இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 செப்டம்பர், 2016

உணவுச்சங்கிலியும் உயிர்வதையும்



உணவுச்சங்கிலி
 = அவனே (யாவற்றையும்) படைத்தான் மேலும் செவ்வையாக்கினான். மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயிதான் (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான். (திருக்குர்ஆன் 87:2,3)
உலகில் வாழும் எந்த ஒரு உயிரினத்துக்கும், உணவு என்பது பொதுவாகவே மற்றொரு உயிரினம்தான். பலமான உயிரினங்கள் பலவீனமான உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. உதாரணமாக புழுபூச்சிகள் அவற்றைவிட சிறிய உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. புழு பூச்சிகளைத் தவளைகள் உண்கின்றன. தவளை பாம்புகளுக்கு உணவாகிறது. பாம்புகளை கழுகுகள் பதம் பார்க்கின்றன. கழுகுகள் இறந்தால் அவற்றின் உடல்கள்  நுண்கிருமிகளுக்கு உணவாகின்றன. அவ்வுடல்கள் மண்ணினால் அரிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக கலந்து விடுகின்றன. அவை அங்கு வளரும் தாவரங்களுக்கு உரமாகின்றன.  
 அதே போல மான்கள் முயல்கள் மற்றும் ஆடுகள் போன்றவை  தாவரங்களை உண்டு வளர்கின்றன. அவற்றை சிங்கம், புலி போன்றவை வேட்டையாடி உண்ணுகின்றன. ... அந்தச் சிங்கம் இறந்துவிட்டால் அதன் உடலை நரிகள் உண்கின்றன. இதைத்தான் உணவுச் சங்கிலி (Food Chain). என்கிறது அறிவியல்! இவை ஒரு சில குறிப்பிட்ட வகையான விலங்குகளின் உணவு சங்கிலி முறை. இதேபோன்ற பல உணவு சங்கிலி அமைப்பு முறைகள் எந்த வித சலனமும் இல்லாமல் தத்தமது வேலையை செய்கின்றன.


இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீற்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலிதான். இந்த பூமி உருண்டையின் மூன்றில் இரண்டு பங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. தரைவாழ் உயிரினங்கலானாலும் கடல்வாழ் மற்றும் கரைவாழ் உயிரினங்களானாலும் இதுவே நியதி.  
இந்த உணவு சுழற்சியில் ஏதாவது ஒன்று நின்று போனாலே உலகம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் கோடிக்கணக்கில் ஒரு நாளில் மனிதனால் உணவுக்காக வெட்டப்படுகின்றன. ஜீவகாருண்யம் பேசிக் கொண்டு இவற்றை சாப்பிடாமல் இருந்தால் இந்த இனங்கள் அதிகம் பெருகி சுற்று சூழலுக்கு மிகக் கேடாக முடியும். 
உதாரணமாக, காடுகளில் முயல், மான், வரிக் குதிரை போன்ற மிருகங்களை சிங்கம் புலி போன்றவை அடித்து சாப்பிடுவதால்தான் காட்டின் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இல்லை என்றால் இலை தழைகளை சாப்பிடும் இந்த மிருகங்கள் பெருகி முழு காட்டையும் சாப்பிட்டே அழித்து விடும். இலைதழைகளும் மரங்களும் அழிந்தால் மழை பெய்வது நிற்கும்.. தொடர்ந்து வறட்சியும் பஞ்சமும் என பூமி வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். 
படைத்தவனுக்கே பரிந்துரையா? 

மனிதகுலம் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து நடைபெறும் உணவு வழக்கத்திற்கு மாற்றமாக உணவுக்காக உயிர்களைக் கொல்வது  பாவம் என்று யாரேனும் வாதிடுவது அறியாமையின் வெளிப்பாடே. மனிதர்களைப் பொறுத்தவரை அவர்கள் எதை உண்ணவேண்டும் உண்ணக்கூடாது என்பதை அவர்களைப் படைத்த இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் அறிவித்து வந்துள்ளான். 

= 'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' (திருக்குர்ஆன் 16:5)
= 'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' * (திருக்குர்ஆன் 23:21) 



உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை இறைவன் அனுமதித்து உள்ளான் என்பதை திருக்குர்ஆன் மூலம் மட்டுமல்ல முந்தைய வேதங்கள் மூலமும் அறிகிறோம். இந்த அனுமதியின் பின்னால் உள்ள உண்மைகளையும் நுணுக்கங்களையும் திட்டங்களையும் அவன் மட்டுமே முழுமையாக அறிவான். அவனது திட்டங்களுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை பரிந்துரைக்கும் நிலையில் நாம் இல்லை என்பது உறுதி.

மனிதனுக்கும் விலங்கினத்துக்கும் அநீதி!


நமது அற்ப அறிவுக்கு ஒருவேளை இது பாவமாகத் தோன்றி கால்நடைகளைக் கொல்லாமல் விட்டுவிட்டால் அந்த விலங்கினத்துக்கு எதிராகச் செய்யும் அநீதியாகவும் அமைந்துவிடும். உதாரணமாக, ஒரு ஏழை விவசாயி தன் வயதான மாட்டை விற்றால்தான் வேறு காளையை வாங்கமுடியும். தன் தொழிலைத் தொடரவும் முடியும். அதை விற்கச் சந்தைக்குக் கொண்டு வருகிறார். ஒரு இறைச்சிக்கடைக் காரர் வாங்கவும் தயாராக உள்ளார். அப்போது .’பசுவதைத் தடைச் சட்டம் என்ற பெயரில் இதை நாம் தடுத்தால் என்ன நடக்கும்? 

ஆம், சந்தேகமின்றி  அந்த ஏழை விவசாயியின் பிழைப்பில் அநியாயமாக மண்ணைப் போடுகிறோம். காலாகாலமாக தன் வயதான பால் தராத பசுவை அல்லது உழுவதற்குத் சக்தியற்ற மாட்டை சந்தையில் இறைச்சிக்கடைக் காரர்களுக்கு விற்றுதான் வேறு காளையை வாங்கி வந்தார். ஆனால் இப்போது அவரால் தன் கால்நடையை விற்க முடியாமல் தன் வீட்டிற்கே கொண்டுவர வேன்டிய நிலைமை. அவரது பிழைப்பில் மண் விழுந்ததோடு விபரீதம் முடிவதில்லை. அந்தப் பிராணிக்கு யார் உணவளிப்பது?
அவருக்கே உணவுக்கு திண்டாட்டமாக இருக்கும்போது அந்த மாட்டுக்கு அவரால் உணவளிக்க முடியுமா? அவர் அதைப் பராமரிக்க முடியாத நிலையில் கட்டவிழ்த்து விட்டால் அடுத்தவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இரையாகிறார். வேறுவழியின்றி கட்டிப்போட்டால் அது பசியால் துடிதுடித்து படிப்படியாக இறக்கிறது. இதுதான் மனிதாபிமானமா?....... இவ்வாறு ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர் விபரீதங்களுக்கு நாம் காரணமாகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அனைத்து அநீதிகளுக்கும் பாவங்களுக்கும் மறுமையில் இறைவனின தண்டனையும் கிடைக்கும். அது நரக நெருப்பல்லாமல் வேறு என்ன? 



சட்டம் இயற்றும் அதிகாரம் நம்மிடம் இல்லை!     
இயற்கையில் செடிகொடிகள் புல்பூண்டு முதல் வளர்வன அனைத்தும் உயிரினங்களே. பலவீனமான உயிரினங்களை பலமான உயிரினங்களுக்கு உணவாக இறைவன் படைத்திருக்கிறான் என்பதை சற்று சிந்தித்தாலே அறியலாம். இந்த ஏற்பாட்டின் சூட்சுமம் அவன் மட்டுமே அறிவான். புலியிடம் ‘இன்று முதல் நீ புல்லை மட்டும்தான் உண்ணவேண்டும்!’ மானிடம் ‘நீ நீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்!’ என்றோ கட்டளையிட நமக்கு அதிகாரமில்லை என்பதை அறிவோம். நம் அற்ப அறிவின் அடிப்படையில் இதில் தலையிட்டு மாற்றங்கள் செய்ய நினைத்தால் பல விபரீதங்கள் ஏற்படும். அதனால் உண்டாகும் விளைவுகளுக்கு கண்டிப்பாக இறுதித்தீர்ப்பு நாளன்று குற்றம் பிடிக்கப்படுவோம்.
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்:
7:56(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
 
2; 216. ….ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக