இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஜூன், 2024

சிலையில்லாமலே நினைவு கூரப்படும் மகான்

 

வீணடிக்கப்படும் வரிப்பணம்

தங்கள் வாழ்நாளில் செய்த சில சாதனைகளுக்காக சிலை வைத்து நினைவு கூரப்படுகிறார்கள் சிலர். இந்திய மாகாணங்களை இணைத்தார் என்றும் சொல்லப்படும் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களுக்காக சமீபத்தில் வைக்கப்பட்ட சிலைக்கு சுமார் 9000 கோடி மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டதை நாம் அறிவோம். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக – நாட்டில் ஏழை மக்களின் நலனுக்காக- நலிந்தவர்களின் மருத்துவ வசதிக்காக – தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றை உருவாக்குவதற்காக – மக்கள் பிரதிநிதிகளிடம் நம்பி ஒப்படைக்கப்படும் பணம் மக்களின் வரிப்பணம். தொடர்ந்து தங்களால் போற்றப்படும் சில புண்ணிய புருஷர்களுக்காக பலகோடி செலவில் மேலும் சிலைகள் உருவாக்கப்படும் என்றும் அரசாள்வோர் முன்னறிவிப்பு செய்திருப்பதையும் நாமறிவோம்.

இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் எதிர் கட்சியினரும் சிலை வைப்பில் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவர்களின் சரித்திரம் நமக்கு எடுத்துரைக்கிறது. சிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலையிட்டு மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம். கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம் தொடர்வதை நாம் காண்கிறோம். இச்செயல் பகுத்தறிவுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர்களில் யாரும் இதைக் கண்டிப்பதையும் நம்மால் காண முடிவதில்லை!
உருவச்சிலையில்லா உத்தமர்
இந்த வேளையில் உருவச்சிலையோ அல்லது படமோ எதுவுமே இல்லாமல் உலகெங்கும் மக்களால் போற்றப்படும் அந்த மகானைப் பற்றி நாம் நினைவு கூருவோம் வாருங்கள். இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் ‘இவ்வுலகைப் படைத்த இறைவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவர் எவருமில்லை’ எனும் கொள்கை முழக்கத்தோடு தன் பொது வாழ்க்கையைத் துவங்கினார்கள். அந்தக் கொள்கையை மிகமிக உறுதியாக தன்னைப் பின்பற்றும் மக்களிடையே விதைத்து பூமியில் தர்மத்தை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டார்கள்.
அவர் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ நாம் பார்க்க முடியவில்லை. இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்பது அவர் போதித்த ஓரிறைக் கொள்கையின் உறுதியான தாக்கத்தைக் காட்டுகிறது. படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள்
சிலை வழிபாடு அல்லது உருவ வழிபாடு என்பது மக்களை உண்மை இறைவனை விட்டும் திசைதிருப்பி மக்களை வழிகெடுக்கும் ஷைத்தானின் செயல் என்பதால் நபிகளார் மிகமிகக் கடினமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். தன் வாழ்நாளில் எதற்காக பாடுபட்டாரோ அந்த ஏக இறை வழிபாடு பிற்காலத்திலும் தடையின்றித் தொடர ஆவன செய்தார்கள்.
அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி “மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்என்று எச்சரித்தார்கள்.
இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று “நபிகள் நாயகமேஎனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்” என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.
அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல தனக்காக பிறர்  எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். “யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்” என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணமும் வகுத்துச் சென்றார்கள்.
--------------------------- 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக