இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 ஜனவரி, 2026

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – ஜனவரி 26 இதழ் PDF

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – ஜனவரி 26 இதழ்

பொருளடக்கம்:

புதிய ஆண்டு – புதிய மனிதன் -2

இஸ்லாம் நபித்தோழர்களில் ஏற்படுத்திய அதிசய மாற்றங்கள் -4

நபிகளார்  – மனமாற்றத்திற்கான  சிறந்த  ஆசான் -6

மனமாற்றமும் குணமாற்றமுமே இலக்கு  -8

கண்டிக்கக் கற்றுத்தரும் அழகிய ஆசான் நபிகளார் -9

தவறைத் திருத்தும் நபிவழி

விபச்சாரத்தில் இருந்து விடுபட்ட இளைஞன்! -11

பள்ளிவாசலில் சிறைக்கைதியின்  தலைகீழ் மனமாற்றம்  - 14

சிறைச்சாலைகளை ஏன் சீர்திருத்த வேண்டும்?-18

சிறைவாசிகளை சீர்திருத்திடும் இறைநம்பிக்கை! -21

மால்கம் எக்ஸ் – சிறையிலிருந்து  சிந்தனைப் புரட்சிவரை.. -23

-------------------- 



செவ்வாய், 20 ஜனவரி, 2026

இஸ்லாத்தைத் தழுவ வந்தும் திருப்பி அனுப்பப்பட்ட தோழர்

அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சி.
1512. அம்ர் பின் அபசா அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அறியாமைக் காலத்தில் வாழ்ந்தபோது மக்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள்; அவர்களுக்கென (வாழ்க்கை நெறி) எதுவும் கிடையாது; அவர்கள் சிலைகளை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணி (வருந்தி)னேன். இந்நிலையில் மக்காவில் ஒரு மனிதர் (புதிய) செய்திகளைச் சொல்லிவருவதாகக் கேள்விப்பட்டேன். எனவே, நான் எனது வாகனத்தில் அமர்ந்து அவரை நோக்கிச் சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமறைவாக இருந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய சமுதாயத்தார் அவர்களுக்கெதிரான துணிகரச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எனவே, நான் அரவமின்றி மெதுவாக மக்காவுக்குள் நுழைந்து அவர்களிடம் சென்றேன். அவர்களிடம் நான், "நீங்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "நான் ஒரு நபி" என்றார்கள். நான் "நபி என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "அல்லாஹ் என்னை (தனது செய்தியுடன்) அனுப்பி உள்ளான்" என்று கூறினார்கள். நான் "என்னென்ன செய்திகளுடன் அனுப்பியுள்ளான்?" என்று கேட்டேன். அதற்கு "இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும்; சிலை (வழிபாடு)களை ஒழிக்க வேண்டும்; இறைவன் ஒருவனே;அவனுக்கு இணையாக எதுவுமில்லை எனும் செய்திகளுடன் என்னை அனுப்பினான்" என்று பதிலளித்தார்கள். நான் "இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர் யார் உங்களுடன் இருக்கின்றார்கள்?" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒரு சுதந்திரவானும் ஓர் அடிமையும் உள்ளனர்" என்றார்கள். (அன்றைய நாளில் அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நபியவர்களை ஏற்று அவர்களுடன் இருந்தனர்).
"நானும் தங்களைப் பின்பற்ற விழைகிறேன்" என்று நான் கூறினேன். அதற்கவர்கள் "இந்த நாளில் அவ்வாறு உம்மால் என்னைப் பின்பற்ற இயலாது. எனது நிலையையும் மக்களின் நிலையையும் நீர் பார்க்கவில்லையா? (தற்போது) நீர் உம்முடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லும்! நான் எழுச்சி கண்டேன் என என்னைப் பற்றி நீர் கேள்விப்பட்டால் என்னிடம் வாரும்!"என்றார்கள். 

அதற்கேற்ப நான் என் குடும்பத்தாரிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்குச் சென்றுவிட்டார்கள். நான் என் குடும்பத்தாரிடம் இருந்துகொண்டே செய்திகளைக் கேட்டு அறிந்து கொண்டிருந்தேன். அவர்கள் மதீனாவுக்குச் சென்றவுடன் மக்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்தேன். 
ஒரு சமயம் யஸ்ரிப் (மதீனா)வாசிகளில் சிலர் என்னிடம் வந்தனர். அவர்களிடம் "மதீனாவிற்கு வந்துள்ள இந்த மனிதர் என்ன செய்துகொண்டிருக்கிறார்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "மக்கள் அவரை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றனர். (மக்காவில்) அவருடைய சமுதாயத்தார் அவரைக் கொன்றுவிடத் திட்டமிட்டனர். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்று கூறினர்.
நபியவர்களுடன் சந்திப்பு 
பின்னர் நான் மதீனாவுக்குச் சென்று நபியவர்களைச் சந்தித்தேன். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என்னை அடையாளம் தெரிகிறதா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம், மக்காவில் என்னை வந்து சந்தித்தவர்தாமே!" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். 
பிறகு "அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்துள்ள, எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும் போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போதுதான் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர். பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் (நண்பகல் நேரம்)வரைத் தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுது கொள்ளுங்கள்.

 அந்நேரத்தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ர்வரைத் தொழுதுகொள்க. பிறகு சூரியன் மறையும்வரைத் தொழுவதை நிறுத்திவிடுக! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்" என்று கூறினார்கள்.
அங்கத்தூய்மை பற்றி விசாரித்தல்:
நான், "அல்லாஹ்வின் தூதரே! அங்கத் தூய்மை (உளூ) செய்வது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரை நெருங்கி வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினால் அவரது முகம், வாய், மூக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (தண்ணீரோடு சேர்ந்து கீழே) விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் அல்லாஹ் உத்தரவிட்டதைப் போன்று தமது முகத்தைக் கழுவினால் அவரது முகத்தால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது தாடி ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் மூட்டுவரை இரு கைகளைக் கழுவும்போது அவருடைய கைகளின் பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் ஈரக் கையால் தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்தி)டும் போது அவரது தலையின் பாவங்கள் அனைத்தும் தலைமுடியின் ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் தம் பாதங்களைக் கணைக்கால்கள்வரைக் கழுவும்போது அவரது கால்களால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. (அதற்குப் பிறகு) அவர் எழுந்து தொழும்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்றதைக் கூறிப் புகழ்ந்து பெருமைப்படுத்தித் தமது உள்ளத்தில் இறைவனுக்கு மட்டுமே இடமளித்தால் அவர் திரும்பிச் செல்கையில் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கி (பரிசுத்தமாகத்) திரும்புகிறார்" என்று கூறினார்கள்.
)இதன் அறிவிப்பாளரான) நபித்தோழர் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியபோது நான், "அம்ர் பின் அபசா! என்ன சொல்கிறீர்கள் என்பதை நன்கு யோசித்துச் சொல்லுங்கள்! ஒரே இடத்தில் (இத்தனையும்) அந்த மனிதர் வழங்கப்பெறுகிறாரா?" என்று கேட்டேன். அதற்கு அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள், "அபூஉமாமா, என் வயது முதிர்ந்துவிட்டது; எனது எலும்பு நலிந்து விட்டது; எனது தவணை நெருங்கி விட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் மீதோ அவன் தூதர்மீதோ பொய்யுரைப்பதற்கு எனக்கு எந்தத் தேவையுமில்லை. நான் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை (இவ்வாறு ஏழுவரை எண்ணிச் சொல்கிறார்) மட்டுமே செவியுற்றிருந்தால் இதை ஒருபோதும் நான் அறிவித்திருக்கமாட்டேன். ஆனால்,அதைவிட அதிகத் தடவைகள் நான் செவியுற்றேன் (அதனால்தான் அறிவித்தேன்)" என்றார்கள்.
Book : 
(முஸ்லிம்) 

திங்கள், 19 ஜனவரி, 2026

துறவியைக் கண்டு ஏன் அழுதார் அந்த கலீபா?


= சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்ட வையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.(திருக்குர்ஆன் 88:1-3)
= கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.  கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.(திருக்குர்ஆன் 88:4-7)

ஹாஃபிழ் அபூ பக்ர் அல்-புர்கானி அவர்கள் அபூ இம்ரான் அல்-ஜவ்னி அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்: "உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் ஒரு துறவியின் மடாலயத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், 'ஓ துறவியே!' என்று அழைத்தார்கள். பின்னர் அந்த துறவி வெளியே வந்தார். உமர் (ரழி) அவர்கள் அவரைப் பார்த்து அழத் தொடங்கினார்கள். பின்னர் அவர்களிடம், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அல்லாஹ் தனது வேதத்தில் கூறியுள்ள இந்த வசனத்தை நான் நினைவு கூர்ந்தேன்:
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். (திருக்குர்ஆன் 88:2-3)

எந்த உமரின் பெயரைக் கேட்டால் உலக அரசர்கள் அஞ்சி  நடுங்கினார்களோ அதே உமர் (ரலி) தனது பேரரசின் ஒரு குடிமகனின் நிலை கண்டு அழுகிறார்.  22,51,030 சதுர மைல்களில் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை அவரது ஆட்சியில் மக்கள் தன்னிறைவோடு வாழ்ந்தார்கள் என்கிறது வரலாறு. அவர்களின் அழுகைக்குக் காரணம் அந்த துறவியின் உணவு, உடை, உறைவிடத்தைப்  பற்றியதாக இருக்கவில்லை. மாறாக அத்துறவியின் மறுமை இருப்பிடத்தைப் பற்றியதாக இருந்திருக்கிறது என்பதை மேற்படி நிகழ்வில் இருந்து அறிகிறோம். உமரைப் பொறுத்தவரை இறைவாக்குகள் ஒருபோதும் பொய்யாகுவதில்லை என்று அவர் உறுதியாக  அறிந்திருந்தார்.  அதில் கூறப்படும் விஷயங்கள் உறுதியாக நடந்தேறும் என்றும் உணர்ந்திருந்தார்.  
இறைவனிடம் நற்கூலி கிடைக்கும் என்ற நோக்கில் தங்கள் உடல்சுகங்களை துறந்து வாழ்பவர்கள் இந்தத் துறவிகள். தங்கள் ஆசைகளையும் உடல் இச்சைகளையும் அடக்கி சாதாரண மனிதர்கள் உண்ணும் உணவு, உடை, உறைவிடங்களை எல்லாம் தியாகம் செய்து இறைப்பொருத்தம் தேட முனைபவர்கள் அவர்கள்.  ஆனால் அவர்களின் தியாகம் அனைத்தும் வீணாவது மட்டுமல்ல, அவை அனைத்தும் இறைவனின் கோபத்தை மூட்டி  இறுதியில் அவர்களுக்கு நரக தண்டனையைப் பெற்றுத்தந்தால் எப்படி இருக்கும்? அதை நினைத்துதான் அந்த மகா வல்லரசர் அழுதார். 
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.  (திருக்குர்ஆன் 3:85)
என்றல்லவா இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்!
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இறைவனின் மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. அவரது 

சரி, அரசராக இருந்து அந்தக் குடிமகனை - அந்தத் துறவியை - அப்போதே தடுத்து இருக்கக் கூடாதா? அந்தத் துறவியின்  மடத்தை கட்டாயமாக மூடி இருக்கக் கூடாதா? என்ற கேள்வி இங்கு எழும். 
இதற்கு என்ன பதில்?
எந்த இறைவன் மேற்படி திருக்குர்ஆன் வசனங்களை  அருளினானோ அதே இறைவன் இறைமார்க்கத்தை  பிறர் மீது திணிப்பதையும் தடுத்துள்ளான்.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

 உமர் எப்படிப்பட்ட வல்லரசர் ஆனாலும் அவருக்கு அநீதிகளையும் அக்கிரமங்களையும் கையாளும் அரசர்களை வென்று அங்கு தர்மத்தை நிலைநாட்டும் அதிகாரத்தை ஒரு கலீபா என்ற முறையில் வழங்கப்பட்டு இருந்தது. ஆனாலும் எந்த ஒரு தனிநபரையும் நிர்பந்தித்து இஸ்லாத்தில் சேர்க்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்பதே இதற்கான காரணம்! 
=============
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html

சனி, 17 ஜனவரி, 2026

சிறைவாசிகளை சீர்திருத்திடும் இறைநம்பிக்கை!


சிறைவாசிகளை சீர்திருத்திடும் இறைநம்பிக்கை!

சிறைச்சாலைகள் சமூகப் பாதுகாப்பிற்காக அவசியமானவை. ஆனால் அவை தண்டனை வழங்கும் இடங்களாக மட்டுமே செயல்பட்டால், குற்றங்கள் குறையாது. ஒரு மனிதன் உண்மையில் திருந்த வேண்டும் என்றால்,
அவனுக்குள் மனமாற்றம் (inner transformation) நிகழ வேண்டும். அந்த மனமாற்றத்தை உருவாக்கும் சக்தியாக இஸ்லாமிய இறைநம்பிக்கை செயல்படுகிறது.

  1. மனிதனை அல்ல, தீய தூண்டுதலையே எதிரியாகப் பார்க்கும் பார்வை

இஸ்லாம் மனிதனை பிறவியிலேயே கெட்டவன் என்று பார்க்கவில்லை.
அவனை தவறுக்கு தள்ளுவது ஆசை, கோபம், பேராசை மற்றும் ஷைத்தானின் தூண்டுதல் என விளக்குகிறது.

நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குத் தெளிவான எதிரி.” (குர்ஆன் 35:6)

இந்த அணுகுமுறை சிறைவாசியின் மனதில் நான் கெட்டவன்” என்ற அவநம்பிக்கையை உடைத்து, நான் திருந்த முடியும்” என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. இதுவே சீர்திருத்தத்தின் முதல் அடித்தளம்.

பகுத்தறிவு பூர்வமான இறைநம்பிக்கை

இஸ்லாமிய இறைநம்பிக்கை கண்மூடி நம்பிக்கை அல்ல. மனிதனை சிந்திக்க, ஆராய, தன் செயல்களின் விளைவுகளை புரிந்து கொள்ள அழைக்கிறது.

என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” (குர்ஆன் 6:80)

இதனால் சிறைவாசி தன் வாழ்க்கைத் தவறுகளுக்கு வெளிப்புற சூழலை மட்டுமே குறை கூறாமல், தன் தேர்வுகளுக்குப் பொறுப்பு எடுத்துக்கொள்ளும் நிலைக்கு வருகிறான்.

உள்ளார்ந்த கண்காணிப்பு (Inner moral surveillance) – ‘யாரும் பார்க்கவில்லை’ என்ற மாயை உடைபடும் இடம்

சிறையில் காவலர் கண்காணிப்பு இருக்கலாம். ஆனால் அது மனிதனை
வெளிப்புறமாக மட்டுமே கட்டுப்படுத்தும். இஸ்லாமிய இறைநம்பிக்கை
மனிதனுக்குள் ஒரு வலுவான உள்ளார்ந்த கண்காணிப்பை உருவாக்குகிறது.

அவன் கண்களின் மோசடியையும் உள்ளங்களில் மறைந்ததையும் அல்லாஹ் அறிகிறான்.” (குர்ஆன் 40:19)

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?” (குர்ஆன் 90:7)

அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?” (குர்ஆன் 90:8)

இந்த வசனங்கள் யாரும் பார்க்கவில்லை; எனவே நான் விரும்பியது செய்யலாம்” என்ற மனித மனநிலையை பகுத்தறிவு கேள்வியால் உடைக்கின்றன.
இந்த உணர்வே தனிமையிலும் தவறு செய்யாமல் வாழ வைக்கும் உண்மையான கட்டுப்பாடு.

பாவமன்னிப்பு (தவ்பா) – நம்பிக்கையுடன் கூடிய புதிய தொடக்கம்

இஸ்லாம் குற்றம் செய்த மனிதனை நம்பிக்கையற்றவனாக மாற்றவில்லை.
தவ்பா (பாவத்திலிருந்து திரும்புதல்) என்ற வாய்ப்பை எப்போதும் திறந்தே வைத்துள்ளது.

என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையை நம்பிக்கை இழக்காதீர்கள்.”
(குர்ஆன் 39:53)

இந்த நம்பிக்கை சிறைவாசியின் மனச்சுமையை குறைத்து, புதிய வாழ்க்கையைத் தொடங்கும் தைரியத்தை அளிக்கிறது.

ஒழுக்கப் பயிற்சி – நடைமுறை சீர்திருத்தம்

தொழுகை, நோன்பு, துஆ போன்ற இஸ்லாமிய வழிபாடுகள் வெறும் ஆன்மிகச் சடங்குகள் அல்ல.

  • ஐவேளைத் தொழுகை வாழ்க்கையில் ஒழுக்கமும் ஒழுங்கும் பேண வைக்கிறது
  • நோன்பு தன்னடக்கப் பயிர்ச்சி
  • துஆ மன அமைதி, தன்னம்பிக்கை, இறைநெருக்கம்

இவை அனைத்தும் சிறைவாசியின் கோபம், அவசரம், அசட்டுத்தனத்தை கட்டுப்படுத்தி, ஒரு ஒழுக்கமான வாழ்க்கைக்குத் தயாராக்குகின்றன.

அனுபவ சாட்சி – அமெரிக்க சிறைகள்

அமெரிக்க சிறைகளில் இஸ்லாமைத் தழுவிய பல கைதிகள் வன்முறை குறைந்தவர்களாக, ஒழுக்கம் கொண்டவர்களாக மாறியுள்ள சம்பவங்கள்
பரிசோதனையாகப் பார்க்கப்பட்டுள்ளன.

மால்கம் எக்ஸ் ஒரு குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டவர். ஆனால் இஸ்லாமை அறிந்தபின் அவர் சிந்தனையாளர், சமூக மாற்றக் குரல் ஆக மாறினார்.

அவர் வாழ்க்கை ஒரு உண்மையைச் சொல்கிறது:

சிறை மனிதனை சீர்கெடுக்கவும் முடியும்; அல்லது சரியான இறைநம்பிக்கை இருந்தால் அவனை சீர்திருத்தவும் முடியும். உத்தமன் ஆக்கவும் முடியும்.

ஆக, இஸ்லாமிய இறைநம்பிக்கை சிறைவாசியை பயத்தால் கட்டுப்படுத்தவில்லை.
அறிவு, பொறுப்பு, நம்பிக்கை மூலம் அவனை மாற்றுகிறது.

 நீ கெட்டவன் அல்ல. நீ தவறிழைத்தாய். ஆனால் நீ திருந்த முடியும்.”

இந்தக் கோட்பாட்டை சிறைச் சீர்திருத்தத்தின் மையமாக்கினால், சிறைச்சாலைகள்
தண்டனை மையங்களாக அல்ல; மனிதனை மீட்டெடுக்கும் உண்மையான சீர்திருத்த மையங்களாக மாற முடியும்.

============= 

சிறைச்சாலைகளை ஏன் சீர்திருத்த வேண்டும்?

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

ரீல் (Reel) அல்ல ரியல் (Real)!


ரீல் அல்ல ரியல்!

நரகம் பற்றிய வர்ணனைகள் 

நரகம் என்பது இவ்வுலக வாழ்க்கையில் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்துவரும் தீயோர் மறுமையில் தண்டனை அனுபவிக்கப் போகும் இடம். அங்கு ஒரு நிருபர் நின்று கொண்டு அங்கு காணும் காட்சிகளை வர்ணித்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட வருணனைகளைத்தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் காண்கிறோம். இறைவன் என்பவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். 

நம் புரிதலுக்கு சொல்வதென்றால் இறைவன் முக்காலத்தையும் உணர்பவனும் காண்பவனும் ஆவான். நம்மைப் பொறுத்தவரை இவை நாளை நடப்பவை. ஆனால் இறைவனோ அவற்றை நேரடியாகக் காண்கிறான்.  அதனால்தான் திருமறையின் சில வசனங்கள் எதிர்காலத்தில் நடக்கப் போவதை அறிவிப்பது போலவும் மற்றும் சில நடந்துகொண்டு இருப்பதை அறிவிப்பது போலவும் இருப்பதை நீங்கள் காணலாம். உதாரணமாகக் கீழ்கண்ட வசனங்களைப் பாருங்கள்:

78:21-30. வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.

23. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்.

24. அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.

25. கொதி நீரையும், சீழையும் தவிர.

26. இது செயலுக்கேற்ற கூலி!

27. அவர்கள் விசாரணையை நம்பாதிருந்தனர்.

28. நமது வசனங்களை ஒரேயடியாகப் பொய்யெனக் கருதினர்.

29. ஒவ்வொரு பொருளையும் எழுத்தில் வரையறுத்துள்ளோம்.

30. சுவைத்துப் பாருங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டோம்.


56: 42-55 அவர்கள் (தீயோர்) அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.

44. அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.

45. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

46. பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்.

47, 48. ''நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

49, 50. ''முந்தையவர்களும், பிந்தையவர்களும் அறியப்பட்ட ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்'' என்று கூறுவீராக!

51, 52. பொய்யெனக் கருதிக் கொண்டு வழி கேட்டில் இருந்த நீங்கள் பின்னர், ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்பீர்கள்.

53. அதனால் வயிறுகளை நிரப்புவீர்கள்.

54. அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள்.

55. தாகம் கொண்ட ஒட்டகம் குடிப்பது போல் குடிப்பீர்கள்.

இறைவன் நம் அனைவரையும் நரக வேதனையில் இருந்து காப்பாற்றுவானாக!

=================

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

சிறைச்சாலைகளை ஏன் சீர்திருத்த வேண்டும்?

 குற்றங்களின் அதிகரிப்பு

NCRB வெளியிடும் Crime in India அறிக்கைகளின்படிஇந்தியாவில் அறிவிக்கப்படும் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனகுறிப்பாக IPC cognizable crimes (கொலைகொள்ளைபாலியல் குற்றங்கள்வன்முறை குற்றங்கள்) எண்ணிக்கையில் உயர்வு காணப்படுகிறது.

அதிலும் சைபர் குற்றங்கள் மிக வேகமாக உயர்ந்துள்ளனஆன்லைன் மோசடிஅடையாள திருட்டுடிஜிட்டல் பண மோசடிகள் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரிப்பதாக NCRB பதிவு செய்கிறது. நகரமயமாக்கல்தொழில்நுட்ப பயன்பாடுவேலைவாய்ப்பு அழுத்தம் போன்றவை இதற்குக் காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

மேலும்பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்புடைய குற்றங்கள் பல மாநிலங்களில் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. அதே நேரத்தில்பல குற்றங்களில் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் (recidivism) போக்கு இருப்பதும் ஒரு முக்கிய சிக்கலாக பதிவாகிறது.

சிறைகளின் மற்றும் சிறைவாசிகளின் அவலநிலை

NCRB புள்ளிவிவரங்களின் அடிப்படையில்

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள்இந்திய சிறைச்சாலைகள் தண்டனை மையங்களாக மட்டுமே செயல்படுவது போதாது என்பதை தெளிவாக காட்டுகின்றன. Prison Statistics India அறிக்கைகளின்படிஇந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் சுமார் 70–75% பேர் விசாரணைக்கைதிகள்குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலேயே நீண்ட காலம் சிறையில் இருப்பதுமனஅழுத்தம் மற்றும் விரக்தியை அதிகரித்துதிருந்தும் வாய்ப்பை குறைக்கிறது.

மேலும்பெரும்பாலான சிறைகள் கொள்ளளவை விட அதிகமாக நிரம்பியுள்ளன. Overcrowding காரணமாக அடிப்படை வசதிகள்கல்விமனநல ஆலோசனை போன்ற சீர்திருத்த முயற்சிகள் சரியாக வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சிறைவாசம் என்பது குற்றச் சிந்தனைகள் வளரக் கூடிய சூழலாக மாறுகிறது.

NCRB தரவுகள் சிறைகளில் மனநலப் பிரச்சினைகள்தற்கொலை முயற்சிகள் மற்றும் இயற்கையற்ற மரணங்கள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டுகின்றன. இது சிறைவாசிகள் எதிர்கொள்ளும் ஆழமான மன அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில்பெரும்பாலான கைதிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களிலிருந்து வருவதுகுற்றம் ஒரு சமூகப் பிரச்சினை என்பதையும் உணர்த்துகிறது.

ஆகவே, NCRB புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை இதுதான்:
சிறைச்சாலைகள் தண்டனை இடங்களாக அல்லமனிதனை மாற்றும் சீர்திருத்த மையங்களாக மாற வேண்டும்.


குற்றங்களின் அபாயகரமான அதிகரிப்பு

ஒவ்வொரு காவல் நிலையத்திலும்குற்றங்களின் அபாயகரமான அதிகரிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களைக் காட்டும் அட்டவணைகளையும் வரைபடங்களையும் நாம் காணலாம். இவை காவல் நிலையங்களில் பதிவானவை மட்டுமே. பதிவு செய்யப்படாதவை இன்னும் எவ்வளவு அதிகம் என்பது பற்றி நம்மால் ஊகிக்க  முடியும். மக்கள் இந்தச் சூழ்நிலையால் விரக்தியடைந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே! நாளுக்கு நாள் நிலைமை  மோசமாகி வருகிறது. இப்போது நம்மில் ஏறக்குறைய அனைவரும் இந்தச் சூழ்நிலையை மாற்ற ஏதாவது செய்ய விரும்புகிறோம்ஆனால் அதை எப்படிச் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம்.

சீர்கெடுக்கும் சிறைச்சூழல்

இன்றைய சிறை அமைப்பு பெரும்பாலான இடங்களில் குற்றவாளியை சீர்திருத்துவதற்குப் பதிலாக அவனை மேலும் சீர்கெடுக்கும் சூழலாக மாறியுள்ளது. இதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

1. சிறைச் சூழல் ஒரு குற்றம் கற்கும் பள்ளியாக மாறுதல்: சிறையில் சிறிய குற்றம் செய்தவர்கள் பெரும் குற்றவாளிகளுடன் கலப்பதால், புதிய குற்ற யுக்திகள், வன்முறை சிந்தனைகள் அவர்களுக்குள் வளர்கின்றன.

2. மனநல அழுத்தமும் கோபமும்- நீண்ட தனிமை, மரியாதையற்ற நடத்தல்,
எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவை மனதை கடுமையாக்கி திருந்தும் எண்ணத்தையே முற்றாக அழிக்கிறது.

3. அவமதிப்பு மற்றும் மனிதத் தன்மை இழப்புகுற்றவாளி” என்ற அடையாளம் மனித மதிப்பை சிதைக்கிறது. அவன் தன்னை சமூகத்தின் பகுதியென உணர முடியாமல் போகிறான்.

4, சீர்திருத்த வாய்ப்புகளின் பற்றாக்குறை- கல்விதொழில் பயிற்சி, மனநல ஆலோசனை போதிய அளவில் இல்லாததால், உள்ளார்ந்த மாற்றம் நிகழ்வதில்லை.

5. வெளியே வந்த பின் சமூக நிராகரிப்பு-  வேலைமரியாதை, புதிய தொடக்கம் கிடைக்காததால், மீண்டும் குற்றம் செய்வதே வாழ்வாதாரமாக மாறுகிறது.

 இதனால் இன்றைய சிறைச் சூழல் மீள் குற்ற உற்பத்தி நிலையமாக மாறி வருகிறது. சிறிய குற்றவாளிகளை பெரிய குற்றவாளிகளாக மாற்றுகிறது.

சிறைகளை சீர்திருத்த முடியுமா?

முடியும் என்கிறது நபிகளாரின் நடைமுறை! இந்த முயற்சியில் பொருள் ரீதியாகவோ அல்லது வேறு விதமாகவோ நமக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. குறைந்தபட்சம் பின்வரும் நன்மைகளையாவது பெறலாம்:

 சிறிய குற்றவாளிகளைப் பெரிய குற்றவாளிகளாக உருவாக்கும் சிறைச்சாலைகளின் தற்போதைய போக்கு முடிவுக்கு வரும். அதற்குப் பதிலாகநாட்டில் அமைதி மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்குப் பங்களிக்கக்கூடிய  திருந்திய குடிமக்கள் சிறைகளிலிருந்து வெளியே வருவார்கள். அவர்களை மேலும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தலாம்.

 சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கும்காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளையும்அவற்றில் உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களையும் பராமரிப்பதற்கும் செலவிடப்படும் பணத்தை அரசாங்கங்கள் சேமிக்க முடியும்.

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
=============    
திருக்குர்ஆன் நற்செய்திமலர் உங்கள் இல்லம்தேடி வர ₹180 சந்தா கட்டி  சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ்  https://wa.me/p/33176695991945755/918867298998

 

புதன், 31 டிசம்பர், 2025

புதிய ஆண்டு – புதிய மனிதன்


 
ஒவ்வொரு புதிய ஆண்டும் மனிதனின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிறுத்தமாக அமைகிறது.

கடந்த நாட்களை நினைவுபடுத்தி, எதிர்காலத்தை நோக்கி சிந்திக்க வைக்கும் ஒரு தருணம் அது. காலண்டரில் ஒரு வருடம் மாறுவது இயல்பான நிகழ்வு.
ஆனால் மனிதனின் சிந்தனை, பழக்கம், வாழ்க்கை நோக்கம் மாறவில்லை என்றால் அந்த “புதிய ஆண்டு” பெயரளவில் மட்டுமே புதியதாக இருக்கும்.

உலகம் புதிய ஆண்டை ஒன்றுகூடல், கொண்டாட்டம், கும்மாளம், இசை, மது அருந்துதல், பட்டாசு வெடித்தல், தீர்மானங்கள் என்ற அளவிலேயே பார்க்கிறது.
ஒரு இரவு உற்சாகம், ஒரு நாள் மகிழ்ச்சி— என எல்லாம் அன்றோடு முடிந்து விடுகிறது.
ஆனால் இஸ்லாம் புதிய ஆண்டை சுய பரிசீலனைக்கும் சீர்திருத்தத்திற்குமான வாய்ப்பாக பார்க்கிறது.
மனிதன் தன்னைத் தானே நேர்மையாகக் கேள்வி கேட்க வேண்டிய நேரமாக அதை மாற்றுகிறது.

திருக்குர்ஆன் மனிதனுக்கு மாற்றத்தின் அடிப்படை விதியை தெளிவாக அறிவிக்கிறது:

ஒரு சமூகத்தின் நிலையை அவர்கள் தாங்களே மாற்றாத வரை
இறைவன் அவர்களின் நிலையை மாற்றமாட்டான்.”
(திருக்குர்ஆன் 13:11)

இந்த வசனம் மாற்றம் வெளியில் இருந்து வராது, அது மனித உள்ளத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பதை உறுதியாகச் சொல்கிறது.
சிந்தனை மாறாமல் செயல் மாறாது. செயல் மாறாமல் வாழ்க்கை மாறாது.
அதனால்தான் உண்மையான மாற்றம் வெளிப்புற சூழலில் அல்ல—
உள்ளம் சார்ந்த சீர்திருத்தத்தில் இருக்கிறது.

மனிதன் பெரும்பாலும் வேலை, வசதி, சூழல் மாறினால் வாழ்க்கை மாறிவிடும் என்று நினைக்கிறான். ஆனால் உள்ளம் மாறாத வரை அந்த மாற்றங்கள் தற்காலிகமாகவே இருக்கும்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இதை தெளிவாகச் சொன்னார்கள்:
கவனியுங்கள்! மனித உடலில் ஒரு சிறிய துண்டு உள்ளது. அது சீரானால் முழு உடலும் சீராகும். அது கெட்டுப் போனால் முழு உடலும் கெடும்.
கவனியுங்கள்! அதுதான் உள்ளம் (கல்பு).”  (புகாரி, முஸ்லிம்)

  • புதிய மனிதன்” என்பவன் பிழையில்லாத மனிதன் அல்ல.
  • -    ஆனால் பிழையை உணர்ந்து திருந்த முயலும் மனிதன்.
  • -    அவன் நேரத்தை மதிப்பவன்.
  • -    கோபம், ஆசை, அகந்தை ஆகியவற்றை கட்டுப்படுத்த முயல்பவன்.
  • -    தனக்கு மட்டுமல்ல— குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பொறுப்புடன் வாழும் மனிதன்.

இந்த புதிய ஆண்டு நம்மிடம் ஒரு முக்கியமான முடிவை எதிர்பார்க்கிறது:
நாம் காலண்டரை மட்டும் மாற்றிவிட்டு கடந்து போகிறோமா?
அல்லது உள்ளத்தை மாற்றி அதன்வழி ஒரு புதிய மனிதனாக உருவாகப் போகிறோமா?

உண்மையான புதிய ஆண்டு அந்த தீர்மானத்திலிருந்தே தொடங்குகிறது.

  • தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டவன் நிச்சயமாக வெற்றி பெற்றான்.” (திருக்குர்ஆன் 91:9)

  • அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர்தாம் பெரும் பாவிகள் ஆவார்கள். (திருக்குர்ஆன் 59:19)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

=================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html