இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 7 ஜூலை, 2015

பற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின?

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கொள்கை முழக்கத்தோடுதான் இந்த பூமியின் பல்வேறு பாகங்களில் பல்வேறு காலகட்டங்களில் வந்துள்ளார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை! இறைவன் ஒருவனே, நம் மனிதகுலமும் ஒன்றே என்பது உண்மையானால் அந்த இறைத்தூதர்கள் அனைவரும் போதித்த வாழ்க்கை நெறியும் (மதம் அல்லது சமயம்) ஒன்றாகத்தான் இருக்கமுடியும். 

ஒரே பூமி ! ஒரே மனித குலம்! ஒரே இறைவன் ! அவன் போதித்த கொள்கையும் ஒன்றே! பிறகு நாம் ஏன் பிரிந்தோம்? ஏன் இன்று அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது? ஏன் இன்று பற்பல மதங்களும் ஜாதிகளும் உருவாகி ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு அமைதி இழந்து தவிக்கிறோம்? இதன் காரணத்தை நாம் அனைவரும் அவசரமாக ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதில் அலட்சியம் காட்டினால் இவ்வுலகில் அமைதி இன்மையும் இறைவனின் கட்டளைகளை மீறுவதால் அவனது கோபத்தின் விளைவாக உண்டாகும் தண்டனைகளையும் நாம் சந்திக்க நேரிடும்., மறுமை வாழ்வில் அவனது பெரும் தண்டனையான நரகத்தையும் எதிர்கொள்ள நேரிடும்..
சற்றே அதர்மத்தின் ஆரம்பத்தை ஆராய்வோம்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நாட்டுக்கு ஒரு இறைத் தூதர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம் . அவர் அந்நாட்டு மக்களுக்கு தான் இறைவனிடமிருந்து பெற்ற செய்திகளை எடுத்துரைக்கிறார்.
  • மக்களே, நீங்கள் அனைவரும் ஒரு ஆண் - பெண் ஜோடியில் இருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நீங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.
  • மக்களே உங்கள் அனைவரையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவனே. அவனுக்கு நன்றி உள்ளவர்களாக வாழுங்கள். அவனையே வணங்குங்கள்.அவன் மட்டுமே உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியவன். அவனை விடுத்து படைப்பினங்களை ஒரு போதும் வணங்காதீர்கள். அவ்வாறு செய்தால் பிரிந்து விடுவீர்கள்.  
  • இன்று நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்காலிக உலகம் ஒருநாள் அழிக்கப்படும். இறுதித்தீர்ப்பு நாள் ஏற்படுத்தப்படும். அன்று நல்லோருக்கு சொர்க்கமும் தீயோருக்கு நரகமும் விதிக்கப்படும். எனவே இறை கட்டளைகளைப் பேணி வாழுங்கள்.சொர்க்கத்தை அடையலாம். மாறாக ஷைத்தானுக்கும் மனோ இச்சைகளுக்கும் அடிபணிந்தால் நரகத்தை அடைவீர்கள்.
மேலும் அவர் மக்களுக்கு பாவம் எது புண்ணியம் எது என்பதை விளக்கிக் கூறுவதோடு ஒரு முன்மாதிரி புருஷராகவும் மக்களிடையே வாழ்ந்து காட்டுவார். இவ்வாறு அவர் அவ்வூரில் .மக்களோடு இணைந்து தர்மத்தை நிலை நாட்டுவார். மக்களும் கலப்படமில்லாத ஏக இறைவழிபாடு மூலம் ஒன்றிணைந்த நல்லொழுக்கமுள்ள சமூக வாழ்வில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் அமைதியையும் அனுபவிப்பார்கள்.
இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் இறைத்தூதர் மரணம் அடைகிறார். நிலைநாட்டப்பட்ட தர்மத்தின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். ஆனால் நாள் செல்லச் செல்ல என்ன நடக்கிறது?
பிற்கால மக்களில் சிலர் இறந்து போன இறைத் தூதருக்கு அஞ்சலி என்ற பெயரில் அவருக்கு ஒரு ஓவியத்தை வரைந்து மரியாதை செய்ய ஆரம்பிப்பார்கள். நாள் செல்லச் செல்ல ஷைத்தானுடைய தாக்கத்தால் அந்த இறைத்தூதருக்கு சிலை வடிக்கப் படுகிறது! மக்கள் அந்த இறைத்தூதரையே வணங்க முற்படுகிறார்கள் ! என்ன விபரீதம்!
‘படைத்தவனை மட்டுமே வணங்குங்கள் , மனிதர்களையோ, புனிதர்களையோ, சிலைகளையோ எதையுமே வணங்காதீர்கள்’ என்று மக்களிடையே பிரச்சாரம் செய்து தர்மத்தை நிலை நாட்டியவருக்கே சிலை வடிக்கப்பட்டு அவரையே வணங்கும் செயல்! , இல்லை இல்லை அவரது சிலையை வணங்கும் செயல்! நாளடைவில் அவருக்காக வழிபாட்டுத் தலமும் கட்டப்படுகிறது.

(இதை உங்களால் நம்ப முடியவில்லையா? ஓர் அண்மை உதாரணத்தைப் பாருங்கள். கடவுளே இல்லை என்று சிலைகளை உடைத்த பெரியாருக்கே தாங்கள் பகுத்தறிவு வாதிகள் என்று மார் தட்டிக்கொள்பவர்களே சிலை எடுத்தது மட்டுமல்ல தவறாமல் மாலை இடவும் செய்கிறார்கள்!)

ஒரு செதுக்கப்பட்ட பொருளை இப்பேரண்டத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு ஒப்பாக்கும் ஒரு மாபெரும் தவறுக்கு மக்கள் இடம் கொடுத்ததைத் தொடர்ந்து என்ன நடக்கிறது?
  • பல மூட நம்பிக்கைகள் உடலேடுக்கின்றன.
  • கடவுளுக்கு நாங்கள் தான் நெருங்கியவர்கள் , எங்கள் மூலமாகத்தான் கடவுளை நெருங்க முடியும் என்று கூறிக்கொண்டு இடைத்தரகர்களும் புரோகிதர்களும் உருவாகிறார்கள்.
  • கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஒரு கூட்டம் புறப்படுகிறது.
  • அந்நாட்டு அரசனையும் செல்வந்தர்களையும் தன கைக்குள் கொண்டு வந்து புரோகிதம் நாட்டை ஆள்கிறது.
  • பாமரர்களுடையதும் சாமானியர்களுடையதும் உரிமைகள் கொள்ளை போகின்றன.
  • கல்லையும் மரத்தையும் காட்டி கடவுள் என்று கற்பிக்கப் படுவதால் மக்களின் உள்ளத்தில் கடவுளைப்பற்றிய பயம் போய் விடுகிறது.
  • தன செயல்களுக்கு கடவுளிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது.
  • பாவங்கள் மலிந்து விடுகிறது.
  • அநியாயமும் அக்கிரமங்களும் கொலைகளும் விபச்சாரமும் பெருகி வழிகின்றன.
இவ்வாறு அதர்மம் பரவி நாட்டை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக புதிய தூதர் ஒருவர் அனுப்பப்படுகிறார். அவர் மீண்டும் மக்களுக்கு முந்தைய இறைத்தூதர் போதித்த அதே அடிப்படை உண்மைகளை நினைவூட்டி மக்களை மீண்டும் படைத்தவனை வணங்குமாறு அழைப்பார்.அவர்கள் செய்து கொண்டிருக்கும் மூட பழக்கவழக்கங்களை எடுத்துரைப்பார். இப்போது என்ன நடக்கிறது? சிந்திக்கும் மக்கள் இவரது போதனைகளால் நல்லுணர்வு பெற்று இவரை பின் தொடர ஆரம்பிப்பார்கள். மற்றவர்களோ 'இல்லை ,எங்கள் மூதாதையர்கள் எதில் இருந்தார்களோ அதுவே சரி, உங்கள் போதனை எங்களுக்குத் தேவை இல்லை' என்று மறுத்து எதிர்ப்பார்கள்.அதர்மத்தையும் அக்கிரமங்களையும் மூலதனமாக கொண்டு வயிறு வளர்போரும் அரசியல் நடத்துவோரும் இம்மக்களை முழு மூச்சாக இறைத் தூதருக்கும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோருக்கும் எதிராக முடுக்கி விடுவார்கள். ஆனால் காலப்போக்கில் இறை அருள் கொண்டு தருமம் மறுபடியும் வெல்லும்! .

தொடர்ந்து புதிய இறைத்தூதரும் அவருடைய பிற்கால மக்களால் வணங்கப்படுகிறார். அவருக்கும் சிலைகளும் கோவில்களும் எழுப்பப்படுகின்றன.அந்த அதர்மமானது அவரது பெயரைச் சூட்டி ஒரு மதமாக உருவெடுக்கிறது. மீண்டும் ஒரு புதிய தூதர்.......என மீண்டும் அதே கதைத் தொடர்கிறது. இவ்வாறு வந்த தூதர்களின் வரிசையில் கடைசியாக வந்த இறைத் தூதர்தான் முஹம்மது நபி அவர்கள். அவருக்கு முன்னதாக வந்து சென்றவர்தான் இயேசு கிருஸ்து அவர்கள். இந்த தொடர் சரித்திரத்தில் என்ன நடக்கிறது? அதர்மம் அந்தந்தக் காலத்து இறைதூதர்களின் அல்லது நாட்டின் அல்லது வமிசத்தின் பெயரால் மதமாக அறியப்படும். ஆனால் தர்மமோ இறைவனுக்கு கீழ்படிதல் என்ற பண்புப் பெயரால் அறியப்படும்! இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் ஒரே மனித குலமாக இருந்த நமக்குள்ளே எப்படி பிரிவினைகள் உருவாயின என்று!

2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
(அல்லாஹ் என்றால் வணக்க்கத்திற்குத்  தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

 எனவே இன்று மோட்சம் அடைய விரும்புவோர் முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயங்கள் இவையே:
= ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன். அவனல்லாது வணக்கத்திற்கு தகுதியான யாரும் இல்லை. இறைவனை அவன் கற்பிக்கும் வண்ணம் வணங்கவேண்டும்.
= அனைத்து  இறைத்தூதர்களையும் பேதபாவமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கிடையே வேற்றுமை கற்பிக்கக் கூடாது.
= ஆனால் அந்தந்த காலகட்டத்து மக்கள் அவரவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதரையும் வேதத்தையும் பின்பற்றி வாழ்வதே மோட்சத்திற்கு உரிய வழியாகும். காலாவதியான வேதங்களையும் சிதைந்துபோய் இறைத்தன்மையை இழந்துபோன வேதங்களையும் பின்பற்றுவது இறைவனின் உண்மையான வழிகாட்டுதலைப் புறக்கணிப்பதற்கு சமமாகும்.
=============================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

1 கருத்து: