இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்!


இயற்கை வளங்களும், நிலத்தடி வளங்களும் மனித வளமும் அறிவு வளமும் ஆன்மீக வளமும் ஒருசேரப் பெற்ற நாடு நம் பாரதத்தைப் போல் உலகெங்கிலும் காண முடியாது. பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்பது கவிதை வரிகளானாலும் மறுக்க முடியாத உண்மையே! இப்படிப்பட்ட பெருமைமிக்க நாடு தொடர்ந்து அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி இன்னல்களைத் தொடர்ச்சியாக அனுபவிப்பதற்குக் அடிப்படையாக திகழும் குறைபாடுகளைக் கண்டறிந்து களைவது நாட்டுப்பற்று மிக்க ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமையாகும்.

அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்...

அ) தனிநபர் ஒழுக்க சீர்கேடு 
நாட்டில் குற்றங்களும் பாவசெயல்களும் மோசடிகளும் நாளுக்கு நாள் பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே பாவங்களைப் பற்றிய குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இல்லாமையாகும். தனி நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் தன் செயல்பாடுகளுக்காக தன்னைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு நாளுக்கு நாள் பெருகி வருவதை நாம் காணலாம். நாடே குற்றம் செய்யும்போது நாம் மட்டும் ஏன் செய்யக்கூடாது என்ற உணர்வும் சிறிய குற்றம் செய்பவன் பெரிய குற்றம் செய்பவனைக் காரணம் காட்டி தன் செயலை நியாயப்படுத்திக் கொள்ளும் போக்கும் குற்றங்கள் பற்றிய பொறுப்புணர்வையும் வெட்க உணர்வையும்  சமூகத்தில் இல்லாமல் ஆக்கி விடுகின்றன..
ஆ) சரியும் தவறும் வரையறுக்கப்படாமை
மக்களின் செயல்பாடுகளில் சரி எவை தவறு எவை நல்லவை எவை தீயவை எவை என்றோ நாட்டில் நியாயம் எது அநீதி எது என்பதையோ தீர்மானிக்க தெளிவான உறுதியான எந்த அளவுகோலும் இல்லாதது நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும். சட்டத்தை எப்படியும் வளைக்கலாம் என்ற நிலையும் என்பது ஆளுக்கு ஒரு நீதி, நாளுக்கு ஒரு நீதி என்று சட்டம் கேலிக்குள்ளாக்கப்படுவது இதன் காரணத்தினால்தான்! 
இ) மிக பலவீனமான தொலைநோக்கு இல்லாத சட்டங்கள்
= பலவீனமானவையும்  சிறிதும் தொலை நோக்கில்லாதவையும் ஆன சட்டங்கள் நடைமுறையில் இருப்பதன் காரணமாக விபச்சாரம், மது, சூதாட்டம், ஓரினச்சேர்க்கை போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொடிய குற்றங்கள் கூட சட்ட அங்கீகாரத்தோடு நடைபெறவும் நாளுக்கு நாள் பெருகவும் செய்கின்றன. இவற்றைத் தொடர்ந்து திருட்டும் கொள்ளையும் கற்பழிப்புகளும் கூட எதிர்காலத்தில் சட்ட அங்கீகாரம் பெறக்கூடிய அபாயமும் நாட்டில் உள்ளது.
ஈ) தவறான ஆன்மீகம்.
பொதுவாக ஆன்மிகம் என்பது மனிதனை பண்புள்ளவனாக ஆக்கக் கூடியது. ஆனால் கடவுளைத் தவறாக சித்தரிப்பதன் காரணமாக மக்கள் உள்ளங்களில் இருந்து கடவுள் நம்பிக்கையும் இறையச்சமும் விலகிப் போகின்றன. உதாரணமாக சர்வ வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட கடவுளுக்கு பதிலாக உயிரும் உணர்வும் இல்லாத பொருட்களையும் இறந்துபோனவர்களின் சமாதிகளையும் காட்டி அவற்றையெல்லாம் கடவுள்கள் என்று கற்பித்தால் அங்கு மக்களிடம் இறையச்சம் என்பது விலகி பாவங்கள் செய்யும் போது உண்டாகும் குற்ற உணர்வு உண்டாகாமல் போகிறது. எந்த ஒரு பாவத்தையும் தயக்கமின்றி செய்யும் துணிச்சல் வந்துவிடுகிறது.
உ ) கற்பனைப் பாத்திரங்களின் ஆதிக்கம்
= நாட்டின் சுமார் 44 கோடி மக்கள் வறுமைக் கோட்டின் கீழே வாழ்ந்துவரும் நிலையில் நாட்டுக்கு அறவே பயனில்லாத பல கற்பனைப் பாத்திரங்களுக்காக நாட்டின் செல்வங்கள் கொள்ளை போகின்றன. தலைவர்களின் சிலைகளுக்கும் மொழித்தாய்களுக்கும் நினைவிடங்களுக்கும் இவற்றைத் தொடரும் மூடநம்பிக்கைகளுக்கும் வீண்சடங்குகளுக்கும் பெருவாரியான செல்வம் அரசால் செலவிடப்படுகிறது. இவற்றின் பெயரால் மூளும் கலவரங்களும் உயிர் மற்றும் உடமை சேதங்களும் பாமரர்களை  தொடர்ந்து வறுமையிலும் வாட்டத்திலும் நீடிக்க வைக்கின்றன.
ஊ) தகுதியற்றவர்களிடம் ஆட்சிப் பொறுப்பு
= நாட்டின் உற்பத்திக்கோ மேம்பாட்டுக்கோ எந்தவித பங்களிப்பும் செய்யாததும் நாட்டு மக்களை சோம்பேறிகளாக்கவும் செய்கின்ற திரைப்படம் மற்றும் கிரிக்கெட் போன்ற கேளிக்கைகளுக்கு ஊடகங்களும் அரசும் வீண் முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிப்பதால் நாட்டு மக்கள் இதன் பெயரால் வெகுவாக கொள்ளை அடிக்கப் படுகிறார்கள். இவர்கள் நாட்டு மக்களின் உழைப்பின் கனிகளை சுரண்டி வாழ்கிறார்கள். அவர்களின் நேரங்களை பாழ்படுத்துகிறார்கள். ஆனால் மக்களின் அறியாமையால் நாட்டை ஆள்வதற்கு அறவே தகுதி இல்லாத நடிக நடிகையர்களின் காலடிகளில் நாட்டின் ஆட்சிபீடமும் ஒப்படைக்கப் படுகிறது.
எ) ஆன்மீகத்தின் பெயரால் கொள்ளை
 இறைவழிபாடு என்ற பெயரில் எல்லா மதங்களையும் சார்ந்த இடைத்தரகர்கள் நாட்டு மக்களிடையே மூடநம்பிக்கைகள் பலவற்றைப் பரப்பி இவற்றின் பெயரால் நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கிறார்கள். இதன்மூலம் பொருட்செலவு இல்லாத எளிமையான வழிபாடு வியாபாரமாக்கப்படுகிறது. நாட்டுமக்களின் சேமிப்பும் உழைப்பும் இவர்களால் கறக்கப்பட்டு இவர்கள் நடத்தும் நிறுவனங்களிலும் ஆசிரமங்களிலும் பதுக்கப்படுகிறது.
) கடவுளின் பெயரால் மனிதகுலத்தில் பிரிவினைகள்
= மதங்களின் பெயரால் திணிக்கப்படும் மூடநம்பிக்கைகளின் விளைவாக  மனித இனம் கூறுபோடப்பட்டு மனித சகோதரத்துவமும் சமத்துவமும் மறுக்கப்படுகிறது.  அதனால் மனிதகுலத்தில் தீண்டாமையும் வெறுப்பும் விதைக்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு சுயநலமிகள் அரசியல் ஆதாயங்கள் தேடுவதால் இனக் கலவரங்களும் மதக்கலவரங்களும் கற்பழிப்புகளும் படுகொலைகளும் தொடர்கதைகளாகின்றன. 
ஐ) முறையற்ற பொருளாதாரக் கொள்கை:
முறையற்ற வரிவிதிப்பு, வட்டி சார்ந்த வங்கி முறை, சுரண்டல்காரர்களின் அரசியல் ஆதிக்கம், அரசியல்வாதிகளின் குறுக்கீடு போன்றவற்றின் காரணமாக நாட்டின் தொழில் வளர்ச்சியும் வணிகமுறைகளும் விபரீதமான முறையில் பாதிக்கப்படுகின்றன. அதனால் கறுப்புப்பணம், பதுக்கல், வரி ஏய்ப்பு, இலஞ்ச ஊழல்கள் போன்றவை மலிந்து நாட்டை குட்டிச்சுவராக்குகின்றன.
ஒ) குறைபாடுகள் மலிந்த கல்வித் திட்டம்
கல்வியின் முதல் நோக்கம் மனிதனை பண்புள்ளவனாக ஆக்குவதே. அதற்கான எந்த பாடத்திட்டங்களும் நமது கல்வி முறையில் இல்லை. பொருள் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வி கற்பிக்கப்படுவதால் தங்களுக்காக உழைத்த பெற்றோர்களைப் புறக்கணிக்கவும் முதியோர் இல்லங்களில் சேர்க்கவும் செய்கிறார்கள் அவர்களின் மக்கள். மேலும் வாழ்க்கையில் எந்தவகையிலும் பயன்படாத பலவற்றையும் பாடத்திட்டத்தில் உட்படுத்தி மாணவர்களின் நேரங்கள் கணிசமான அளவில் வீணடிக்கப்படுகிறது.
ஓ) ஊடக வஞ்சனை
இன்று ஊடகங்களின் மூலம் வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகளை பரவவிட்டு பொதுமக்களை ஏமாற்றி அதன்மூலம் பகல் கொள்ளைகளையும் இனக்கலவரங்களையும் சுயநல சக்திகள் நிகழ்த்துகின்றன. இதனால் நாடு சந்திக்கும் பொருட்சேதங்களும் உயிர் சேதங்களும் அளவிட முடியாதவை.  ஆதாரம் ஏதுமின்றி இவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் திட்டமிட்டு பரப்பபடுபவையே என்று பின்னர் நிரூபணம் ஆனாலும் இந்த வஞ்சகர்களையும் ஊடகங்களையும் தண்டிக்க எந்த முகாந்திரமும் இல்லாததால் தொடர்ந்து நாடு இக்கொடுமைக்கு பலியாகிறது.
பட்டியலிட இன்னும் பல குறைபாடுகள் இருந்தாலும் விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம். 

இந்த தொடரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து நாட்டைக் காப்பாற்ற வழியேதும் உண்டா? விழி பிதுங்கி நிற்கும் நம் நாட்டுக்கு இனியோர் விடுதலை என்று பிறக்கும்? ....ஏங்காத உள்ளங்கள் கிடையாது என்பதை அறிவோம்.

வெள்ளையர் வெளியேறவில்லை! 
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_92.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக