தங்கள் இன மக்கள் பிறரால் தாக்கப்படும்போது எழும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவாக நியாயம் கோரி பலர் போராட்டத்தில் குதிப்பது இயல்பு. இவ்வாறு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் போராடவும் முன்வருதல் என்பது தன்னலம் கொண்ட மனிதர்களால் முடியாது. பொதுநலத்தில் அக்கறை கொண்ட இவர்களின் இந்த உயர் குணம் கண்டிப்பாக பாராட்டப் படவேண்டிய ஒன்றே! பலர் தங்கள் படிப்பு தொழில் வியாபாரம் போன்ற வாழ்வாதாரங்களையெல்லாம் தியாகம் செய்தும் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியும் போராட்டமே வாழ்க்கை என்ற நிலைக்கு வந்து விடுகிறார்கள். பிறமக்களின் நலன் நாடி தங்கள் இன்னுயிரை இழந்தவர்களும் அவர்களில் உண்டு.
ஆனால் சில முக்கியமான விடயங்களைப் பற்றி சிந்திக்கவில்லையானால் இப்போராட்டங்கள் அனைத்தும் வீணாகும் அபாயமும் உள்ளது. எதிர் விளைவுகள் உண்டாகவும் வாய்ப்புகள் உண்டு.
எண்ணித்துணிக கருமம் - துணிந்தபின்
எண்ணுவதென்பது இழுக்கு!
எவ்வளவு அழகாகக் கூறிச் சென்றான் வள்ளுவன்.
ஸ்ரீ முதலாவதாக, போராட்டங்களைத் துவக்கும்முன் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள நாம் கடமைப்பட்டு உள்ளோம். வள்ளுவன் கூறுவதில் உண்மையுள்ளது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
இதில் தவறு நேர்ந்தால் என்ன நேரும் என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறோம். நியாயத்திற்கு போராடுகிறோம் என்று சொல்லி ஒரு அநியாயத்திற்கு துணை போகும் அபாயமும் இங்குள்ளது.
ஸ்ரீ ஒரு ஜாதியின் அல்லது ஒரு குறிப்பிட்ட மொழிபேசும் இனத்தின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகள் தங்கள் பலவீனங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். உதாரணமாக ஒரு மொழியை அல்லது ஜாதியை மையமாகக்கொண்டு செயல்படும் இவர்களுக்குள் நல்லோரும் இருப்பர், தீயோரும் இருப்பர். பொதுநலவாதிகளும் சுயநலவாதிகளும் இருப்பர். இப்படிப்பட்ட முரண்பாடான குணமுடையவர்கள் ஏதேனும் ஒரு தலைவரின் ஆவேசப் பேச்சைக் கேட்டுவிட்டு அதன்பின் இணைந்து போராடி தங்கள் போராட்டத்தில் வெற்றியும் பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் என்ன நடக்கும்? .... சில சுயநலவாதிகள் எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு உட்பட்டு கைக்கூலிகளாக மாறுவார்கள். முழு போராட்டத்தையும் வீணடிப்பார்கள். எனவே போராட்டக் களத்தில் குதிக்கும் முன் போராளிகளின் - குறிப்பாக தலைவர்களின் -தனி நபர் ஒழுக்கத்தைப் பரிசீலிக்க வேண்டும்.
ஸ்ரீ அடுத்ததாக சிந்திக்கவேண்டிய விடயம்.... இனம் அல்லது மொழி அல்லது ஜாதியின் அடிப்படையில் நியாயம் அநியாயம் இவற்றை பிரித்தறிவது அல்லது அடையாளம் காண்பது சரியா? என்ற கேள்விக்கு நாம் விடைகாண வேண்டும். 'நம் இனத்தவன் செய்தால்அது எப்போதும் சரியாக இருக்கும்' என்றோ 'எதிரி இனத்தவன் செய்தால் எப்போதும் அது தவறாகத்தான் இருக்கும்' என்றோ யாருமே கூற மாட்டார்கள். எனவே ஒரு கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தில் இறங்கும் முன் நியாயம், அநியாயம் அல்லது நன்மை, தீமை இவற்றை பிரித்தறிய நம்மிடம் என்ன அளவுகோல் உள்ளது என்பதை அவசியம் பார்க்கவேண்டும். இதைத் தீர்மானிக்காமல் போராடினால் மிஞ்சுவது குழப்பமே!
ஸ்ரீ அடுத்ததாக ஜாதியோ மொழியோ உண்டாக்கும் இணைப்பு நிரந்தரமானதல்ல எளிதில் உடையக்கூடியது! ஒரே மொழி அல்லது இனத்தவரிடையே கொள்கை வேறுபாடுகளும் நம்பிக்கை வேறுபாடுகளும் பழக்கவழக்க வேறுபாடுகளும் சகஜம். பிறகு எந்த அடிப்படையில் இணைந்து பணியாற்றுவது? எனவே இவற்றால் ஆக்கபூர்வமான எதையுமே சாதிக்க முடியாது என்பது திண்ணம்!
ஆக, ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு என்ன தேவை? நடுநிலையோடு ஆராய்வோம் வாருங்கள்...
ஸ்ரீ ஜாதி, மொழி, நிறம், இனம் இவைபோன்ற மனிதனைப் பிரிக்கும் அனைத்து விடயங்களையும் கடந்து மனிதனை இணைக்கக் கூடிய ஒரு கொள்கைதான் நமது அடிப்படைத் தேவை.
ஸ்ரீ அது நியாயத்தையும் அநியாயத்தையும் தெளிவாக பிரித்தறிவித்து நியாயத்தை நிலைநாட்டக் கூடியதாகவும் அநியாயத்தைத் தடுக்கக்கூடியதாகவும் அக்கொள்கை இருக்கவேண்டும்.
ஸ்ரீ தனிமனித ஒழுக்கத்தை கற்பிக்கக் கூடியதாகவும் அதை பேணக்கூடிய விதத்தில் மனிதனை ஊக்குவிப்பதாகவும் இருக்கவேண்டும். நியாயத்தை ஏவி அநியாயத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபடும்போது மனிதன் சந்திக்கக்கூடிய தோய்வில் இருந்தும் சஞ்சலங்களில் இருந்தும் எதிர்ப்புகளில் இருந்தும் அவனை நிலைகுலைய விடாமல் காப்பாற்றுவதாக அக்கொள்கை அமையவேண்டும்.
ஸ்ரீ நியாயத்தை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுவோர் அதில் உறுதிகுலையாமல் இருக்க தெளிவாக இலக்குகளை நிர்ணயித்து அவற்றை எளிமையான வன்முறைகள் இல்லாத வழிகளில் அடைவதற்கான வழிமுறைகளை கற்றுத் தருவதாக இருக்கவேண்டும்.
ஸ்ரீ வெற்றியின்போதும் தோல்வியின்போதும் தோய்வடையாது தொண்டர்களை வழிநடத்துவதாக அது இருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு தெளிவான கொள்கைதான் இஸ்லாம் என்பது. இது இவ்வுலகைப் படைத்த இறைவனால் உருவாக்கப்பட்டது. இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபியவர்களின் முன்மாதிரி செயல்பாடுகளுமே இதன் அடிப்படைகள். மேற்கூறப்பட்ட எல்லா தேவைகளும் இவை நிறைவேற்றுவதை ஆராய்வோர் அறியலாம்.
இஸ்லாம் முக்கியமாக மனிதன் மறந்துபோன சில முக்கிய உண்மைகளை நினைவூட்டி அவற்றை அவன் மனதில் ஆழ விதைத்து அவனை சீர்திருத்துகிறது. அவை இவையே:
1. ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.
2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவனுக்கு பதிலாக படைப்பினங்களை வணங்குவதோ உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ மோசடியும் பாவமும் ஆகும். இச்செயல் இறைவனைச் சிறுமைப்படுத்துவதும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதால் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும்.
3. வினைகளுக்கு விசாரணை உண்டு: இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம் வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்க்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.
இந்த முக்கியமான நம்பிக்கைகளை பகுத்தறிவு பூர்வமாக மனித மனங்களில் விதைப்பதன் மூலம் தனி நபர் ஒழுக்கம், மனித சமத்துவம், உலகளாவிய சகோதரத்துவம், இவற்றை நிறுவுகிறது. அநியாயத்தால் ஒடுக்கப்பட்ட மக்களை அவர்களின் அடிமைத் தளைகளில் இருந்தும் அடக்குமுறைகளில் இருந்தும் விடுதலை செய்கிறது.
உலெகெங்கும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டப் பாடுபடுவோருக்கு அவர்களுக்கு அமைப்புகள் இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி அரசாட்சி இருந்தாலும் சரி இல்லாவிடினும் சரி உரிய முறையில் ஊக்கமும் விவேகமான வழிகாட்டுதல்களும் இங்கு கிடைக்கின்றன.
அநீதியாளர்களும் அநீதிக்கு உள்ளானோரும் சக மனிதர்களே சகோதரர்களே என்ற உணர்வும் மனிதன் மனிதனுக்கு எதிரியல்ல, ஆனால் அவர்களை ஆட்கொள்ளும் ஷைத்தான்தான் உண்மையான எதிரி என்ற உணர்வும் போராடுவோர் மனதில் விதைக்கப் படுவதால் அங்கு தனிமனித மற்றும் இனம்சார்ந்த பழிவாங்குதல்களும் வீண் உயிர்சேதங்களும் பொருட்சேதங்களும் தவிர்க்கப் படுகின்றன. போரின் அல்லது போராட்டத்தின் நோக்கம் சகமனிதனை தண்டிப்பதோ அழிப்பதோ அல்ல, மாறாக அவனை சீர்திருத்துவதே என்ற அடிப்படைக் கொள்கையை இஸ்லாம் கற்பிப்பதால் கடினமான எதிரிகளையும் தன்வயப்படுத்தும் தனித்தன்மையோடு இஸ்லாம் என்ற சீர்திருத்த உலகெங்கும் வெகு வேகமாகப் பரவி வருகிறது.
அப்படிப்பட்ட ஏராளமான உதாரணங்களை இஸ்லாமிய வரலாற்றில் நாம் காண முடிகிறது. சுருக்கமாக இரு உதாரணங்களை மட்டும் இங்கு காண்போம்:
= நபிகளாரைக் கொல்ல வாளெடுத்துப் புறப்பட்ட உமர் பின் கத்தாப் என்ற மனிதர் இஸ்லாத்தைப் புரிந்து கொண்ட பின்னர் இஸ்லாத்தில் இணைந்து நபிகளாரின் ஆருயிர் தோழராக மாறி இம்மார்க்கத்தின் பாதுகாவலராக மாறினார். நபிகளாரின் மரணத்திற்குப்பின் இறைவிசுவாசிகளின் தலைவராகப் பணியாற்றும் அளவுக்கு உயர்ந்தார்.
= 13 வருடங்கள் தொடர்ந்து நபிகளாரையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களையும் சித்திரவதைகள் செய்து அவர்களை ஊரைவிட்டே விரட்டியடித்தார்கள் மக்கா நகர மக்கள். அவர்கள் தஞ்சம் புகுந்த மதீனா நகர் மீது மீண்டும்மீண்டும் படையெடுத்து வந்து தாக்கவும் செய்தார்கள் அவர்கள். இறுதியில் பல வருடங்களுக்குப்பின் மக்கா நகரை முஸ்லிம்கள் முழுமையாக கைப்பாற்றிய நாளும் வந்தது. ஆனாலும் நபிகளார் அம்மக்கள் செய்த கடுமையான சித்திரவதைகளுக்காக பழிவாங்க முழுமையான வாய்ப்பு இருந்த போதிலும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களின் இதயங்களை வென்றார்கள். முழு மக்கா நகரமும் இஸ்லத்தில் இணைந்தது.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரேயொரு மனிதரில் (அதாவது நபிகள் நாயகத்தில்) இருந்து துவங்கிய இந்த இயக்கம் இன்று உலக மக்களில் கால்வாசிக்கும் அதிகமானோரை ஈர்த்து தொடர்ந்து அயராமல்வெற்றிவாகை சூடி வருவகிறது என்றால் அதுவே ஒரு பெரும் சான்றல்லவா?
http://quranmalar.blogspot.com/2016/01/blog-post_5.html
இதயங்களை வென்ற இறைத்தூதர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக