இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 செப்டம்பர், 2016

படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு!


நாமாக நாம் இங்கு வரவில்லை என்பது உண்மை!
நமது, நிறம், மொழி, நாடு, தாய், தந்தை, உறவுகள் இவை எவையும் நாமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அமைந்தவை அல்ல என்பதும் உண்மை!
நமது என்று நாம் சொல்லிக்கொள்ளும் உடல், பொருள், ஆவி என இவை எவையும் நமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதும் உண்மை! இவற்றுள் ஆவி அல்லது உயிர் என்பது பறிக்கப்பட்டால் மற்ற அனைத்தும் நம்மைக் கைவிட்டுப்போகும் நிலைமை உள்ளதை அறிவோம். உடல் என்ற கூட்டுக்குள் நாம் வந்ததும் இதை விட்டுப் பிரிவதும் நம்மைக் கேட்டு நடப்பவை அல்ல என்பதையும் அறிவோம்.
ஒரு அற்ப இந்திரியத் துளியில் இருந்து தொடங்கி படிப்படியாக பல கட்டங்களைக் கடந்து கருவாக உருவாகி கருவறையில் சொகுசாக வளர்ந்து உரிய பக்குவம் அடைந்த பின் குழந்தையாக வெளிவந்து தொடர்கிறது நம் ஒவ்வொருவரதும் வாழ்க்கைப் பயணம்! நம் உடல் என்ற மாபரும் தயாரிப்பு (product) எவ்வளவு அற்புதங்களைத் தாங்கி நிற்கிறது! ஒவ்வொரு செல்களும் அதற்குப்பின்னால் வழங்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப இதயமாகவும், சிருநீரகமாகவும், சிறுகுடலாகவும் பெருங்குடலாகவும் வயிறாகவும் நுரையீரலாகவும் கல்லீரலாகவும் மண்ணீரலாகவும் மூளையாகவும் எலும்பாகவும் தசையாவும் ஜவ்வாகவும் கண்களாகவும் காதுகளாகவும் தோலாகவும் முடியாகவும் நகமாகவும் இன்ன பிற பாகங்களாகவும் எல்லாம் பரிணமித்து நிற்கின்றன. இவற்றை ஒன்றுக்கொன்று உரிய முறையில் குறைகளின்றிப் பொருத்தியிருப்பதும் குழாய்கள், ஜவ்வுகள், திரவங்கள் மற்றும் நரம்புமண்டலம் கொண்டு இணைத்திருப்பதும் இவை அனைத்தையும் சமநிலை தவறாது இயக்கி வருவதும் நம் கற்பனைக்கு அறவே எட்டாத அற்புதங்களே! நமது புரிதலுக்கு எட்டும் அற்புதங்கள் போக எட்டாத எண்ணற்ற அற்புதங்கள் பலவும் சேர்ந்துதான் நம் உடல் என்ற அற்புதமும் அது வசிக்கும் இந்தப் பிரபஞ்சம் என்ற மாபரும் அற்புதங்களின் தொகுப்பும் இயங்கி வருகின்றன என்பதை எந்த சாமானியனும் சிந்திக்கும்போது அறிய முடியும்.
இவையெல்லாம் தானாகவோ தற்செயலாகவோ நடைபெற முடியாது என்கிறது பகுத்தறிவு! இதற்குப் பின்னால் ஒரு அளப்பரிய தன்னிகரற்ற சக்தியும் நுண்ணறிவும் அதிபக்குவமான திட்டமிடலும் அவற்றை அயராது இயக்குதலும் அவசியம் என்பதை பகுத்தறிவு நமக்கு எடுத்துரைக்கிறது. நம்மைச்சுற்றி நடக்கும் காரியங்களின் விளைவுகளை அறிந்துகொண்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கும் நமக்கு நம் அறிவு நமக்குக் கூறும் உண்மை இது! அந்த தன்னிகரற்ற சக்தி என்பது நம்மைப்போல் பலவீனமான ஒரு மனிதனைப் போலவோ அல்லது ஒரு நம்மைவிடத் தாழ்ந்த ஒரு ஜீவியாகவோ அல்லது ஒரு வெறும் உணர்வற்ற ஒரு ஜடப்போருளாகவோ இருக்க முடியாது என்பதும் அதே பகுத்தறிவு நமக்குச் சொல்லும் பாடமாகும். அந்த தன்னிகரற்ற சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் நாம் அழைக்கிறோம்.
உண்மையில் நமது புலன்களுக்கு எட்டும் தகவல்களை (sensible data) வைத்து எட்டாதவற்றைப் பகுத்து அறிவதே பகுத்தறிவு எனப்படும். ஆனால் பகுத்தறிவுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் பலர் இவையெல்லாம் தானாக தற்செயலாக நிகழ்கிறது என்று மூடமாக நம்பி அதையே பகுத்தறிவு என்று விளம்பரம் செய்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது!
ஒரு மாபெரும் தூசுப் படலத்தில் காணப்படும் ஒரு நுண்ணிய துகள் போன்றது இன்று நாம் வாழும் பூமி என்ற கோளம். இதன்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் மற்றொரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். சூரிய குடும்பத்தின் அங்கமான இந்த பூமியின் சொந்த அச்சின் மீதான சுழற்சியும் வேகமும் சூரியனிலிருந்து அதன் தூரமும் சூரிய குடும்பத்தில் மற்ற அங்கங்களின் தன்மைகளும் இயக்கமும் எல்லாம் பற்பல அளவைகளை (parameters) மிகமிக நுணுக்கமாகக் கட்டுப்படுத்தி சமநிலையில் வைத்துள்ளதால்தான் என்பது அறிவியல் நமக்கு கற்றுத்தரும் உண்மை. இந்த அளவைகளில் சிறு மாற்றம் ஏற்பட்டு சமநிலை தவறினால் மனிதர்களாகிய நாமும் இன்ன பிற ஜீவிகளும் வாழ்வதே சாத்தியமில்லை என்றும் அறிவோம்.
ஆக, நம் உடலும் அதன் உறுப்புக்களும் அதனைச் சூழ உள்ள அனைத்தும் சமநிலை தவறாது இயங்கிவருவது நம்மை இங்கு தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட தவணை வரை வாழவைப்பதற்கே என்பதையும் மேற்படி உண்மைகளை ஆராயும்போது அறியலாம். இந்தக் குறுகிய தற்காலிக வாழ்வின் உண்மை நோக்கம் என்ன? இதை நாமாக ஊகித்து அறிவதை விட இப்பிரபஞ்சத்தை உண்டாக்கியவனே நமக்கு அறிவித்துத் தந்தால் அதுதானே உண்மையிலும் உண்மை!
அப்படியானால் உங்கள் மீது இவ்வாறு அயராத அக்கறையோடு உங்களுக்கு வேண்டியதெல்லாம் தந்து பரிபாலித்து வரும் அந்த சர்வவல்லமையும் நுண்ணறிவும் கொண்ட அந்த இறைவன் உங்களோடு உரையாட முற்பட்டால் அதை வெறுத்து அல்லது மறுத்து ஒதுக்க முடியுமா உங்களால்? ஆம், அவ்வாறுதான் அந்த கருணைமிக்க இறைவன் இந்த பூமியின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மக்களோடு தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் உரையாடியுள்ளான். அந்த வரிசையில் இறுதியாக வந்த இறைத்தூதரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர் மூலமாக அனுப்பபட்ட வேதமே திருக்குர்ஆன். நாம் இன்று வாழும் காலகட்டம் இறுதியானது என்பதால் அவரே இறுதிநாள் வரை வரப்போகும் மக்கள் அனைவருக்கும் தூதராவார்.
= இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம். (திருக்குர்ஆன் 2:151)

இறைவனிடமிருந்து வந்த தூதர்கள் அனைவரும் தத்தமது மக்களுக்கு ஒரே செய்தியைத்தான் எடுத்துரைத்தார்கள். அதாவது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் உங்கள் இறைவன் கற்பிக்கும் எவல்விலக்கல்களை ஏற்று அவனுக்குக் கீழ்படிந்து வாழுங்கள். அவ்வாறு வாழ்ந்தால் உங்கள் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் நீங்கள் அமைதியைக் காண முடியும். அவ்வாறு கட்டுப்பட்டு வாழ்ந்தவர்களுக்குப் பரிசாக மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் என்ற வாழ்விடம் பரிசாகக் கிடைக்கும். ஆனால் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்வோருக்கு இறை கட்டளைகளைப் புறக்கணித்து வாழ்ந்ததற்கு தண்டனையாக வேதனைகள் நிறைந்த நரகம் வழங்கப்படும் என்பதே அது. இறைவன் வகுத்து வழங்கும் அந்த வாழ்க்கைத் திட்டமே அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்:
 1. ஒன்றே குலம்:
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

அதாவது நிறம், இனம், நாடு, மொழி, செல்வம், கல்வி, அந்தஸ்து, பதவி போன்றவை மூலம் உண்டாகும் வேற்றுமைகளைத் தாண்டி சக மனிதன் தன் சகோதரனே என்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பூமியில் உரிமைகள் உள்ளன என்றும் அவற்றை அனைவரும் மதித்து வாழவேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.

 2. ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல்  அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
படைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி – அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இச்செயல் இறைவனைச்  சிறுமைப்படுத்துவதுடன் மனித மனங்களில் இறைவனைப்பற்றி அலட்சியப் போக்கை உண்டாக்கி விடுகிறது. அதனால் மேற்கூறியவாறு நல்லொழுக்கத்தைப் பேணுவதற்கு மிகப்பெரும் தடையாகிறது. சமூகத்தில் பாவங்கள் பெருக காரணமாகிறது. மேலும் இவ்வாறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக கடவுளைக் கற்பனை செய்து வணங்க முற்படும்போது ஒரே மனித குலம் பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்வது, இடைத்தரகர்கள் இறைவனின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பது என்பனவும் நிகழ்கின்றன. பல குழப்பங்களுக்கும் தீமைகளுக்கும் காரணமாகும் இப்பாவத்தை மட்டும் இறைவன் மன்னிப்பதே இல்லை என்கிறது திருக்குர்ஆன்.
வாழ்க்கை ஒரு பரீட்சை
 = இந்தக் குறுகிய தற்காலிக வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை  அதற்கான பரீட்சைக் கூடமாகவும் இறைவன் படைத்துள்ளான்.   இந்தப்  பரீட்சைக்கூடத்திற்குள்  நாம் அனைவரும்  அவரவருக்கு  விதிக்கப் பட்ட தவணையில்  வந்து போகிறோம். இங்கு  இறைவனின் கட்டளைகளுக்குக்  கீழ்படிந்து  செய்யப் படும்  செயல்கள் நன்மைகளாகவும்  கீழ்படியாமல்  மாறாகச்  செய்யப்படும்  செயல்கள் தீமைகளாகவும்  பதிவாகின்றன.  இவ்வாறு  ஒவ்வொருவருக்கும் நன்மைகள்  அல்லது  தீமைகள்  செய்வதற்கு  சுதந்திரமும்  வாய்ப்பும் அளிக்கப்படும்  இடமே  இந்த  தற்காலிகப்  பரீட்சைக் கூடம்! 
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைப்பதாகவே இருக்கிறதுபரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 1:35)
இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும்.
கண்மூடித்தனமான பினப்ற்றுதல் இல்லை!
மேற்கூறப்பட்ட உண்மையை கண்மூடித்தனமாக நம்பாமல் நம்மைச் சூழவுள்ள இயற்கைச் சான்றுகளை ஆராய்ந்து பகுத்தறிய அழைக்கிறது திருக்குர்ஆன்:
2:164  .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;  அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி,மாறி வீசச் செய்வதிலும்;  வானத்திற்கும்,  பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
இவ்வாறு இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதை சிந்தித்து உணரச் சொல்கிறான் இறைவன்.

மறுமை வாழ்க்கை சத்தியமே
மரணத்திற்குப்பின் உயிர்த்தெழுதலும் வாழ்வும் உள்ளதா என்பதை அறிய அதே பகுத்தறிவை பயன்படுத்த அழைக்கிறான் இறைவன்:
= மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. (திருக்குர்ஆன் 22: 5)
= பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக  உயிர்ப்பிக்கிறவன்;  நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். (திருக்குர்ஆன் 41:39)
= அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்;  உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின்  உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப் படுவீர்கள்.  (திருக்குர்ஆன் 30:19)
மரணத்தையும் உயிர்தெழுதலையும்  ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறீர்கள்!
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம்.  திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம்.
.= அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும்,மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றிபின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்குநிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன. (திருக்குர்ஆன் 39:42)   

இறைவனை எவ்வாறு அறிவது?
மனிதர்களில் பெரும்பாலோர் இறைவனை உரிய முறையில் அறியாத காரணத்தாலும் அவனைப்பற்றி அறிந்து கொள்ள முற்படாத காரணத்தால் சமூகத்தில் இடைத் தரகர்களும் முன்னோர்களும் எதைக் கற்பித்தார்களோ அவற்றையே கடவுள் என்று நம்பி மோசம் போகிறார்கள். உண்மையில் உலகத்தில் பாவமும் அதர்மமும் பெருகுவதற்கும் கடவுளின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுவதற்கும் செல்வம் கொள்ளை போவதற்கும் தவறான கடவுள் கொள்கை காரணமாகிறது. ஏகனாகிய படைத்தவனை வணங்குவதற்கு பதிலாக பல்வேறு படைப்பினங்களை கடவுளாக பாவித்து மக்கள் வணங்கும்போது அதனடிப்படையில் மனிதகுலமும் குழுக்களாகப் பல்வேறு பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. இவ்வாறு கடவுளின் பெயரால் நடக்கும் குழப்பங்களைக் காணும் பலரும் கடவுளே இல்லை என்று நாத்திகத்திற்குத் தாவும் நிலையும் உண்டாகிறது.
இறைவனை அறியும் பொருட்டு இயற்கையையும் அன்றாட நிகழ்வுகளையும் ஆராயத் தூண்டுகிறது இறைமறை:
= மனிதன் என்ற அற்புதமே ஓரு பெரும் சான்று !

= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களாஅல்லது நாம் படைக்கின்றோமா? (திருக்குர்ஆன் 56:57-59)
= . நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்?உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்;பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28)

வெல்லமுடியா மரணமும் ஓர் சான்று:
= உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்எனவே நம்மை எவரும் மிகைக் முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? (திருக்குர்ஆன் 56:60-62)

நீங்கள் செய்யும் விவசாயமும் ஒரு சான்றே:

= (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களாஅல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
 ''நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.. ''மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்'' (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). (திருக்குர்ஆன் 56:63-67)

வானத்தில் இருந்து பெய்யும் மழை நீரும் சான்று அல்லவா?
= அன்றியும்நீங்கள் குடிக்கும் நிரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களாஅல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால்அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (திருக்குர்ஆன் 56:68-70)

நெருப்பும் ஒரு சான்றே!
= நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களாஅல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? (திருக்குர்ஆன் 56:71, 72)

மீண்டும்மீண்டும் தொடரும் படைப்பு அற்புதம்
= இறைவன் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையாநிச்சயமாக இது இறைவனுக்கு மிகவும் சுலபம். (திருக்குர்ஆன் 29:19)

= ''பூமியில் நீங்கள் பிரயாணம் செய்துஇறைவன் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்;நிச்சயமாக இறைவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 29:20)

இவ்வாறு பகுத்தறிவைத் தூண்டி சிந்திக்க வைக்கும் ஏராளமான வசனங்களைத் தாங்கி நிற்கிறது திருக்குர்ஆன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக