இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 பிப்ரவரி, 2023

இலக்கு அறிந்த பயணிக்கே இறுதி வெற்றி!

 நெரிசல் நிறைந்த பேருந்து.. அதில் பயணி ஒருவரிடம் கண்டக்டர் கேட்கிறார், “எங்க போறீங்க?”

“தெரியாது” என்கிறார் அவர்.

“அப்படியா? எங்க ஏறினீங்க?” 

“தெரியாது”

“சரி, நீங்க யாரு” 

“தெரியாது” என்று மீண்டும் அதையே சொல்கிறார் பயணி. 

அடுத்து நடத்துனர் என்ன செய்வார் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். 

இப்படித்தான் நாம் எங்கிருந்து வந்தோம்? எதற்காக வந்தோம்? இங்கிருந்து எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு பதில் தெரியாதவர்களாகவே நம்மில் பெரும்பாலோர் வாழ்ந்துகொண்டிருப்பது மட்டுமல்ல, அதற்கான விடைகளை அறியவும் முனைவதில்லை. 

பகுத்தறிவால் ஆராய்வோம் வாரீர்!

நாம் இன்று வாழ்ந்துக்கொண்டிருக்கும் பூமியின் அமைப்பையும் அதனைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் இன்னபிற சமநிலை தவறாத  இயக்கங்களையும் சற்று பாருங்கள். அனைத்துமே மனிதன் என்பவன் இங்கு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான், அவனுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது  என்பதனால்தானே! 

 உதாரணத்திற்கு...

= தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனச் சுற்றிவரும் கோளம் பூமி. சூரியனிலிருந்து ஒரு வரையறுக்கப்பட்ட தூரத்தில் இக்கோளம் ஒரு வட்டப் பாதையில் உலா வருகிறது. இந்த தூரம் சற்று கூடிவிட்டால் என்ன நிகழும்? நாம் அனைவரும் குளிரினால் உறைந்து மடிந்து போவோம்! சற்று குறைந்து போனாலோ...? நாம் தாங்க முடியாத வெப்பத்தினால் கருகி மடிந்துவிடுவோம்!  

= பூமி தன் அச்சின்மீது சுழலும் வேகம் வரையறுக்கப்பட்ட ஒன்று இது கூடவோ குறையவோ செய்தால் என்ன ஆகும்? அன்றாடம் நிலநடுக்கமும் புயலும் சுனாமியும்தான்! 

= பூமியின் மேலுள்ள காற்றழுத்த மண்டலம்- இதன் அழுத்தம் சற்று குறைந்தாலோ அல்லது கூடினாலோ புயலினால் சீரழிக்கப் படுவோம் அல்லது பிராணவாயுவின் குறைவினால் மடிந்து போவோம்.

= இம்மாபெரும் பேரண்டத்தில் எண்ணற்ற கோள்கள் உலா வந்துகொண்டிருந்தாலும் நம் கோளில் மட்டுமே நமக்குத் தேவையான உணவு, நீர், காற்று போன்றவை கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இவையும் இவைபோன்ற இன்னும் பல உண்மைகளும் எதைச் சுட்டிக் காட்டுகின்றன?

மனிதன் என்ற ஜீவியை மையமாகக் கொண்டு அவனை வாழவைப்பதற்குத் தானே இம்மாபெரும் பிரபஞ்சம் இயக்கப்பட்டு வருகிறது! மனிதனில்லாத ஒரு பிரபஞ்சத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். பூமியும் சூரியனும் இன்ன பிற கோள்களும் வரையறைக்குள் சுழன்று கொண்டிருப்பதிலும் பூமி உணவு, நீர், காற்று என்று மனிதனின் தேவைகளை உற்பத்திசெய்து கொண்டிருப்பதிலும் மேற்கூறப்பட்ட சமநிலை தவறாத இயக்கங்கள் நடைபெறுவதிலும் அர்த்தமில்லை என்பது நமக்குப் புலனாகும்.

படைத்தவனின் கேள்வி:

இவ்வுண்மைகளை மனதில் இருத்தி இவற்றை இயக்கி வருபவன் கேட்கும் கேள்வியை செவியுறுங்கள்:

 “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?”  (திருக்குர்ஆன் 23:115) 

நிச்சயமாக இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நீங்கள் படைக்கப் பட்டிருக்கிறீர்கள். ஆம், இறைத்தூதர்கள் மூலமாகவும் இறைவேதங்கள் மூலமாகவும் காலாகாலமாக சொல்லப் படுகின்ற செய்தி.உண்மை என்பதையே பகுத்தறிவு நமக்கு எடுத்துச் சொல்கிறது. அது என்ன செய்தி?

= உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2.) 

இத்தற்காலிக உலகு உங்களுக்கான ஒரு பரீட்சைக் கூடம். இதில் உங்கள் செயல்கள் பதிவு செய்யப்படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்புநாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன்  3:185) 

ஆக வாழ்க்கையைப் பற்றிய இந்தப் புரிதல் மனதில் உறுதியாகப் பதியுமானால் அவர்களை கவலைகள் நிதானம் இழக்கச் செய்வதில்லை!

===================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக