இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

அரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்!

பாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். 
 மன்னர்களும் மன்னர்களின் பரம்பரைகள் மட்டுமல்ல, திறமையுள்ள எந்தப் பாமரனும் ஆட்சிக் கட்டிலில் ஏறலாம் என்பதை உலகில் முதன்முதலாக விதியாக்கியது இஸ்லாத்தின் இறைதூதர் நபிகள் நாயகமே என்பதை ஆராய்வோர் அறியலாம்!  

அரசியலுக்கு புது இலக்கணம் 

நாடும் மக்களும் நாட்டு வளங்களும் அனைத்தும் மன்னனுக்கே சொந்தம் என்ற எழுதப்படாத விதியையும் ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி!’ என்ற மரபுகளையும் மாற்றி அமைத்தது இஸ்லாத்தின் வரவு! நாடும் மக்களும் மட்டுமல்ல, உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்றும் மனிதனிடம் தற்காலிகமாக வழங்கப்படுவதே ஆட்சியதிகாரம் என்று அரசியலுக்கு புது இலக்கணம் வகுத்தது இஸ்லாம். அரசனாயினும் ஆண்டியாயினும் அவரவர்க்கு இவ்வுலகில் இறைவனால் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்ற உண்மையை நினைவூட்டி அதை அரசியலுக்கு அடிப்படையாக்கியது இஸ்லாம்! 

நபிகளார் நிறுவிய சமத்துவ அரசாங்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆன்மீகத் தலைமையும் ஆட்சித் தலைமையும் அன்னாரது இறுதிக் காலத்தில் கைவந்தது. அன்றுவரை இருந்து வந்த அரசர்களின் அல்லது ஆட்சியாளர்களின் நடைமுறைகளை இஸ்லாமிய நடைமுறை மூலம் மாற்றிக் காண்பித்தார் நபிகளார். 

= பொதுவாக உலகில் முடியாட்சிகள் எப்படி இருக்குமோ அவ்வாறே அரபு நாட்டு அரசாங்கங்கள் செயற்பட்டுவந்தன.  அரசாங்க அலங்காரங்களோடு உயர்ந்த அரண்மனை மாட மாளிகைகளில் சகல வசதிகளோடு தாங்கிய சௌந்தர்ய சிம்மாசனங்களில் பெருமைமிகு பட்டாடைகளை உடுத்திக் கொண்டு உடல் முழுக்க பொன் நகைகளைப் போர்த்திக் கொண்டு பொன்னாலும், வெள்ளியாலும் இழைக்கப்பட்ட இருக்கைகளில் சுற்றி நிற்கும் இளநங்கையர் வீசும் சாமரத்திலிருந்து வெளிப்படும் காற்றை அனுபவித்துக் கொண்டு உல்லாச வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள், அரசவை பிரபுக்களுக்கு செலுத்தப்பட்டு வந்த மரியாதை இஸ்லாம் ஆட்சிக் கட்டில் ஏறியபின் தடுத்து நிறுத்தப் பட்டது.

= அரசவைக்கே அணிகலன்களாக திகழ்ந்த பொன் ஆசனங்களும், வெள்ளி இருக்கைகளும் இல்லாது போயின. 

= ஆட்சியாளர்களின் வருகையை கட்டியம் கூறி அறிவிக்கும் நடைமுறையும் பராக், பராக் ஒலி ஓசைகளும் ஒழிந்து போயின. 

= ஆட்சியாளரை சந்திக்க வந்துள்ளோரை வடிகட்டுவதற்காக நியமிக்கப் பட்டிருந்த தனி அதிகாரிகள் காணாமல் போயினர். 

= அரசன் விதிப்பதே சட்டம் என்ற நிலைமாறி இறைவன் விதிப்பதே சட்டம் என்ற நிலை அமுலுக்கு வந்தது.

= கோத்திரத்துத் தலைவர்கள் பெரும்பாலும் மக்களுடைய விருப்பத்திற்கேற்ப, அல்லது அவர்களிடம் இருந்த வீரமறம், வள்ளல் குணம் போன்றவற்றை முன்வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். ஆயினும்கூட, மற்ற மக்களுக்கு இல்லாத ஏராளமான சிறப்புரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.  கோத்திரத்துத் தலைவர்களின் கால்நடைகளுக்கென்று தனி மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மற்றவர்கள் யாரும் அதில் காலைக்கூட வைக்க முடியாது.  இந்த சடங்கையும், தவறான மரபையும் அடியோடு ஒழிப்பதற்காகத்தான் இறைத்தூதர் (ஸல்) கீழ்வருமாறு அறிவித்தார்கள். “இறைவனையும் இறைத்தூதரையும் தவிர மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கீடு செய்யும் உரிமை வேறு யாருக்கும் இல்லை!” 

= போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் மற்ற மக்களுக்கு இல்லாத வகையில் தலைவர்களுக்கென்று சிறப்புப்பங்கு இருந்தது. அவை அனைத்தையும் இல்லாதொழித்து ஐந்தில் ஒரு பங்கு என்ற நடைமுறையை இஸ்லாம் கடமையாக்கியது. 

= பொது அவைகளில் தலைவர்களுக்கு முன்னால் வெளிப்படையாக மக்கள் பேசுவதற்குக்கூட சுதந்திரம் இல்லாமல் இருந்தது. ஆனால் இக்குறையைப் போக்க ஆட்சித் தலைவரும் அவருடைய அதிகாரிகளும் பொதுமக்கள் எளிதாகச் சந்தித்துக் கொள்ளும் பள்ளி வாசல்களையே தங்களுடைய செயலகங்களாக ஆக்கிக் கொண்டனர். 

சட்டத்திற்கு முன் சமநிலை: 

அந்த காலகட்டத்தில் ஆட்சியாளர்களும், மன்னர்களும் அரசவையை சார்ந்தவர்களும் பொதுமக்களுக்கு மட்டுமல்ல எந்த சட்டத்திற்கும் எட்டாத தூரத்தில் இருந்தார்கள். சட்ட நெறிமுறைகள் அவர்களை ஒரு போதும் கட்டுப்படுத்தாது.  ஆனால், இங்கு பார்த்தால் இறைத்தூதர் இடத்திலும் அவருடைய வீட்டார்களிடத்திலும் தான் முதன் முதலில் சட்டம் செயல்படத் தொடங்கும். இறைத்தூதரின் வீட்டைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு தவறை செய்து விட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை கிடைக்கும் என்று இறைவன் கட்டளையே பிறப்பித்திருந்தான். 

உதாரணமாக, வட்டி வியாபாரம் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட போது தன்னுடைய சிறிய தந்தை அப்பாஸ் அவர்களுக்கு வரவேண்டிய வட்டி நிலுவைத் தொகை அனைத்தையும் இறைத்தூதர் தள்ளுபடி செய்து விட்டார்கள். அறியாமைக் காலத்தில் இருந்து தொடரும் மோதல்களுக்காக இனிமேல் யாரும் பழிதீர்க்கக் கூடாது என்கின்ற ஆணை அமுல்படுத்தப் பட்டபோது தம்முடைய சொந்த கோத்திரத்தின் சார்பில் எல்லா வகையான வழக்குகளிலும் பழி வாங்குதலை கைவிடுவதாக இறைத்தூதர் அறிவித்தார்கள்.

"என் மகள் பாத்திமாவே திருடி இருந்தாலும் அவளது கையையும் வெட்டுவேன்" என்று சூளுரை பகர்ந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்).

------------------------ 

நாட்டைக் காப்போம்நாட்டு மக்களை நேசிப்போம்!
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக