இறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம்!
தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும், அவனை விடுத்து மற்றவற்றை வணங்குவது மாபெரும் பாவம் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார்கள்
= (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ (இறை வெளிப்பாடு) அறிவிக்காமலில்லை. (திருக்குர்ஆன் 21:25)
கண்டிப்பாக இறைவன் எந்த முரண்பாடுகளையும் கற்பிக்க மாட்டான் என்பதையும் இறைத்தூதர்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட மாட்டார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று முரண்பாடுகளாக ஏதாவது தென்பட்டால் அவை பிற்காலங்களில் ஒருசில குழப்பவாதிகளும் இடைத்தரகர்களும் அரசியல் சக்திகளும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்ட நுழைத்தவை என்பதும் தெளிவு.
தர்மத்தை நிலைநாட்ட அடித்தளம்
இறைவனின் ஏகத்துவத்தை போதிப்பதே இறைத்தூதர்களின் அடிப்படைப் பணியாக இருந்தது. ஏனெனில் இதுதான் பூமியில் தர்மத்தை நிலைப் நாட்டுவதற்கான அடித்தளம். மனிதன் பாவங்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால் கடவுளைப் பற்றிய முறையான எண்ணமும் நம்பிக்கையும் அவனுள் விதைக்கப்பட வேண்டும். அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னைக் கண்காணிக்கிறான், நான் குற்றம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு அவனுள் சதா இருக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் இந்த பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் தத்தமது மக்களுக்கு கீழ்கண்டவாறு கடவுள் கொள்கையை போதித்தார்கள்:
· இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே. அவன் மட்டுமே உங்கள் வணக்கத்துக்கும் பிரார்த்தனைக்கும் உரியவன்.
· அவனை நேரடியாக வணங்க வேண்டும். அவனுக்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை. சடங்கு சம்பிரதாயங்களும் தேவை இல்லை.
· அவனுக்கு ஓவியங்களோ உருவங்களோ சமைக்ககூடாது ஏனெனில் அவனைப்போல் எதுவுமே இல்லை.
· நாங்கள் அவனுடைய தூதர்கள் மட்டுமே. அவனுக்கு பதிலாக எங்களையோ எங்கள் சமாதிகளையோ உருவங்களையோ வணங்கக் கூடாது.
· படைத்தவனுக்கு பதிலாக படைப்பினங்களையோ உருவங்களையோ நீங்கள் வணங்குவீர்களாயின் உங்களுக்குள் பிரிவினைகளும் குழப்பங்களும் ஏற்படும்.
என்றெல்லாம் போதித்தார்கள். திருக்குர்ஆனில் இருந்து முன்னாள் இறைத்தூதர்களில் சிலரது உதாரணங்களை கீழே காண்கிறோம்:
= 7:59. திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தவரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. மகத்தானதொரு நாளின் வேதனை உங்கள் மீது வந்து விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”
= 29:16. மேலும், இப்ராஹீமை நாம் அனுப்பினோம். அப்போது அவர் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். மேலும், அவனுக்கு அஞ்சுங்கள். நீங்கள் அறிந்துகொள்வீர்களாயின், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.
= 7:65. மேலும், ‘ஆத்’ கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை எனவே, நீங்கள் தவறான நடத்தையிலிருந்து விலகிக்கொள்ள மாட்டீர்களா?”
= 7:73. மேலும், ஸமூத் கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. இது அல்லாஹ்வின் ஒட்டகம் இது உங்களுக்கு ஒரு சான்றாக உள்ளது. எனவே, அல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து திரிய இதனை விட்டு விடுங்கள்! இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்வீர்களாயின் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.
இவ்வாறு இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதை எடுத்துரைத்த அவர்கள் அந்த மக்கள் செய்துகொண்டிருந்த தவறுகளைப் பற்றி எச்சரித்தார்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்து இறைவனின் போதனைகளின் படி பாவ - புண்ணியங்கள் எவை என்பவற்றை கற்பித்தது மட்டுமல்லாமல் முன்மாதிரி புருஷர்களாகவும் வாழ்ந்து காட்டினார்கள். நாளடைவில் தர்மத்தையும் நிலைநாட்டின்னார்கள். ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் மெல்லமெல்ல இக்கட்டளைகளை மீறினார்கள். ஷைத்தானின் தூண்டுதலால் இறைத்தூதர்களின் நினைவுக்காக அவர்களுக்கு உருவப் படங்களை வைக்க ஆரம்பித்தார்கள். நாளடைவில் அவற்றைச் சிலைகளாக வடித்து பின்னர் அவற்றை வழிபட ஆரம்பித்தார்கள். உண்மை இறைவனை மறந்தார்கள்! அதன் விளைவு?.....இறையச்சம் மக்களில் இருந்து அகல அகல, இடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் பெருகப் பெருக...... கடவுளின் பெயராலேயே சுரண்டல்களும் அக்கிரமங்களும் நடந்தேறின. இவ்வாறு பூமியில் அதர்மம் பரவிப் படர்ந்தது..
---------------------------------
தொடர்புடைய ஆக்கங்கள்:
இறைவனை வணங்க இடைத்தரகர் எதற்கு?
உருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக