இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 ஜனவரி, 2026

இஸ்லாத்தைத் தழுவ வந்தும் திருப்பி அனுப்பப்பட்ட தோழர்

அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சி.
1512. அம்ர் பின் அபசா அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அறியாமைக் காலத்தில் வாழ்ந்தபோது மக்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள்; அவர்களுக்கென (வாழ்க்கை நெறி) எதுவும் கிடையாது; அவர்கள் சிலைகளை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணி (வருந்தி)னேன். இந்நிலையில் மக்காவில் ஒரு மனிதர் (புதிய) செய்திகளைச் சொல்லிவருவதாகக் கேள்விப்பட்டேன். எனவே, நான் எனது வாகனத்தில் அமர்ந்து அவரை நோக்கிச் சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமறைவாக இருந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய சமுதாயத்தார் அவர்களுக்கெதிரான துணிகரச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எனவே, நான் அரவமின்றி மெதுவாக மக்காவுக்குள் நுழைந்து அவர்களிடம் சென்றேன். அவர்களிடம் நான், "நீங்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "நான் ஒரு நபி" என்றார்கள். நான் "நபி என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "அல்லாஹ் என்னை (தனது செய்தியுடன்) அனுப்பி உள்ளான்" என்று கூறினார்கள். நான் "என்னென்ன செய்திகளுடன் அனுப்பியுள்ளான்?" என்று கேட்டேன். அதற்கு "இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும்; சிலை (வழிபாடு)களை ஒழிக்க வேண்டும்; இறைவன் ஒருவனே;அவனுக்கு இணையாக எதுவுமில்லை எனும் செய்திகளுடன் என்னை அனுப்பினான்" என்று பதிலளித்தார்கள். நான் "இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர் யார் உங்களுடன் இருக்கின்றார்கள்?" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒரு சுதந்திரவானும் ஓர் அடிமையும் உள்ளனர்" என்றார்கள். (அன்றைய நாளில் அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நபியவர்களை ஏற்று அவர்களுடன் இருந்தனர்).
"நானும் தங்களைப் பின்பற்ற விழைகிறேன்" என்று நான் கூறினேன். அதற்கவர்கள் "இந்த நாளில் அவ்வாறு உம்மால் என்னைப் பின்பற்ற இயலாது. எனது நிலையையும் மக்களின் நிலையையும் நீர் பார்க்கவில்லையா? (தற்போது) நீர் உம்முடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லும்! நான் எழுச்சி கண்டேன் என என்னைப் பற்றி நீர் கேள்விப்பட்டால் என்னிடம் வாரும்!"என்றார்கள். 

அதற்கேற்ப நான் என் குடும்பத்தாரிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்குச் சென்றுவிட்டார்கள். நான் என் குடும்பத்தாரிடம் இருந்துகொண்டே செய்திகளைக் கேட்டு அறிந்து கொண்டிருந்தேன். அவர்கள் மதீனாவுக்குச் சென்றவுடன் மக்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்தேன். 
ஒரு சமயம் யஸ்ரிப் (மதீனா)வாசிகளில் சிலர் என்னிடம் வந்தனர். அவர்களிடம் "மதீனாவிற்கு வந்துள்ள இந்த மனிதர் என்ன செய்துகொண்டிருக்கிறார்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "மக்கள் அவரை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றனர். (மக்காவில்) அவருடைய சமுதாயத்தார் அவரைக் கொன்றுவிடத் திட்டமிட்டனர். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்று கூறினர்.
நபியவர்களுடன் சந்திப்பு 
பின்னர் நான் மதீனாவுக்குச் சென்று நபியவர்களைச் சந்தித்தேன். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என்னை அடையாளம் தெரிகிறதா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம், மக்காவில் என்னை வந்து சந்தித்தவர்தாமே!" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். 
பிறகு "அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்துள்ள, எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும் போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போதுதான் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர். பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் (நண்பகல் நேரம்)வரைத் தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுது கொள்ளுங்கள்.

 அந்நேரத்தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ர்வரைத் தொழுதுகொள்க. பிறகு சூரியன் மறையும்வரைத் தொழுவதை நிறுத்திவிடுக! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்" என்று கூறினார்கள்.
அங்கத்தூய்மை பற்றி விசாரித்தல்:
நான், "அல்லாஹ்வின் தூதரே! அங்கத் தூய்மை (உளூ) செய்வது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரை நெருங்கி வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினால் அவரது முகம், வாய், மூக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (தண்ணீரோடு சேர்ந்து கீழே) விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் அல்லாஹ் உத்தரவிட்டதைப் போன்று தமது முகத்தைக் கழுவினால் அவரது முகத்தால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது தாடி ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் மூட்டுவரை இரு கைகளைக் கழுவும்போது அவருடைய கைகளின் பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் ஈரக் கையால் தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்தி)டும் போது அவரது தலையின் பாவங்கள் அனைத்தும் தலைமுடியின் ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் தம் பாதங்களைக் கணைக்கால்கள்வரைக் கழுவும்போது அவரது கால்களால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. (அதற்குப் பிறகு) அவர் எழுந்து தொழும்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்றதைக் கூறிப் புகழ்ந்து பெருமைப்படுத்தித் தமது உள்ளத்தில் இறைவனுக்கு மட்டுமே இடமளித்தால் அவர் திரும்பிச் செல்கையில் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கி (பரிசுத்தமாகத்) திரும்புகிறார்" என்று கூறினார்கள்.
)இதன் அறிவிப்பாளரான) நபித்தோழர் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியபோது நான், "அம்ர் பின் அபசா! என்ன சொல்கிறீர்கள் என்பதை நன்கு யோசித்துச் சொல்லுங்கள்! ஒரே இடத்தில் (இத்தனையும்) அந்த மனிதர் வழங்கப்பெறுகிறாரா?" என்று கேட்டேன். அதற்கு அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள், "அபூஉமாமா, என் வயது முதிர்ந்துவிட்டது; எனது எலும்பு நலிந்து விட்டது; எனது தவணை நெருங்கி விட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் மீதோ அவன் தூதர்மீதோ பொய்யுரைப்பதற்கு எனக்கு எந்தத் தேவையுமில்லை. நான் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை (இவ்வாறு ஏழுவரை எண்ணிச் சொல்கிறார்) மட்டுமே செவியுற்றிருந்தால் இதை ஒருபோதும் நான் அறிவித்திருக்கமாட்டேன். ஆனால்,அதைவிட அதிகத் தடவைகள் நான் செவியுற்றேன் (அதனால்தான் அறிவித்தேன்)" என்றார்கள்.
Book : 
(முஸ்லிம்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக