இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 ஜனவரி, 2015

நோயும் மருந்தும் ஈயில் உண்டு!

நோயும் மருந்தும் ஈயில் உண்டு!
ஈயைப்பற்றிய இரண்டாவது அறிவியல் உண்மையை நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
“ உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கி அமிழ்த்தட்டும் பிறகு அதை வெளியில் எடுத்துப் போட்டு விடவும்; ஏனெனில் ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும், மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது.” -அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). புஹாரி.3320.
பொதுவாக ஈயானது அசிங்கமான, சுகாதாரக்கேடான இடங்களிலும் கழிவுப் பொருள்கள் தேங்கும் இடங்களிலும் அதிகம் இருக்கும். கிருமி தாக்குதலுக்குறிய இடங்களில் வசித்தாலும் அவைகளினால் ஈக்கள் இறப்பதில்லை. மேலும் ஈயினால் சுமார் 100 வகையான நோய்கள் (Pathogens) பரவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஆனாலும் ஈக்களின் உடலிலேயே இறைவன் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வைத்திருப்பதால் அவைகள் பாக்டீரியா, மற்றும் வைரஸ் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை.
ஆக, ஈயானது நோயை கொண்டு செல்லும் அதே நேரத்தில் அந்நோய்க்கான பரிகார நிவாரணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இருந்து பெற்ற செய்தி மூலம் அன்றே குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வுண்மையை இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம், வார அறிவியல் (22,oct.2014) இதழ்களில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டனர். அதாவது ஈயின் மரபணு முழுவதையும் ஆராய்ந்து பார்த்ததில் மனிதர்களை நோய் தாக்குவதிலிருந்து காப்பாற்றும் நோய் எதிர்ப்பு வழிமுறை ஈயின் மரபணுவில் இருப்பதாக அறிவித்தனர்.
“House fly genome offers clue to human sickness”-By Michelle Roberts Health editor, BBC News online-16 oct.2014.
“House fly genome reveals expanded immune system”- By Krishna Ramanujan
CORNEL CHRONOCLE-Cornel University. October 22, 2014
http://www.sciencedaily.com/releases/2014/…/141014170843.html
இதுவரை அறியப்பட்டுள்ள மனித நோய்களின் மரபணுகளில் நான்கில் மூன்று பங்கு மரபணுக்கள் இந்த ஈயின் மரபணுக்களுடன் ஒத்துள்ளன. இந்த ஈக்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் உறங்கச் செல்கின்றன; மயக்க மருந்துக்கு மனிதர்களைப் போலவே எதிர்வினையாற்றுகின்றன. அனைத்துக்கும் மேலாக மிக விரைவாக இனப்பெருக்கம் செய்கிறது. ஒரு பதினைந்து நாட்களுக்குள் முற்றிலும் புதியதொரு தலைமுறையை உருவாக்குகிறது.
அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம், ஆறு பெண் ஈக்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அவைகளின் 15345 ஜீன்களை பிரித்து வகைப்படுத்தினர். இவற்றுள் நோயை பரப்பும் ஜீன்கள் (animal pathogens) மற்றும் நோய் எதிர்ப்பு ஜீன்களை (Immune system & Detoxification genes) ஆய்வு செய்தனர். வீட்டு ஈயின் குடும்பத்தைச் சார்ந்த பழ ஈ (Fruit Fly) ன் நோய் எதிர்ப்பு ஜீன்களைக்காட்டிலும் வீட்டு ஈயின் நோய் எதிர்ப்பு ஜீன்கள் மிக அதிகளவில் இருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
Detoxification என்று சொல்லப்படும் (cytochrome P450 genes) ஜீன்கள் பழ ஈயில் 85 மட்டுமே உள்ளது. நமது வீட்டு ஈயில் இந்த ஜீன்கள் 146 உள்ளது. அது மட்டுமல்லாமல் அளவில் ஐந்து மடங்கு மிகப்பெரியதாகவும் இருந்தது. ஈயின் நோய் எதிர்ப்பு ஜீன் மற்றும் விஷமுறிவு ஜீன்களை தனியாக பிரித்தெடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு வரக்கூடிய நோய்களை தடுப்பதற்கும் மற்றும் சுகாதாரக் கேடான இடங்களில் உருவாகும் கிருமிகளை கட்டுப்படுத்தவும் இவை பெரிதும் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். (http://genomebiology.com/2014/15/10/466)
இறைவனின் தூதர் அன்று சொன்னது இன்று அறிவியல் அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு ஈ உண்ணும் முறையை அதாவது உணவுப்பொருளை நீர்ம கூழாக்கி நேரடியாக வயிற்றுக்கு அனுப்பும் செய்தியையும், அதன் உடலில் நோய் எதிர்ப்பு மற்றும் விஷமுறிவு நிவாரணியும் உள்ளது என்பதை படைத்த இறைவனைத் தவிர வேறு எவரும் அறிவிக்க முடியாது.
“நிச்சயமாக இரவும்,பகலும் மாறி வருவதிலும், வானங்களிலும்,பூமியிலும் இறைவன் படைத்துள்ள அனைத்திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.” – (திருக்குர்ஆன்.10:6)

நன்றி: எஸ்.ஹலரத் அலி.

ஈயிடம் இழந்ததை மீட்க வழியுண்டா?

ஈயிடம் இழந்ததை மீட்க வழியுண்டா?
இறைவனின் படைப்பினங்கள் ஒவ்வொன்றும் இறைவனின் உள்ளமையையும் அவனது வல்லமையையும் எடுத்துக்கூறும் அத்தாட்சிகளாக விளங்குகின்றன. அவை ஒவ்வொன்றும் தன்னகத்தே பற்பல அற்புதங்களையும் திட்டங்களையும் செயற்திறனையும் தாங்கி நிற்கின்றன. நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி, போன்ற சிறு உயிரினங்களும் இதற்கு விலக்கல்ல. அப்படிப்பட்ட ஓர் உயிரினமான ஈயை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான் இந்த வசனத்தில்...
“ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது; இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும்,தேடப்படுவோனும் பலஹீனர்களே!” (திருக்குர்ஆன்.22:73)
திருக்குர்ஆன் என்பது இவ்வுலகைப் படைத்த இறைவன் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக தனது தூதர் மூலம் கற்றுத்தரும் அறிவுரைகளின் தொகுப்பாகும். மனிதனை சிந்திக்கவைத்து அவன் உண்மைகளைப் பகுத்தறியட்டும் என்பதற்காக அவனது படைப்பினங்களின் உதாரணங்கள் பலவற்றை திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான். பாமரர்களையும் படித்தவர்களையும் அவரவர் பாணியில் சிந்திக்கவைத்து உண்மைகளை உணரத்தூண்டுவது திருக்குர்ஆனின் மற்றொரு சிறப்பாகும்.
கற்றோரும் கல்லாதோரும் சிந்திக்காத காரணத்தால் செய்துவரும் ஒரு – போலிதெய்வ வழிபாடு என்ற - பாவத்தை அவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் அமைந்த இந்த வசனம் நவீன அறிவியல் கண்டுபிடித்த ஒரு உண்மையைத் தாங்கி நிற்கிறது.
ஈ பற்றிய உண்மைகள்
சிக்கல் நிறைந்த (complicated) உடலமைப்புக் கொண்ட ஈயைப் பற்றிய விபரம் திருக்குர்ஆன் இறங்கிய ஆறாம் நூற்றாண்டு மக்களுக்கு நிச்சயமாக தெரிய வாய்ப்பில்லை. அது எவ்வாறு உணவு உட்கொள்கிறது என்பதும் எவருக்கும் தெரியாது. இந்த ஈக்களில் சுமார் 30,000 வகைகள் உள்ளன.
ஒரு ஜோடி இறக்கைகொண்ட ஈயானது நொடிக்கு 1000 தடவை தன் சிறகை அடிக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 5 கி.மீ. பறக்கும் திறனுடையது. அதன் ஒவ்வொரு கூட்டுக் கண்களிலும்(compound eye) சுமார் 4000 லென்ஸ்கள் உள்ளன. தன்னுடைய நுகரும் தன்மையைக்கொண்டே உணவுகளைத் தேடுகின்றன. ஈக்களுக்கு உணவை மென்று அரைத்துத் தின்னும் பற்கள் கிடையாது. ஆகவே ஈயானது திட உணவுப்பொருள்களை நேரடியாக வாயில் வைத்து மென்று தின்ன முடியாது.
திரவ நிலையில் உள்ள உணவுகளை தனது வாயில் உள்ள (Proboscis) ஸ்பான்ஜ் போன்ற உறுப்பால் ஒற்றி உறிஞ்சிக்கொள்ளும். திட உணவாக இருப்பின் தனது உமிழ்நீரை அப்பொருளில் உமிழ்ந்து அதைக்கரைத்து நீர்ம நிலையில் உறிஞ்சி நேரடியாக வயிற்றுக்குள் அனுப்புகிறது. இந்த அறிவியல் உண்மைகள் எல்லாம் பொருள்களை பெரிதாக்கிக்காட்டும் மைக்ராஸ்கோப் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்ததன் பின்னரே அறிய முடிந்தது.
ஈ எவ்வாறு திட உணவுப் பொருள் திரவமாக மாற்றி எடுத்துக்கொள்கிறது என்பதை இன்றைய அறிவியல் நமக்கு தெளிவாக விளக்குகிறது. ஈ ஒரு உணவுப்பொருளில் அமர்ந்து ஒரு வித (நொதியை) எச்சிலை உமிழ்ந்து திடப்பொருளை திரவமாக்கி உறுஞ்சி, நேரடியாக வயிற்றுக்கு அனுப்பி விட்டால் நாம் அப்பொருளை மீண்டும் கைப்பற்ற முடியாது. இதைத்தான் இறைவன் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு “ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது;” என்று கூறுகிறான்.

ஆறாம் நூற்றாண்டின் பாலைவனத்துப் பாமர மக்களுக்கும் இந்த நூற்றாண்டின் அறிவியல் முன்னேற்றம் கண்டு நிற்கும் அறிவு ஜீவிகளுக்கும் ஒரே வசனம் மூலம் அவரவர் அறிவுமுதிற்சிக்கேற்ப சிந்திக்க வைக்கிறதென்றால் இதனை இயற்றியவன் இறைவனன்றி வேறு யார்?
================== 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.htm

வியாழன், 22 ஜனவரி, 2015

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிப்ரவரி2015 இதழ் PDF


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிப்ரவரி 2015 PDF

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிப்ரவரி 2015 PDF 
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusa0JDUFc2MXdOSEk/view?usp=sharing
பொருளடக்கம்:
தாய்மதம் திரும்புதல் என்றாலென்ன?
மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தோர்
ஈயிடம் இழந்ததை மீட்க முடியுமா?
நோயும் மருந்தும் ஈயில் உண்டு
பிறர்நலம் விழையும் ஜீவராசிகள்
மறுமைக்காக உழைக்க விரும்புவோருக்காக...
மதநல்லிணக்கம் எவ்வாறு?
பிரார்த்தனைப் பலகை
ஐ எஸ் ஐ எஸ் இயக்கம் யாருடையது?
வாரிசுகளாலேயே கொல்லப்படும் வயதான பெற்றோர்
வாசகர் எண்ணம்
நபிகளாரின் நற்பண்புகள் 

வெள்ளி, 16 ஜனவரி, 2015

தாய்மதம் அறிவோமா?


ஒன்றே மனித குலம்
மனிதர்கள் அனைவரும் ஒரு  ஆண் – ஒரு பெண்ணில் இருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்பதே உண்மை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் பிறப்பால் சமமானவர்களே என்பதையும் நவீன அறிவியலும் இன்று நிரூபித்து நிற்கிறது. ஆனாலும் இவ்வுண்மை சக மனிதர்கள் மீது நிறத்தின் குலத்தின் இனத்தின் மேன்மையைக் கூறி ஆதிக்கம் செலுத்துவதற்காக சில சுயநல சக்திகளால் அவ்வப்போது மறைத்து வைக்கப்படுகிறது. இந்த சக்திகள் இந்த ஆதிக்கத்தின் மூலம் சகமனிதர்களை ஆன்மீக ரீதியாக அடிமைப்படுத்தி அவர்களின் பொருளாதாரங்களையும் உழைப்பையும் சுரண்டுவதோடு அவர்களில் பிரிவினை விதைக்கிறார்கள். நலிந்தவர்களை தீண்டத்தகாதவர்களாக ஏனைய சமூகங்களில் இருந்து விலக்கி வைக்கிறார்கள்.
 இந்த அடிமைத்தளையை உடைத்தெறியும் முகமாக இவ்வுலகையும் மனிதர்களையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் தனது வேதத்தில் எச்சரிக்கிறான்:.
''மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.' ( திருக்குர்ஆன் 4:1)
 (அல்லாஹ் என்றால் ‘வணக்கத்துக்குரிய ஒரே இறைவன்’ என்று பொருள்)

மனிதகுலம் பூமிக்கு வந்ததன் பின்னணி
முதல் மனித ஜோடியைப் படைத்து அவர்களை சொர்க்கத்தில் குடியமர்த்திய பின் அதன் அருமைபெருமைகளை உணராத காரணத்தினால் அவர்கள் செய்த ஒரு தவற்றின் காரணமாக அங்கிருந்து பூமிக்கு அனுப்பப் பட்டார்கள். உரிய முறையில் உழைத்தபின் மீண்டும் சொர்க்கத்தைப் பரிசாக அடையும் முகமாக இந்த பூமியை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக அமைத்துள்ளான் நம் இறைவன். அந்த நிகழ்வைப் பற்றி அவன் தன் இறுதி வேதத்தில் இவ்வாறு கூறுகிறான்: 
20:123. ''இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவே யிருப்பார்கள்; அப்பொழுது நிச்யமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.
இவ்வசனத்தில் கூறப்படும் நேர்வழியே இன்று இஸ்லாம் என்று அரபுமொழியில் அறியப்படுகிறது. இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் நமக்கு கற்றுத்தரும் கட்டுப்பாடான வாழ்வை (disciplined life)  மேற்கொண்டு வாழ்தலே இஸ்லாம் என்பதாகும். அவ்வாறு வாழ்ந்தால்  இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் சொர்க்கம் சென்றடையலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்
   முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். அதாவது மேற்படி இறைவன் கற்பிக்கும் கட்டுப்பாடான வாழ்வை மேற்கொள்பவர்களுக்கே முஸ்லிம்கள் என்று கூறப்படும்.
ஆக, இந்த அடிப்படையில்  இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ,அவர்கள் எந்த மதத்தவருக்குப் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி.......  மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே!
மனித குலத்தின் ஆரம்பத்தில் அருளப்பட்ட அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது.  அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. நபிகள்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" எல்லாக் குழந்தைகளும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டும் திருப்பி) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்."  (நூல்: புகாரி எண் 4775)
ஆக, தாய்மதம் என்பது இந்த இயற்கை மார்க்கம் இஸ்லாமே என்பது தெளிவாகிறது. இதை இதன் அடிப்படைக் கொள்கைகள் யாவை?

தாய்மதத்தின் அடிப்படைகள்
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் : தாய்மதத்தின் முக்கிய அடிப்படை உலகில் காணும் அனைத்து மனிதர்களும் பாகுபாடுகள் இன்றி ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதும்  நம் அனைவருக்கும் இறைவன் ஒரே ஒருவனே என்பதும் நாம் அனைவரும் அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம் என்பதும் ஆகும். (மேலே கூறப்பட்ட திருக்குர்ஆன் 4:1 வசனம் காண்க)
இங்கு இறைவன் என்றால் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவனை மட்டுமே அது குறிக்கும். அவன் மட்டுமே நாம் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்தவன். அவனல்லாத அனைத்தும் அவனது படைப்பினங்களே. அந்த எல்லாம்வல்ல இறைவனுக்கு பதிலாக அவனது படைப்பினங்களை வணங்குவது வீணும் பாவமும் ஆகும் என்பதை முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்கள் இறைவனை வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்து வெவ்வேறு கடவுளர்களை ஏற்படுத்திக் கொண்டதே மனிதகுலம் பிளவுபடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
 மேலும் உயிரும் உணர்வுமற்ற பொருட்களையெல்லாம் காட்டி கடவுள் என்று சித்தரிக்கும்போது மனித மனங்களில் உண்மையான இறையுணர்வு  சிதைக்கப்படுகிறது. இதன் காரணமாக இறைவன் தன்னைக் கண்காணிக்கிறான், நான் அவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு மனித மனங்களில் நின்று அகன்று போகிறது. இவ்வாறு பூமியில் பாவங்கள் அதிகரிக்க இது ஒரு முக்கிய காரணமாகிறது.
இறைவனின் பண்புகளை இவ்வாறு கூறுகிறது திருக்குர்ஆன்:
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.”  (திருக்குர்ஆன் 112: 1-4)
ஏகனான, ஆதியும் அந்தமும் இல்லாத, தனக்குவமை ஏதும் இல்லாத, சர்வவல்லமை கொண்ட இறைவனை இடைத்தரகர்களும் வீண் சடங்கு சம்பிரதாயங்களும் இன்றி நேரடியாக வணங்கி வாழச் சொல்கிறது நமது தாய் மார்க்கம்.
*(நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், ""நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால், அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன்''  (திருக்குர்ஆன் 2:186)
மறுமை வாழ்வு:. இறைவனின் கண்காணிப்பு என்றால் இவ்வுலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன என்பதும் அவை முழுமையாக இறைவனின் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப் பட உள்ளன என்பதாகும். இவ்வுலகில் இறைவனது வழிகாட்டுதல் படி வாழ்ந்தோர் சொர்க்கத்தையும் மறுத்தவர்கள் நரகத்தையும் அடைகிறார்கள் என்கிறது தாய்மார்க்கம்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)


இந்த தாய்மதத்தில் இருந்து மக்கள் ஏன் பிரிந்தார்கள் ?
இறைவனின் தூதர்கள் படைத்த இறைவன் ஒருவனையே வணங்கி வரவேண்டும் என்றும் அவனல்லாது எந்த படைப்பினங்களையும் வணங்கலாகாது என்றும் கண்டிப்பான முறையில் தத்தமது மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அதனடிப்படையில் ஆங்காங்கே தர்மத்தையும் நிலைநாட்டினார்கள். ஆனால்
இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் ஷைத்தானின் தூண்டுதலால் அவர்களின் போதனைக்கு மாற்றமாக இறைத்தூதர்களுக்கும் மற்ற புண்ணியவான்களுக்கும் நினைவுச் சின்னங்கள் எழுப்பினார்கள். நாளடைவில் அவற்றையே வழிபடவும் ஆரம்பித்தார்கள். இவ்வாறு மக்கள் உயிரற்ற உணர்வற்ற ஜடப் பொருட்களை எல்லாம் கடவுள் என்று நம்பத் துவங்கியதால் உண்மையான இறை உணர்வும் பயபக்தியும் சிதைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மக்கள் தயக்கமின்றி பாவங்கள் செய்யத் தலைப்பட்டனர். இவற்றோடு கடவுள் பெயரால் மக்களைச் சுரண்டிப் பிழைக்க இடைத்தரகர்களும் அவர்கள் அவிழ்த்துவிட்ட மூடநம்பிக்கைகளும் என பல தீமைகளும் சேர்ந்து பூமியில் அதர்மத்தை வளர்த்தன.

   இவ்வாறு அதர்மம் பரவிய போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக மீண்டும்மீண்டும் இறைத் தூதர்கள் அனுப்பப் பட்டனர். அவர்கள் மேற்கண்ட அடிப்படை போதனைகளை மக்களிடையே விதைத்து மீண்டும் தர்மத்தை நிலை நாட்டிவிட்டுச் சென்றனர். அந்த இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள். 
அதர்மம் அந்தந்தக் காலத்து இறைதூதர்களின் பெயரால் அல்லது நாட்டின் பெயரால் அல்லது வமிசத்தின் பெயரால் மதமாக அறியப்படும். ஆனால் தாய்மதமோ ‘இறைவனுக்கு கீழ்படிதல்’என்ற பண்புப் பெயரால் அறியப்படும்!
தாய்மதத்தின் முக்கிய இலக்கணங்கள்
= ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்பதை அசைக்கமுடியாத அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதன் மூலம் தனிமனித நல்லொழுக்கத்துக்கு வழிகோலும்.
= மானிட சமத்துவத்தையும் உலக சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும். அவற்றை நிலைநாட்டும். பிரிவினை வாதங்களுக்கு துணை போகாது.
= மனித இனத்தை பீடித்திருக்கும் சமூகத் தீமைகளில் இருந்தும் அடிமைத்தளைகளில் இருந்தும் விடுவிக்க தீர்வுகள் காணும். ஆன்மிகம் மட்டும் கூறிக்கொண்டு இராமல் மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக் கூடியதாக இருக்கும்.

= இடைத்தரகர்களுக்கும் கடவுளின் பெயரால் சுரண்டல்களுக்கும் துறவறத்துக்கும் இடமளிக்காது எளிமையான செலவில்லாத நடைமுறை சாத்தியமான வழிபாட்டைக் கற்பிக்கும். 
=================== 
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html
இறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்!

சனி, 3 ஜனவரி, 2015

அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் அனுமதித்தது ஏன்?


 அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் அனுமதித்தது ஏன்

திருக்குர்ஆனின் பல வசனங்களில் "வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்'' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அடிமைப் பெண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

"அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்'' என்று பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.


இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.

இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.

இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.

வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.

எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் அதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.

இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.

இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நட்டமடைவார்கள். அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு அளித்தால் அரசை நடத்த முடியாது. இழப்பீடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்த போது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுத்துவது அநியாயமாகும்.

அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் இழப்பீடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத்தான் முடியும்.

ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப் பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும்.

நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. அவருக்குத்தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.

உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.

அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள்
.
நன்றி :பிஜே