இறையச்சம் கொண்டோருக்கே இறுதி வெற்றி!
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் வழங்கும் வாழ்க்கை நெறியே இயற்கையானது... குறைகளற்றது... நிற, இன, குல பேதமின்றி அனைத்து மக்களுக்கும் பக்குவமாகப் பொருந்தக்கூடியது. அதன்படி வாழ்வோருக்கு இம்மையிலும் பாதுகாப்பானது. மறுமையில் சொர்க்கத்தைப் பெற்றுத் தரக்கூடியது. அதை விடுத்து மனிதன் தானாக தன மனம்போன போக்கில் வகுத்துக்கொண்ட வாழ்க்கை நெறிகளேல்லாம் தற்காலிகமாக கவர்ச்சிகரமாக தோன்றினாலும் அவை அனைத்துமே காலம் செல்லச்செல்ல சாயம் வெளுத்து குறைகளை வெளிப்படுத்தக்கூடியதாகவே உள்ளன. அவற்றை நம்பி மோசம் போவோர் இம்மை வாழ்விலும் அதன் தீய விளைவுகளை சந்திக்கிறார்கள். மறுமையிலோ இறைவனைப் புறக்கணித்ததன் விளைவாக நரகத்தையும் அடைகிறார்கள்.
இயற்கை மார்க்கம் இஸ்லாம் அதனைப் பின்பற்றுவோரை திருமணம் செய்து கொள்ளுமாறும் அதன் மூலம் உருவாகும் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்குமாறும் வலியுறுத்துகிறது. திருமண உறவுக்கு அப்பாற்பட்ட ஆண்-பெண் உறவை சட்டவிரோதம் என்றும் அது சமூகத்தை சீர்கெடுக்கக் கூடியது என்றும் கண்டித்து அக்குற்றத்திற்குக் கடுமையான தண்டனைகளையும் பரிந்துரைக்கிறது. திருமண உறவில் ஆரம்பிக்கும் குடும்ப வாழ்வில் தாய், தந்தை, குழந்தைகள், உறவினர்கள் ஆகிய அனைவரதும் பொறுப்புகளையும் உரிமைகளையும் வரையறை செய்து அவற்றைப் பேணச் செய்து ஒரு ஆரோக்கியமான ஒழுக்கம் பேணக்கூடிய சமூகமும் நாடும் அமைய வழிகோலுகிறது இறைவனின் மார்க்கம்.
இதைப் புறக்கணித்தவர்களின் இழிநிலை!
ஆனால் அதேவேளையில் மக்கள் மனம்போன போக்கில் தாங்களாகவே வகுத்துக்கொண்ட சட்டங்களையும் வாழ்க்கை முறைகளையும் பின்பற்றுவதால் சமூகங்களில் பல குழப்பங்களும் அவலங்களும் நேர்கின்றன என்பதற்கு பல உதாரணங்கள் கூறலாம். பாலியல் வன்முறைகள், திருட்டு, கொள்ளை, இலஞ்சம், கொலை,போன்றவை கட்டுப்படுத்தப் படாமல் பெருகுவது.... வரதட்சணை, பெண்சிசுக்கொலை, போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வது.... ஜாதிக் கொடுமைகளும் தீண்டாமையும் இன்னும் தொடர்வது... என பலவற்றுக்கும் காரணம் இறைவன் தந்த எளிமையான தீர்வுகளை மக்கள் புறக்கணிப்பதனால்தான் என்பதை சிந்திப்போர் அறியலாம்.
இன்று பல நாடுகளிலும் அவர்களின் இனப்பெருக்கம் குறைந்து அவ்வினங்கள் அழிவுக்கு உள்ளாகி வருவது முக்கியமாக இறைநெறியைப்புறக்கணித்த காரணத்தினால்தான் என்பதே உண்மை!
இன அழிவிற்குக் காரணங்கள்:
இந்த அவலத்திற்கு கீழ்கண்டவை காரணங்களாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது:
= இறைவனையும் மறுமை வாழ்வையும் பற்றிய நம்பிக்கை இல்லாததால் எப்படியும் வாழலாம், யாருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை என்ற பொறுப்பின்மை மேலிடுகிறது. அதனால் மனம்போன போக்கில் பாலியல் உணர்வுகளை தணித்துக் கொள்ளும் போக்கு! மறைவில் செய்யப்படும் குற்றங்களுக்கும் இறைவனிடம் விசாரணையும் தண்டனையும் உண்டு என்பதை அறியாதவர்களும் இருக்கிறார்கள். அதை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.
= திருமணம் என்ற உறவின் புனிதத்தை அறவே அலட்சியப் படுத்துதல். அதன் மூலம் உண்டாகும் பொறுப்புகளைக் கண்டு வெருண்டோடுதல்.
= திருமணம் இன்றியே முடிந்த வரை ஆண்- பெண் இணைந்து வாழுதல். பாலியல் உறவுகளை மனம்போன போக்கில் தணிக்கும்போது கருவுருவதைத் தவிர்த்தல். அதை மீறி உருவானாலும் அக்கருவை அல்லது சிசுவை ஈவிரக்கமின்றிக் கொல்லுதல். இங்கு விபச்சாரத்திற்கான குற்றமும் கொலைக்கான குற்றமும் இறைவனிடம் பதிவாகிறது என்பது பற்றி அறியாமை!
= ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன் மற்றும் இயற்கைக்கு மாறான தான்தோன்றித்தனமான பாலியல் செயல்பாடுகள்.
= திருமணங்கள் நடந்தாலும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் ஆர்வமின்மை. அத்துடன் குழந்தைப் பேற்றை எப்படியாவது தடுக்கப் முனைப்போடு செயல்படும் அரசாங்கங்களும் அவற்றுக்குத் துணைபோகும் ஊடகங்களும் சூழலும். வறுமைக்கு பயந்தும் வசதிகள் குறையும் என்று பயந்தும் சுயநல மனப்பான்மையாலும் குழந்தைப் பேறுகள் தடைபடுகின்றன. கருக்கொலையும் சிசுக்கொலையும் எந்தவிதக் குற்ற உணர்வுமின்றி சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
= திருமண வயதைத் தள்ளிப் போடுதல். வரதட்சணைக் கொடுமை, குடும்ப அமைப்பு, உறவுகள் இவற்றை விட பணத்திற்கும் பதவிக்கும் முக்கியத்துவம் கொடுத்தல் போன்ற இன்னும் பல காரணிகள் இந்த அவலத்திற்கு வெகுவாகத் துணைபோகின்றன.
சுயநல "முற்போக்கு" சிந்தனை!
இவ்வளவு நடக்கும்போதும் சிலர் இப்படியும் எண்ணலாம்.... இப்போது இல்லாத சந்ததிகளுக்காக ஏன் கவலைப் படவேண்டும்? இருப்பவர்களைப் பற்றி கவலைப் படுவோமே... என்று.
ஆனால் ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். இவ்வுலகில் வாழ நமக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை அவர்களுக்கும் இருந்திருக்கிறது. ரயில்வண்டியில் முதல் ஸ்டேஷனில் ஏறியவர்கள் தங்களுக்கே இரயில் சொந்தம் என்று பாவித்து இருக்கைகளில் கால்நீட்டிப் படுத்து சொந்தம் கொண்டாடினால் அதை அனுமதிக்க முடியுமா? அல்லது அவர்கள் பெட்டிகளுக்கு தாழிட்டுவிட்டு அடுத்த ஸ்டேஷனில் காத்திருந்த பயணிகளுக்கு அனுமதி மறுத்தால் அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!
இவ்வுலகிற்கு நுழைவு மறுக்கப்பட்ட சந்ததிகளின் உரிமைகளை தடுத்ததற்கான குற்றத்திற்காக இவ்வுலக அரசாங்கங்களோ நீதிமன்றங்களோ நம்மை தண்டிக்க மாட்டா. ஆனால் அனைத்தையும் கண்டுகொண்டு இருக்கும் இவ்வுலகின் அதிபதி அனைத்து உரிமை மீறல்களையும் குற்றங்களையும் அழியாத பதிவேடுகளில் ஆழமாகப் பதிவு செய்துள்ளான். இவை இறுதி நாளில் தவறாமல் விசாரிக்கப்பட உள்ளன!
(திருக்குர்ஆன் 81: 8,9)
= அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:6-8).
குழந்தைக் கொலை!... எவ்வளவு பெரிய கொடுமை!
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உன்னுடைய குழந்தை உன்னுடன் உணவருந்துவதை அஞ்சி, அதை நீ கொலை செய்வது பெரும் பாவமாகும்.' (நூல்: புகாரி:7532 )
= நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்' (அல்-குர்ஆன் 17:31)
இது இவ்வுலகுக்கு உணவளித்துக் கொண்டிருப்பவனின் வாக்குறுதி! இதில் நம்பிக்கை கொண்டு அவன் வழங்கும் வாழ்க்கை நெறியை ஏற்று அவன்பால் திரும்புவதே சமூகங்களுக்கும் தனி நபர்களுக்கும் அவர்களின் ஈருலக வெற்றிக்கு வழிவகுக்கும்.
================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக