மேற்கண்ட வீடியோவில் இன்றுவரை உடல் அழுகாமல் பாதுகாக்கப்பட்ட சடலங்கள் சிலவற்றைக் காணலாம்..... ஆம், சிலவற்றை நாம் இன்று காண முடிகிறது. நம்மால் காண முடியாதவையும் எவ்வளவோ இருக்கவேண்டும் என்பதுதானே உண்மை....
ஆனால் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் வேறொன்று....
இந்த சடங்களும் சரி, அரித்துப்போய் மண்ணோடு மண்ணாக கலந்து விட்ட சடலங்களும் சரி... இந்த ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு ஆத்மா குடியிருந்திருக்கிறது ... அது இந்தக் கூட்டை விட்டு வெளியேறியிருக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை! நாம் முக்கியமாக பதில் காண வேண்டிய கேள்விகள் இவையே:
= கூடானது மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டாலும் இதற்குள் வாழ்ந்த மனிதன் என்ற மாபெரும் அற்புதம் அத்தோடு அழிந்துவிடுமா?
= அது வளர்த்து வந்த ஆசாபாசங்களும் அறிவும் ஆற்றலும் உறவுகளும் திடீரென முறிவதா?
= அது விதைத்த வினைகள் அறுவடையின்றி அழிவதா?
= அது செய்த தியாகங்களுக்குப் பரிசேதும் இல்லையா?
= அது செய்த அக்கிரமங்களுக்கு தண்டனை ஏதும் கிடையாதா?
நம் புலன்களுக்கு இன்று அது எட்டவில்லை என்பதற்காக மறுமையை மறுக்க முடியுமா?
இக்கேள்விகளுக்கு அறிவுபூர்வமான பதில்களை வழங்குகிறது இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன்!
அதன்படி நமது வாழ்வின் அடுத்தகட்டம் மண்ணறை வாழ்வு. அடுத்ததாக பயங்கரமான நிகழ்வுகளுக்குப் பின் உலகம் ஒருநாள் அழிக்கப்படும். அதைத் தொடர்ந்து மீணடும் இறைவன் புறத்திலிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தோருக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் விதிக்கப்படும். அதுதான் நமது நிரந்தர இருப்பிடமாக இருக்கும்
இக்குறுகிய வாழ்வு ஒரு பரீட்சையே!
67:2 .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும்,அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
ஒவ்வொரு உயிரும் மரணத்தைத் தழுவும்!
21:35 .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது;பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
இவ்வுலகு அழியும் , மீணடும் உயிர்பெறும்!
39:68 ஸூர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும்பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து எதிர் நோக்கி நிற்பார்கள்.
நேரம் குறிக்கப்பட்ட நாள் அது!
அது என்று நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இறைவனிடம் அது நிச்சயிக்கப்பட்ட நாள்.
78:17 .நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும். மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
இன்று நம் வினைகள் பதிவாகின்றன!
36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்;அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
நம் வினைகள் முழுமையாக விசாரிக்கப்படும்!
99:6-8 .அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
36:65 .அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
நல்லோர் சொர்க்கத்தில் நுழைவர்!
4:57 (அவர்களில்) எவர்கள் இறைநம்பிக்கை; கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
தீயோர் நரகில் நுழைவர்!
78:21-26 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
உண்மை இதுவே, மற்றவை ஊகங்களே!
நம்மைப் படைத்தவன் நம் எதிர்காலத்தைப் பற்றி என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உறுதியான உண்மை! மற்றவை அனைத்தும் மனித ஊகங்களும் கற்பனைக் கதைகளும் ஆகும்.
3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html
மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக