இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 டிசம்பர், 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2019  இதழ் 
இந்த இதழ் உங்கள் இல்லம் தேடிவர உங்கள் தெளிவான முகவரியை 9886001357  என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்
பொருளடக்கம்:
மனித இனம் பூமிக்கு வந்த வரலாறு -2
மறுமை நாளில் பயனளிக்கும் நற்குணம் -7
கூடவே வந்த ஷைத்தான்! -8
ஷை த்தானில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்! -10
பரீட்சையே வாழ்க்கை என்பதை ஏற்காதோருக்கு இழப்பே! -12
நேரடியாக சொர்க்கத்தில் போட்டால் குறைந்தா போய்விடும்? -14
நபிகளாரின் முதுகில் ஈச்சங்கயிற்றின் சுவடு! -16
உலகமெனும் பரீட்சைக் கூடத்தின் இயல்புகள் -17
இப்படியும் சோதனைகள் வருவதுண்டு! -18
சோதனைதான் வாழ்க்கை என்று புரிந்துகொள் மனமே! -19
கொடுங்கோல் அரசனுக்கு முன் துணிச்சல் -20
நபிகளாரை விரட்டிய பெண்மணி -21

முகநூல் கருத்துப் பரிமாற்றம் -20

திங்கள், 2 டிசம்பர், 2019

பரீட்சையே வாழ்க்கை என்றிரு மனமே!



Image result for தூக்கு கயிறு"     நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை ஒரு பரீட்சை என்று உணர்பவர்கள் அனாவசியமான மன உளைச்ச்சல்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். வாழ்க்கையில் தோல்விகளையும் இழப்புகளையும் கண்டு துவண்டு போவதில்லை, தற்கொலைகளில் தஞ்சம் புகுவதில்லை. எந்த மாதிரியான சூழ்நிலைகள் எதிர்வந்தபோதும் சுதாரித்துக்கொண்டு முன்னேறுகிறார்கள். பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டிய அடிப்படை பாடங்களில் ஒன்று இது. ஆனால் பகுத்தறிவு என்ற பெயரில் அறவே நிரூபிக்கப்படாத அறிவியல் ஊகங்களைக் கோர்வையாக்கி படைத்தவனை மறுக்கும் பாடங்களைத்தான் இன்று கல்விக் கூடங்களில் போதிக்கிறார்கள். அதன் காரணமாக தன்னம்பிக்கை அறவே இல்லாத மாணவர்களாக பலர் வளர்கிறார்கள். சிலர் ஒன்றோ இரண்டோ மதிப்பெண் குறைந்தாலும் கூட  தற்கொலைகளில் தஞ்சம் புகுவதையும் நாம் கண்டு வருகிறோம். இனியாவது உருப்படியாக பகுத்தறிவை பயன்படுத்தி நம் தலைமுறைகளைக் காக்க முயற்சிப்போம்.

வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையே என்பதை அறிந்து கொள்ள பெரும்பெரும் ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. ஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்தித்தாலே அனைத்தும் விளங்கும். நாமாக நாம் இங்கு வரவில்லை என்பது உண்மை!
நமது, நிறம், மொழி, நாடு, தாய், தந்தை, உறவுகள் இவை எவையும் நாமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அமைந்தவை அல்ல என்பதும் உண்மை!
நமது என்று நாம் சொல்லிக்கொள்ளும் உடல், பொருள், ஆவி என இவை எவையும் நமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதும் உண்மை! இவற்றுள் ஆவி அல்லது உயிர் என்பது பறிக்கப்பட்டால் மற்ற அனைத்தும் நம்மைக் கைவிட்டுப்போகும் நிலைமை உள்ளதை அறிவோம். உடல் என்ற கூட்டுக்குள் நாம் வந்ததும் இதை விட்டுப் பிரிவதும் நம்மைக் கேட்டு நடப்பவை அல்ல என்பதையும் அறிவோம்.
ஒரு அற்ப இந்திரியத் துளியில் இருந்து தொடங்கி படிப்படியாக பல கட்டங்களைக் கடந்து கருவாக உருவாகி கருவறையில் சொகுசாக வளர்ந்து உரிய பக்குவம் அடைந்த பின் குழந்தையாக வெளிவந்து தொடர்கிறது நம் ஒவ்வொருவரதும் வாழ்க்கைப் பயணம்! ஆக, எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. இவற்றோடு இவற்றின் பின்னணியில் உள்ள இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இவற்றைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நமக்கு உணர்த்தவில்லையா?. திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
2:164  .
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்;  இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்;  வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
(
அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? இதையே இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் கேட்கிறான்:
23:115. “
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” 
அவ்வாறு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது  செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.
இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு  விதிக்கப்பட்ட  தவணையில்  வந்து போகிறோம். இங்கு  இறைவனின் கட்டளைகளுக்குக்  கீழ்படிந்து  செய்யப் படும்  செயல்கள்  நன்மைகளாகவும் கீழ்படியாமல்  மாறாகச்  செய்யப்படும்  செயல்கள்  தீமைகளாகவும்  பதிவாகின்றன. இவ்வாறு  ஒவ்வொருவருக்கும்  நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும்  வாய்ப்பும் அளிக்கப்படும்  இடமே  இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்!.

= உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2)
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)
=============== 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

வியாழன், 14 நவம்பர், 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் 
 இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.
பொருளடக்கம் :
கீழடி அகழாய்வு கற்பிக்கும் பாடங்கள் -2
இறைவழிகாட்டுதல் இன்றி ஒழுக்க வாழ்க்கை இல்லை! -4
நபிமொழிகள் -5
இறைத்தூதர்கள் அங்கே வந்திருக்க வேண்டும்! -6
இயற்கை அல்ல.. இறைவனே வணக்கத்திற்குரியவன்!-8
இறையச்சம் நிகழ்த்தும் விந்தை -10
இயற்கையைக் கண்டு இறைவனை அறிவீர்! -11
மறுமை வாழ்வே நிலையானது -13
தன்மான உணர்வை மீட்டெடு தமிழா!-15
பண்டைத் தமிழர் மதம் இஸ்லாமா? -17
இஸ்லாம் என்றால் உண்மையில் என்ன? -18
திருமூலரின் சொற்களை மெய்பிக்கும் இஸ்லாம் -20

மனமாற்றமும் குணமாற்றமும் - தொழுகை வாயிலாக -23


வெள்ளி, 1 நவம்பர், 2019

நாம் இங்கு வந்ததன் பின்னணி

மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்ன என்பதை நாம் ஊகித்துதான் அறிய முடியும். ஏனெனில் நாம் அப்போது இருக்கவில்லை. இந்த விஷயத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் ஏதும் சொல்வதாக இல்லை. அதே நேரத்தில் அதிநுட்பங்கள் வாய்ந்த இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டு அதிநுட்பங்கள் வாய்ந்த ஒரு உடலுக்குள் இருந்து கொண்டு 'எல்லாமே தற்செயல்' என்று பிதற்றுவது அறியாமையின், சிந்தியாமையின் சிகரம்!
இனி பூமியின் மீது மனித தோற்றம் பற்றி வேறு யார் எதைக் கூறினாலும் நம்பினாலும் அவை உறுதியற்ற ஊகங்களாகவே அமையும். இந்நிலையில் இவ்வுலகையும் மனிதர்களையும் இன்னபிற ஜீவிகளையும் படைத்தவன் எவனோ அவன் நமக்கு எதைச் சொல்கிறானோ அது மட்டுமே உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை சிந்திப்போர் அறியலாம். அதை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகுவதே அறிவுடைமை. இன்னும் அதுவே நம் வாழ்க்கையின் உண்மைக் குறிக்கோளை அறியவும் அதை பயனுள்ள முறையில் செலவிடவும் உதவும்.
அந்த வகையில் நாம் பூமிக்கு வந்த வரலாற்றை இன்று உறுதியான முறையில் அறிய  நமக்குத்  துணை  நிற்பது  இறுதிவேதம் திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கூற்றுக்கள் மட்டுமே. அதற்கான சில முக்கிய காரணங்கள் உள்ளன: 
= இறைவனிடமிருந்து அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி அவர்கள் மூலமாக வந்த திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகள் ஆகியும் மூல மொழியிலேயே உலகெங்கும் ஒரே போல பாதுகாக்கப்பட்டு வருகிறது.
=  இலட்சக்கணக்கான மக்களால் மூலமொழியிலேயே அந்த வசனங்கள் மனப்பாடமும் செய்யப்பட்டு உள்ளதால் எந்த ஒரு மாற்றங்களுக்கும் அது இரையாவதில்லை.
=  நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடும் வரலாற்று உண்மைகளோடும் அற்புதமான முறையில் பொருந்திப் போகிறது.
= அரபு மொழியில் அதன் உயர்ந்த இலக்கியத் தரம், அதன் தீர்க்கதரிசனங்கள் மெய்ப்பிக்கப்பட்டு வருதல், வசனங்களின் முரண்பாடின்மை, அறிவியல் வளர்ச்சியால் புதிதுபுதிதாக கண்டுபிடிக்கப்படும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளோடு முரண்படாமை  இன்னும் இவைபோன்ற பல அற்புத குணங்களால் திருக்குர்ஆன் தன்னை ஒரு முழுமையான நம்பத்தகுந்த இறைவேதம் என்பதை நிரூபித்து வருகிறது. இது பற்றிய ஐயம் நீங்க இதைப் படியுங்கள்: 

நமது பின்னணியை அறியும் முன்..
இறைவேதம் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறியக் கிடைக்கும் பூமியில் நமது தோற்றத்தின்  வரலாற்று சுருக்கத்தினை நாம் கீழே காண இருக்கிறோம்.  இது தொடர்பான திருக்குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் வாசகர்களாகிய  நாம் நமது நிலையைப் பற்றி சற்று நினைவுகூர வேண்டும்:
மனிதனின் அற்ப நிலை
= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே. ஒரு அற்பமான இந்திரியத்துளியிலிருந்து உடல் பெற்று உருவாகி வளர்ந்து மறையக் கூடியவர்கள் நாம்.
= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை. மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
= நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படி நடப்பது அல்ல.
= மனித குலத்தின் ஒட்டு மொத்த அறிவு என்பது நமது முன்னோர்கள் இதுவரைத் திரட்டித்தந்தவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக பகுத்தறிந்தவை, மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டவை, நாம் சுயமாக ஐம்புலன்களின் வாயிலாக அறிந்த தகவல்களை வைத்து பகுத்தறிந்தவை என பலவும் அவற்றில் அடங்கும். இவை ஒட்டுமொத்தத்தையும் ஒரே இடத்தில் திரட்டினாலும் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான அறிவு என்று கூற சற்றும் வாய்ப்பே இல்லை. அறிந்தது துளியளவு அறியாதது கடலளவு என்பது கூட மிகைப்படுத்தப்பட்ட உண்மையே!
திருக்குர்ஆன் வசனங்களின் இயல்பு
= அடுத்ததாக திருக்குர்ஆன் வசனங்கள் என்பவை இவ்வுலகைப் படைத்தவனால் அவனது  பரந்த அறிவில் இருந்து பகிரப்படுபவை. இம்மாபெரும் பிரபஞ்சத்தில் அற்பமான தோற்றமும் அற்பமான ஆயுளும் கொண்ட மனிதர்களாகிய நமக்கு இந்தக் குறுகிய பரீட்சை வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கூறுகிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் நமக்கு வாய்த்துள்ள அற்ப அறிவுக்கு எட்டாத பல விடயங்களும் இங்கு கூறப்படும் போது அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்வதே அறிவுடைமை. மாறாக நமது அற்ப அறிவைக் கொண்டு இவ்வுலக நடைமுறையோடு ஒப்பிட்டு அவை அறிவுக்குப் பொருந்தாதவை என்று வாதிடுவது வாதியின் அறிவீனத்தையே பறைசாற்றும் என்பதை நாம் அறியவேண்டும்.
மீண்டும் நினைவு கூருவோம். கீழ்கண்ட நிகழ்வுகள் நமது அறிவு எல்லைக்கு அப்பால் நடந்தவை. நமக்குப் பழகிய நிகழ்வுகளோடு ஒப்பீடு செய்து அல்லது நமக்கு எட்டிய அற்ப அறிவைக் கொண்டு இவற்றை ஒப்பீடு செய்து அணுகினால் அது குழப்பத்தையே தரும்.
பதங்கள் விளக்கம்:
வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக கீழ்கண்ட வசனங்களில் இடம்பெறும் சில பதங்கள் பற்றிய சுருக்கமான விளக்கங்கள் வருமாறு: 
அல்லாஹ்: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனைக் குறிக்கும் சொல். இதன் பொருள் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது.
வானவர்கள் அல்லது மலக்குகள் : வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். (அரபு மொழியில் ‘மலக்கு’கள் என்று வழங்கப்படும்) அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் இறைவனின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்.
ஜின்கள்: மனிதர்களைப் போலவே பகுத்தறிவும் விருப்ப உரிமையும் கொடுக்கப்பட்ட இனம். நெருப்பின் சுவாலையில் இருந்து படைக்கப்பட்டவர்கள்.  மனிதர்களைப் போலவே ஆண் பெண் மற்றும் சந்தானங்கள், நல்லவர்கள் கெட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மற்றும் அல்லாதவர்கள் என இவர்களுக்குள்ளும் உள்ளனர்.
= வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்)
இப்லீஸ் மற்றும் ஷைத்தான்:
ஷைத்தான்கள் என்பவை ஜின் இனத்தைச் சேர்ந்தவை. இப்லீஸ் என்ற நபரின் வழித்தோன்றல்கள் தான் ஷைத்தான்கள். இப்லீஸ் என்பவன் தனி நபர். அந்தத் தனிநபரின் மூலம் உருவான கெட்ட சந்ததிகள்தாம் ஷைத்தான்கள். மனித மற்றும் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களின் மனங்களில் ஊசலாட்டத்தையும் தீய எண்ணங்களை விதைப்பதற்கு சக்தி பெற்றவர்கள் ஷைத்தான்கள்.
ஆதம்: முதல் மனிதரின் பெயர்.
மேற்கூறப்பட்ட எந்த இனங்களும் மனிதனின் தற்போதைய நிலையில் அவனது கண்களுக்குப் புலப்படாதவை என்பதையும் அவை அனைத்தும் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்னரே படைக்கப்பட்டவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனைப் படைப்பதற்கு முன் நடந்த உரையாடலை நாம் கீழ்கண்டவாறு திருக்குர்ஆனில் காண்கிறோம்:

மனிதனின் படைப்புக்கு முன்னர்
2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
2:33. “ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
2:34. பின்னர் நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன் (இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் சத்தியமறுப்பாளர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
மேற்கண்ட வசனங்களில் இருந்து முதல் மனிதர் ஆதமுக்கு இறைவன் மற்ற இனங்களுக்கு வழங்காத அறிவை வழங்கி அவரை சிறப்பித்ததையும் அவருக்கு மரியாதை செய்யுமாறு மற்ற இனங்களை ஏவியதையும் இப்லீஸைத் தவிர மற்றவர்கள் யாவரும் சிரம் பணிந்ததையும் நாம் அறிகிறோம். வானவர்கள் எவ்வாறு மனிதர்கள் குழப்பம் விழைவிப்பவர்கள் அல்லது இரத்தம் சிந்துபவர்கள் என்பதை அறிந்து கொண்டார்கள் என்ற விடயம் நமக்குப் புதிராக இருக்கலாம். ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருந்த ஜின் இனங்களின் செயல்பாடுகளைக் கண்டும் அவர்கள் அக்கேள்வி எழுப்பி இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது வழியில் இறைவனால் அவர்களுக்கு அதுபற்றிய அறிவு கொடுக்கப்பட்டு இருப்பதற்கும் வாய்ப்புண்டு. (இன்றுதான் ஒரு பொருளை தயாரிப்பதற்கு முன்னரே அதன் கம்ப்யுட்டர் ப்ரோடோடைப் செய்து அதைப் பற்றி கம்பெனிகள் விவாதிக்கும் முறையை அறிவோமே). இறைவனே மிக அறிந்தவன்.
சொர்க்கத்தில் குடியிருத்தல்
தொடர்ந்து நடந்தவற்றை கீழ்கண்ட வசனங்களில் காண்கிறோம்.
7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப் பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
7:21. “நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.
7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
 சொர்க்கத்தில் இறைவன் புசிக்க வேண்டாம் என்று தடுத்த கனியை ஷைத்தானின் தூண்டுதலால் புசித்த பின் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள் நமது ஆதி தந்தையும் தாயும். பிறகு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினர். திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அவை என்ன வார்த்தைகள் என்பதை கீழ்கண்ட வசனம் கூறுகிறது:
7:23. அதற்கு அவர்கள், “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”  என்று கூறினார்கள்.
இறைவன் மன்னித்ததைத் தொடர்ந்து மனித இனம் பூமியில் குடியேற்றப்பட்டது. ஒரு தற்காலிகமான குறுகிய கால வாழ்க்கையை ஆதம் - ஹவ்வா தம்பதியினரும் அவர்களின் வழித்தோன்றல்களும் இங்கு கழிக்க இறைவன் பணித்தான்.
7:24. (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.
7:25. “அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
பூமி வாழ்க்கையை ஒரு பரீட்சை வாழ்க்கையாக இறைவன் அமைத்துள்ளான். இதில் இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்பவர்கள் இந்தப் பரீட்சையில் வெல்கிறார்கள். அவர்கள் மீண்டும் சொர்க்கத்திற்குள் நுழைகிறார்கள். இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் புறக்கணித்து வாழ்வோருக்கு நரகம் தண்டனையாக வழங்கப் படுகிறது. 
2:38. நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
2:39. அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்து, எம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்; அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்!”
 இதுதான் நாம் பூமிக்கு வந்ததன் சுருக்கமான வரலாறு!
================= 

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?


சனி, 26 அக்டோபர், 2019

தன்மான உணர்வை மீட்டெடு தமிழா!

Image result for கீழடி
மண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று
மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று..
அறிவியலும் பொறியியலும்
உன் காலடியில் அன்று
அழியாத சுவடுகளாய் கீழடியில் இன்று
தன்னிறைவாய் தலைநிமிர்ந்து நீ நடந்தாய் என்று
கீழடிச் சுவடுகள் கூறுதே இன்று..

தலைவனுக்கும் தலைவிக்கும் சிலை வடித்து அன்று
காலடியில் நீ வீழ்ந்த கதையில்லை அங்கு.
சிலைவணக்கம் சாதி வழக்கம் எதுமில்லை அன்று
சிரவணக்கம் இறைவனுக்கு மட்டுமே என்று
தன்மான உணர்வோடு வாழ்ந்தாய் நீ என்று
கீழடிச் சுவடுகள் கூறுதே இன்று

தனக்குவமை இல்லாதான் தாள்தனையே பணிந்தாய்..
உனைப் படைத்த இறைவன் ஒருவனையே தொழுதாய்..
தன்மான உணர்வோடு தலை நிமிர்ந்து வாழ்ந்தாய்
தரணியாளும் தமிழனாய் நீ வலம் வந்த வேளை
சிலை வணக்கம் புகுத்தியது யார் செய்த வேலை?
தலை குனிந்தாய் தரம் தாழ்ந்தாய்
அடிமையாய் நின்றாய்!
தலை குனிந்தாய் தரம் தாழ்ந்தாய்
அடிமையாய் நின்றாய்!

உலகாளப் பிறந்தவனே உடன்பிறப்பே..
உனைப் படைத்த இறைவன் ஒருவனன்றி
உனையாள ஒருவருக்கும் உரிமையில்லை..
உயிரிலா உருவங்கள் கடவுளாகா
உணர்விலா வடிவங்கள் கடவுளாகா
தான்தோன்றித் தலைவர்களும் கடவுளாகார்
திரை தோன்றி நடிகரும் கடவுளாகார்
மறைந்திட்ட மனிதரும் கடவுளாகார்
மண்ணடியில் சவங்களும் கடவுளாகா
கீழடிக்கும் கீழாக நீ புதைபடும் முன்
உனை உணர்ந்து செயல்பட நீ வா!

‘இன உணர்வு கொள்’ என்று அழைத்தோர்கள்
‘இல்லை கடவுள்’ எனக்கூறி பிழைத்தோர்கள் –
புலிகள் சிறுத்தைகள் பூச்சாண்டிகள்
கொள்கை இல்லா கும்பல்களின்
தொல்லை இனிவேண்டாம் புறப்படு நீ வா!

தரை ஊரும் படர்கொடியா தமிழா நீ?
தலை நிமிர்ந்து தனிமரமாய் நின்றிட நீ வா!
திரைமோகம் உனைக் கெடுத்த விதமிதுவே
கட்சிகள் உனை வளர்த்த கதை இதுவே!
புரை முற்றி மண்மூடி புதைத்திடும் முன்
கரை சேர வழியுண்டு புறப்படு நீ வா!

திரையுலகம் உனைத் தின்று கொழுத்தது போதும்
கட்சிகள் உனை மென்று உமிழ்ந்தது போதும்.
தீண்டாமைத் தீயில் நீ வெந்தது போதும்
சாதிக் கொடுமைகளை சகித்தது போதும்
சாதிக்கப் பிறந்தவனே புறப்படு நீ வா!

தனிமனித உரிமையும் உனக்குண்டு
தரணியாளும் தகுதியும் உனக்குண்டு.
தன்மான உணர்வொன்று இல்லையெனில்....
தனி நாடும் ஈழமும் உனக்கெதற்கு?
தரமான கொள்கையேதும் இல்லையெனில்
தனி நாடே கைவரினும் என்ன பயன்?

தனி இனம் தனி மனிதப் புகழ்பாடி
தரணியாளப் பிறந்தவனே தாழ்ந்து விட்டாய்
தமிழன் என்ற வட்டத்தில் குறுகி விட்டாய்
தரணியெங்கும் வாழ்வது நம் இனமே
தமிழதன் மொழிகளிலே ஓர் மொழியே
தவறுணர்ந்து திருந்திடவே தமிழா நீ வா!

ஒன்றே குலமென்று ஒலித்ததும் தமிழேதான்
ஒருவனே தேவன் என்று ஓதியதும் தமிழேதான்
யாதும் ஊரென்று பாரென்றதும் தமிழேதான்
யாவரையும் கேளிரென்று அணைத்ததும் தமிழேதான்!
பாரெங்கும் உன்னுறவுகள் காத்திருக்க
யார் சொல்லி நீ பிரிந்தாய் தமிழனென்று?

இனியோர் விதி செய்வோம் புறப்படு நீ!
தனியே தமிழனென்று பிரியாமல்
தரணியே நமதென்று வாழ்ந்திடுவோம்!
தனக்குவமை இல்லாதான் தாள் பணிவோம்!
இணையில்லா இறைவன் ஒருவனன்றி
இனி யார்க்கும் தலைவணங்க மறுத்திடுவோம்.
தன்மான உணர்வோடு தலை நிமிர்வோம்!
கண்போல மானுடம் காத்திடுவோம்!
உனக்கிழிவு நீங்கிடுமே இமைப்பொழுதில்..
இன இழிவும் நீங்கிடுமே எமைப் போலே!

- உன் இஸ்லாமிய உடன்பிறப்புக்கள் 
--------------------- 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 

பொறுமை - தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்!


Image result for பொறுமை

பொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலாம். இன்றும் உலக மக்கள்தொகையில் கால்வாசி அவரைக் கண்ணில் காணாமலேயே உயிருக்குயிராக நேசித்து வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்வதுதான் – அதாவது இஸ்லாம்தான்- இம்மைக்கு அமைதியையும் மறுமையில் மோட்சத்தையும் பெற்றுத்தரும் என்பதை உறுதியாக அறிந்த நபிகளார் மக்களை எப்பாடுபட்டேனும் காக்கவேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்டார்கள். அவர் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து அல்லும் பகலும் சத்தியப் பிரச்சாரத்திற்காகப் பாடுபடலானார்கள். மக்களின் புறக்கணிப்பு அவரைக் கவலையில் ஆழ்த்தியது. ஆனால் மக்கள் புறக்கணித்த போதும் பரிகாசம் செய்தபோதும் துன்புறுத்தியபோதும் தன் சத்தியப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. அவரது ஆர்வத்தைப் பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
 = (நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே! (திருக்குர்ஆன் 18:6) 

நபிகளாரின் தொலைநோக்கு
பூமியில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற உறுதியோடு பாடுபடுபவர்களுக்கு நபிகளாரின் வாழ்வில் அழகிய முன்மாதிரி உள்ளது. 
"எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்."(திருக்குர்ஆன் 7:199)  எனும் இறைக் கட்டளைக் கேற்ப நபிகளார் பொறுமையையும் மன்னித்தலையுமே தன் ஆயுதங்களாக எடுத்துக் கொண்டார்கள்.  
அவரது இலக்கு மக்களைக் காத்து அவர்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதாக இருந்தது. அதற்கான முயற்சியின்போது அந்த மக்கள் எப்படிப்பட்ட கடுமையான தாக்குதல்கள்  நிகழ்த்தினாலும் அவர் தம் குறிக்கோளில் இருந்து பின்மாறவில்லை.  
உதாரணமாக கீழ்கண்ட சம்பவத்தைப் பாருங்கள்:
= மக்காவிற்கு அருகே இரு மலைகளுக்கு இடையே அமைந்திருந்த தாயிப் நகரில் தனது சத்தியப் பிரச்சாரத்திற்காக சென்ற போது மிக மிகக் கடுமையாக கல்லால் அடித்துத் துரத்தப் பட்டார்கள் நபிகளார். இரத்தம் தோய்ந்த உடலோடு கண்ணீர் மல்க இறைவனிடம் பிரார்த்தித்தார் நபிகளார். உடனே தனது வானவர்களை அனுப்பிவைத்தான் இறைவன். “ஆணையிடுங்கள் நபியே, உங்களை வேதனைக்குள்ளக்கிய இவ்வூர் மக்களை இம்மலைகளுக்கிடையில் நசுக்கிவிட நாங்கள் தயார்!” என்றார்கள் வானவர்கள். ஆனால் கருணை வடிவான நபிகளார் என்ன சொன்னார்கள் தெரியுமா? “இன்று இவர்கள் ஏற்காவிட்டாலும் இவர்களின் தலைமுறைகளில் இருந்து நாளை நல்லோர் உருவாவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறி அவர்களைத் தடுத்தார்கள்.
இதை வெறும் பொறுமை என்றால் போதாது. அதி தீவிரமான மனித நேயம் என்றல்லாவா சொல்ல வேண்டும்!
மக்களை அழிப்பதல்ல திருத்தி எடுப்பதே நோக்கம் 
நபிகளார் நமக்குக் கற்பிக்கும் பாடம் என்னவென்றால்,  இங்கு தாக்குபவர்கள் நமக்கு எதிரிகளே அல்ல. அவர்களைப் பீடித்துள்ள ஷைத்தான்தான் நமக்கு எதிரி. பொறுமை மூலமும் விவேகத்தைக் கைக்கொள்வது மூலமும்தான்  இம்மக்களைத் திருத்தியெடுத்து நேர்வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார்கள் அண்ணல் நபிகளார்.
 தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது நபிகளார் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா? இதோ உடம்பு முழுக்க இரும்புக் கம்பியால் சூடிடபட்ட வடுக்களைத் தாங்கிய நபித்தோழர் கபாப்(ரலி) அவர்கள் பிற்காலத்தில் கூறுகிறார்கள்:  
= “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (இறைவனிடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?  என்று கேட்டோம்.
 அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏக இறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும்.
ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிரழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள்தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி) நூல்: புகாரி)
ஆம், தர்மத்தை பூமியில் நிலைநாட்ட உறுதியான கொள்கைப் பிடிப்பும் அளவுகடந்த பொறுமையும் தேவை என்பதையே எடுத்துரைக்கிறார்கள்.
------------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
அல்லாஹ் என்றால் யார் ?