio and it is time to understand the implications and take action to set that right.  (http://realbharat.org/tag/female-infanticide/)

அதிகரிக்கும் ஆண்-பெண் குழந்தை விகிதம் - உருவாகும் ஆபத்துக்கள்என்ற தலைப்பில் திண்டிவனத்தைச் சேர்ந்த இரா. முருகப்பன் அவர்கள் சேகரித்த தகவல்களின் சுருக்கம் : (பார்க்க: http://iramurugappan.blogspot.in)

2011-ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  இந்தியாவில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் ஆயிரத்துக்கு 914  ஆகவும். தமிழகத்தில் இந்த பாலின விகிதம் 946 ஆகவும் உள்ளது. அதிலும் குறிப்பாக கடலூர், அரியலுர் மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையானது 900-த்திற்கும் குறைவாகவே உள்ளது.
2001 முதல் 2011 வரையிலான பத்து ஆண்டுகால இடைவெளியில் அகில இந்திய அளவில் 31,33,281 பெண் குழந்தைகளையும்; தமிழக அளவில் 19,848 பெண் குழந்தைகளையும் காணவில்லையென இப்புள்ளி விபரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் 952 - க்கும் குறைவாகவே பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். அரசு இந்த பெண்சிசுக் கொலையைத் தடுக்க போடப்பட்ட சட்டங்கள் அதிகாரிகளாலும் மக்களாலும் மதிக்கப்படாமல் இக்கொடுமை இன்னும் தொடர்கின்றது என்கிறார் திரு இரா. முருகப்பன்.
குழந்தை பிறப்பு என்பது உலகில் இயற்கையானது. ஆனால் மனிதன் தான் பெற்ற குழந்தை தன் உணவில் பங்கு கேட்குமோ என்றும் தன் ஆடம்பரம் மற்றும் வசதிகள் குறைந்துவிடுமோ என்றும்  பயந்து தன் சுயநலம் மற்றும் பொறுப்பின்மை மேலிட தான் பெற்ற குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தான். எந்த விலங்குகளும் கூட செய்யத் துணியாத அந்த கருணையற்ற அற்ற செயலை  குடும்பக் கட்டுப்பாடு என்று அழகிய பெயர் சூட்டி சமூகமும் ஆமோதித்தது, நாட்டு வளங்களை முறைப்படி கையாளத்  திறமையில்லாத சுயநல அரசியல் வாதிகளும் அதைத் தங்கள் குறைகளை மறைக்கக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர். ஊழலால் நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் மக்கள் தொகைப் பெருக்கமே நாடு முன்னேறாததற்குக் காரணம் என்று மக்களுக்கு மூளைச்சலவை செய்தனர்.
‘நாமிருவர் நமக்கு ஒருவர்’’ என்னும் போது அந்த ஒருவர் பெண்ணாய் வந்துவிட்டால் என்ன நடக்கும்? அனைவருக்கும் தெரிந்ததே! ஆம், பெண் இனம் பல்வேறு விதமாக கொன்றொழிக்கப்பட்டது. பிறக்கும் முன்பே  மருத்துவ மனைகளில் அவளைக் கொன்றார்கள், தப்பித் தவறி பிறந்துவிட்டால் கள்ளிப் பாலும் அரிசிமணிகளும் அவளைப் பதம் பார்த்தன!  இவ்வாறு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்த கூட்டக் கொலை பாரதம் எங்கும் நிறைவேறியது. இன்னும் நிறைவேறிக் கொண்டுவருகிறது. நாட்டில் வனவிலங்குகளும் கால்நடைகளும் அழிவது கண்டு முதலைக்கண்ணீர் வடித்த “மனிதாபிமானிகளுக்கு’ தன் இனம் அழிவது கண்டு அழுகை வரவில்லை! என்ன ஆச்சரியம்!
சமூகத்தில் மனித உணர்வுகளை, ஆசாபாசங்களை, பாச நேசங்களை சமநிலைப்படுத்த  இறைவன் வழங்கிய பெண்மை என்ற ஒரு மாபெரும் பொக்கிஷத்தை அறியாமையின் காரணமாக தொலைத்துகொண்டு நிற்கிறது மனித இனம்!
பெண்களை ஒருபுறம் கொன்றோதுக்கி விட்டு  மறுபுறம் பெண்ணுக்கு உரிமை வேண்டுமாம்! அவளுக்கு இவ்வுலகில் நுழைவதற்கே தடை விதித்துவிட்டு வாய்கிழிய முழக்கமிடும் பெண்ணுரிமைவாதிகளும் மாதர் சங்கங்களும் யாருக்காகப் போராடுகிறார்கள்? தொடரும் இக்கொடுமைக்கு எதிராக அவர்களின் குரல்கள் மௌனமாகும் மர்மம என்ன? பெண்ணின் முதல் உரிமை அவளுக்கு பிறக்கும் உரிமை! இதைப் பெற்றுத்தர என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறார்கள் அவர்கள்?
யார் எப்படி செயல்பட்டாலும் சரி, செயல்படாவிடினும் சரி, இறைவனை நம்பி அவனுக்கு அடிபணிந்து வாழ தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நன்மைக்கள் இத்தீமை இனியும் சமூகத்தில் பரவாமல் தடுக்க ஆவன செய்யவேண்டும். இறைவன் கூறும் வாழ்க்கை நெறியைப் பின்பற்றுவோரிடம் இத்தீமை நடைபெறுவதில்லை! இன்று வாழ்வோரையும் இனி வரும் தலைமுறகளையும் இக்கொடுமையின் ஆபத்து பற்றி உரிய முறையில் எச்சரிப்பது நமது கடமை.
இது இறைவனுக்கு சொந்தமான உலகம். இதை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக இறைவன் படைத்துள்ளான். இதில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன. அவற்றுக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று விசாரணையும் உண்டு. இவ்வுலகில் நாம் இறைவனுக்குக் கீழ்படிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதை நாம் அடிப்படையாக உணரவேண்டும். அவன் விதித்த கட்டளைகளை மீறி வாழ்ந்ததன் விளைவுகளே இன்று நாம் கண்டுவரும் கொடுமைகள். ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான தண்டனையைப் பெறாவிட்டாலும், மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.
= கண்ணுக்குத் தெரியும் உயிராயினும் தெரியாத உயிராயினும் சரி பெரிதாயினும் சிறிதாயினும் அவற்றை அநியாயமாக நோவினை செய்தாலோ அல்லது கொன்றாலோ அது இறைவனிடம் பாவமே! மறுமை நாளில் அதற்கான விசாரணை உண்டு. அந்த வகையில் சிசுக்கொலைகளுக்கும் தண்டனை உண்டு என்று இறைவன் எச்சரிக்கிறான்
17:31  .நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
இன்று பெண்குழந்தைகள் என்றால் ஸ்கேன் செய்து பார்த்து கொல்லும் பெற்றோர்கள் நாளை மறுமை நாளில் தண்டனைக்குள்ளாவார்கள். அவர்களால் கொள்ளப்பட்ட குழந்தைகளே அவர்கள் செய்த குற்றத்திற்கு சாட்சியாக நிற்பார்கள்
81:7-9 .உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?'' என்று-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக