இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 ஆகஸ்ட், 2024

பன்மை சமூகத்தில் தர்மத்தை நிலைநாட்டுதல் எவ்வாறு?


 இஸ்லாம் என்றாலே இறைவனின் ஏவல்-விலக்கல்களை ஏற்று வாழ்வதனால் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்படும் அமைதிமிக்க நிலை என்று அறிவோம். அதற்கான வழிகாட்டுதலாக இன்று நம்மிடையே அனுப்பப்பட்ட இறைவேதமே திருக்குர்ஆன். அந்த வேதத்தின் கட்டளைகளை நடைமுறையில் வாழ்ந்து காட்டிய முன்மாதிரிதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். 

இஸ்லாத்தின் குறிக்கோள் உலகெங்கும் ஒரு அமைதி வாய்ந்த நீதிமிக்க உலகைக் கட்டியெழுப்புவது. அதாவது பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவது. அதற்காக இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை ஏற்று வாழும் முஸ்லிம்களுக்கு உடன் வாழும் பன்மை சமூகங்களைச் சார்ந்த சக மக்களுடன் எவ்வாறு நல்லிணக்கத்துடன் நடந்து கொள்வது என்பது பற்றிய விடயங்கள் கற்றுத் தரப்படுகின்றன.   

திருக்குர்ஆனின் நிழலிலும் நபிகளாரின் நடைமுறை ஒளியிலும் பன்மை சமூகத்தில் நல்லிணக்கத்திற்கான கீழ்கண்ட அடிப்படைகளை நாம் காணலாம்:

01. மனித சமத்துவம்

= 'நிச்சயமாக நாம் உங்களை ஒரே பெண்ணிலிருந்தும் ஒரே ஆணிலிருந்தும் படைத்தோம். பின்னர் கோத்திரங்களாகவும் குழுக்களாகவும் ஆக்கினோம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.' (திருக்குர்ஆன் 49: 13)
இந்த வகையில் மனித சமத்துவம் என்ற குர்ஆனிய சிந்தனை அகிலத்துக்கு தந்த மாபெரும் அருட்கொடையாகும். அதுவே இஸ்லாம் வழங்கிய சமூக நல்லிணக்கத்துக்கான பிரதான அடிப்படையாகும். உலகில் காணப்படும் ஆத்திக மற்றும் நாத்திகக் கோட்பாடுகளில் மனித சமத்துவத்தைப் பற்றி பேச்சளவில் இருக்கும். ஆனால் அதற்கான அடிப்படை என்ன என்று கேட்டால் பதில் இருக்காது. திருக்குர்ஆன் மட்டுமே மனிதகுலத்தின் மூலம் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியில் இருந்துதான் என்று கூறி மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை பறை சாற்றுவதைக் காணலாம். 

02. மனிதம் மதிக்கப்பட வேண்டும்

உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் கண்ணியமானவர்கள். இந்த மனிதம் பற்றிய சிந்தனையை இஸ்லாம் தனியாக பேசுகிறது.
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.   (திருக்குர்ஆன் 17:70)

இங்கு அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி சகவாழ்வு தொடர்வதற்கு மனிதம் மதிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் அறை கூவல் விடுக்கிறது. அந்த சிந்தனைக்கான ஒரு நடைமுறை உதாரணமாக நபிகளார் யூதரொருவரின் பிரேதத்தை கண்டு எழுந்து நின்று மரியாதை செய்த நிகழ்வைக் கூறலாம்.

03. கொள்கைச் சுதந்திரம்

ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் விரும்பும் கொள்கையை அல்லது மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் உள்ளது. எனவே, மாறுபட்ட கொள்கையையோ மதத்தையோ பின்பற்றுகின்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் அல்லர். அதே போன்று ஒருவர் ஏற்றிருக்கின்ற மார்க்கத்தை அல்லது கொள்கையை பிறர் மீது திணிக்கும் உரிமையும் எவருக்குமில்லை.

'மார்க்கத்தில் நிர்பந்தம் கிடையாது' (திருக்குர்ஆன் 2: 256)
அவர்கள் விசுவாசம் கொள்ளவில்லை என்பதால் அவர்கள் மீது எத்தகைய ஆதிக்கமும் செலுத்த முடியாது.

'அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவராக நீர் இல்லை' (திருக்குர்ஆன் 88:22)

இது போன்ற மத சகிப்புத் தன்மையையும் கொள்கை சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்ற இன்னும் பல வசனங்களை திருக்குர்ஆனில் அதிகமாவே காண முடியும்.

04. மனிதன் அடுத்த சகோதர மனிதனுக்கு பயனுள்ளவனாவான்.

= 'மனிதர்கள் அனைவரும் இறைவனின் குடும்பமே. இறைவனின் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளவர்களே இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்கள்.' (நூல்: முஸ்லிம்)
சமூக உறவுகளின் மேம்பாடு மனிதர்கள் ஒருவருக்கொருவர் நலம் நாடுவதிலும் உதவுவதிலும் உள்ளது.  அதற்காக தன்னை அர்ப்பணிக்கும் தியாக சிந்தையை இஸ்லாம் விதைக்கும் மறுமைக் கோட்பாடு வளர்க்கிறது.  

5. மனிதர்கள் யாவரும் சகோதரர்கள்

இஸ்லாம் மனித சகோதரத்துவத்தை மிகக் கடுமையாக வலியுறுத்துகின்றது. எல்லா மனிதர்களதும் மூதாதையர் ஆதித் தந்தை ஆதமும் ஆதித் தாய் ஹவ்வாவுமே என்று நிறுவி அதனால் அனைவரும் சகோதர சகோதரிகளே என்றும் ஒரே குடும்பத்தவரே என்றும் கூறுகிறது இஸ்லாம்.

சகோதரத்துவம் பற்றிய இஸ்லாத்தின் கருத்து மிகவும் ஆழமானது, யதார்த்தமானது. இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டின் ஒரு பகுதியாகவும் அது அமைந்துள்ளது. 'இறைவா! மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என நான் சாட்சி பகர்கிறேன்' என இறைதூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகையின் பின்னரும் பிரார்த்தனை செய்யும் வழக்கம் கொண்டிருந்தார்கள் என ஸைத் பின் அர்கம் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்)

06. பன்மைத்துவம் பிரபஞ்ச நியதிகளில் ஒன்று

சமூகங்கள், மொழிகள், கலாசாரங்கள், மதங்களிலுள்ள பன்மைத்துவம் இறை நியதிகளில் ஒன்று. இப்பன்மைத்துவம் யதார்த்தமானது, அழகானது, இயல்பானது. இது பிரபஞ்ச விதிகளில் ஒன்று.

= 'உமது இரட்சகன் நாடியிருந்தால் அனைத்து மக்களையும் ஒரே சமூகமாக ஆக்கியிருக்கலாம். ஆனால் இறைவன் அப்படி நாடவில்லை. மக்கள் தொடர்ந்தும் கருத்து வேறுபாடு கொண்டவர்களாகவே உள்ளனர்.' (திருக்குர்ஆன் 4:48) மற்றொரு வசனத்தில்

= 'உமது இறைவன் நாடியிருந்தால் உலகிலுள்ள அனைவரும் முஸ்லிம்களாக விசுவாசம் கொண்டிருப்பர். அவ்வாறு உமது இறைவன் விரும்பவில்லை. எனவே மக்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாற வேண்டும் என விரும்பி நீர் அவர்களை நிர்ப்பந்திக்கிறீரா? (திருக்குர்ஆன் 10:99)

இவ்விரு வசனங்களும் சமூகங்கள் மற்றும் மதங்களில் உள்ள பன்மைத்துவம் இறை நியதிகளில் ஒன்று என்பதை தெளிவு படுத்துகிறது.

பல மதங்களின் இருப்பை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாத்தின் நிலைப்பாடு, இஸ்லாம் மட்டும்தான் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட சத்திய மார்க்கம் என்ற சிந்தனைக்கு முரண்படமாட்டாது. 'நிச்சயமாக இறைவனிடத்தில் மார்க்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இஸ்லாம் மாத்திரமே' ((திருக்குர்ஆன் 3:19) ஆனால் ஏனைய மதங்கள், சமூகங்கள் உயிர் வாழ்வதற்கான உரிமை அவற்றுக்கு உண்டு என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவது முஸ்லிம்களது கடமையே தவிர அவர்களை முஸ்லிம்களாக மாற்றுவது பொறுப்பல்ல.
இந்த உண்மையை அங்கீகரிக்காமல் சகிப்புத்தன்மை வளராது. சகிப்புத்தன்மை இல்லாமல் சகவாழ்வு என்பதும் இல்லை.

7) பிற சமயத்தவர்களின் உரிமைகளுக்கான உத்தரவாதம்

மதீனா அரசில் நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய அரசியல் சாசனம் மனித உரிமைகளை எல்லாக் குடிமக்களுக்கும் உத்தரவாதம் செய்தது. அதில் சிறுபான்மை என்ற பெயரில் யாரும் இருக்கவில்லை. அந்த அரசியல் அமைப்பின் பிரதான அம்சங்கள் பின்வருமாறு அமைந்தன.

i) யூதர்களும் முஸ்லிம்களும் தத்தமது சமயத்தை முழுமையாக பின்பற்றலாம்

II) இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் உதவி செய்யப்படுவர். நீதியாக நடத்தப்படுவர்.

III) தாய் நாட்டை காப்பதற்கு சகல தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
குடியுரிமை ஒப்பந்தத்தின் கீழ்வரும் தரப்பினரோடு யாராவது போர் புரிந்தால் அவர்களைக் காப்பதற்கு உதவி செய்ய வேண்டும் ( அதாவது பிற மதத்தவர்களுக்காக முஸ்லிம்கள் போராடுவர்)

8) சமூக நீதியும் சகவாழ்வும்.

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். (திருக்குர்ஆன் 60:8) 

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

மேற்கூறிய வசனத்தில் நன்மை என்றால் முஸ்லிம் அல்லாதோரிடையே உள்ள பசித்தவர்களுக்கு உணவளித்தல், நோயாளிகளை தரிசித்தல், ஆடையற்றவர்களுக்கு ஆடை வழங்குதல், கடன் கேட்போருக்கு உதவுதல், அறிவு ரீதியாக வழிகாட்டல், உள ரீதியில் ஆலோசனை வழங்கல் என பல்வேறு உபகாரங்களை குறிக்கும்

9) கரைந்து போகாமல் கலந்து வாழ்தல், திறந்த நிலையில் தனித்துவம் பேணல்

= 'மக்களுடன் கலந்து வாழும் முஃமின் (இறைவிசுவாசி) கலந்து வாழாத முஃமினை விட சிறந்தவன்' என்பது நபிமொழி.  இன்னொரு நபிமொழியில் கலந்து வாழும் முஃமின் உயர்ந்த கூலியை பெறுவான் என்றும் வந்துள்ளது. கலந்து வாழ்வதை இஸ்லாம் தூண்டுகிறது. மூடுண்ட சமூகமாக வாழ்வதை இஸ்லாம் வெறுக்கிறது.
பிற சமூகங்களுடனான உறவை துண்டித்து வாழும் இறுக்கமனப் போக்கு எப்படி ஆபத்தோ அதேபோன்று வரையறைகளின்றி தனித்துவத்தை இழந்து கலந்து பழகுவதும் பெரும் ஆபத்தானதே. இரண்டு தீவிர போக்குகளையும் தவிர்த்து நடுநிலை வகிப்பது இங்கு முக்கியமானது. இஸ்லாம் அந்த சமநிலையை பேணுகிறது.

இஸ்லாமிய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காத நிலையில், முஸ்லிம் அல்லாதவர்களோடு இணங்கியும் கலந்தும் வாழ்தல் மிகவும் முக்கியம். தனித்துவத்தைப் பேணல், கலந்து வாழல் ஆகிய இவ்விரு நோக்கங்களையும் நிறைவேற்ற வேண்டுமாயின், உலகில் வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் 'கரைந்து போகாமல் கலந்து வாழ்தல், திறந்த நிலையில் தனித்துவம் பேணல்' என்ற வாழ்வியல் சமன்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்

10) சட்டத்தின் முன் அனைவரும் சமம்

இனம், மொழி, பிராந்தியம், தேசம், ஆகிய எல்லைகளைத் தாண்டி மனிதர்கள், மதங்கள், கலாசாரங்கள், நாகரிகங்கள் இணைந்து சமாதானமாக வாழலாம் என்பதற்கு திருக்குர்ஆன் முன்வைக்கும் இன்னொரு விழுமியம் அதன் நீதி பற்றிய கொள்கையாகும். சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனையும் நீதத்துடன் நடத்துவது ஏனைய மனிதர்களதும் அதிகாரத்தின் சகல மட்டங்களில் உள்ள தலைவர்களதும் கடமையாகும். இந்தக் கடமை மிகவும் பாரியது. இறையச்சத்திற்கு நிகரானது என்று நீதியின் தாத்பரியத்தை திருக்குர்ஆன் விளக்குகிறது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தார் அல்லது குழுவினர் மீது ஒருவரோ ஒரு குழுவினரோ கொண்டுள்ள விருப்பு வெறுப்பு நீதி செலுத்துவதில் செல்வாக்கு செலுத்தக் கூடாது என்று கண்டிப்பான கட்டளையிடுகிறது திருக்குர்ஆன்.

இறைவிசுவாசிகளே! நீங்கள் நீதி செலுத்தி அல்லாஹ்வுக்கு சாட்சியாளர்களாக இருங்கள். நீங்கள் செலுத்தும் நீதி உங்களுக்கோ உங்களது பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ எதிரானதாக இருந்தாலும் கூட' (திருக்குர்ஆன் 3:35 )

11) மனிதாபிமான உதவிகள்

நபியவர்கள் மக்காவிலிருந்து விரட்டியடிக்கப்பட்;டு, மதீனாவில் வாழுகின்றபோது மக்காவாசிகள் பஞ்சம் காரணமாக பட்டினியால் வாடுகிறார்கள் என்ற செய்தி நபிகளாரின் செவிக்கு எட்டுகிறது. உடனே ஹாதிப் பின் அபீ பல்தஆ என்ற தோழரிடம் 500 திர்கம்களை கொடுத்து மக்கா வாழ் குறைசிக் காபிர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்குமாறு பணித்தார்கள். குறைஷியர்களின் பகையுணர்வும் பலதெய்வ வழிபாடும் சகவாழ்வின் அடிப்படையான மனிதாபிமான உதவிகளுக்கு தடையாக இருக்கவில்லை. மனிதாபிமான உதவிகள் சகவாழ்வின் தோற்றுவாய்.

மேற்கண்ட விடயங்களை  செயற்படுத்தினால் எல்லா மனிதர்களும் நிறம், மதம், மொழி, கலாசாரம் என்பவற்றைக் கடந்து ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ முடியும். முரண்பாடுகள், முறுகல் நிலைகளைத் தாண்டிச் செல்ல முடியும். இன மோதல்கள் நிகழ்வதைத் தவிர்க்கலாம். இரத்தம் சிந்தலைத் தடுக்கலாம். வேற்றுமைகளுக்கு மத்தியில் மனிதம் என்ற வகையில் ஒற்றுமையாக வாழலாம்.

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

2 கருத்துகள்:

  1. இஸ்லாம் முஸ்லீம் அல்லாத மக்களிடத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றால் முஸ்லிம்களே இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம் இப்படிப்பட்ட சூழலில் அல்லாஹ்வின் உண்மையான மார்க்கத்தை முஸ்லிம்களின் இலக்கை. லட்சியத்தை. அல்லாஹ்வின் அடியார்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் திருக்குர்ஆன் நற்செய்தி மலர் தொடர்ந்து வெளிவரவும் அதை கொண்டு மக்கள் அனைவரும் பயன் அடையவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி துவா செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமீன். ஜஸாகல்லாஹு ஹைரன் சகோ. உங்கள் பெயர் மற்றும் ஊர்?

      நீக்கு