இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 ஜூன், 2024

உலகை மாற்றிய இறுதி உபதேசங்கள்

 

 அந்த ஹஜ்ஜின்போது பெருமானார் (ஸல்)அவர்கள் ஆற்றிய உரை உன்னதமானது. உணர்ச்சி மயமானது... இது போல சிறந்த உரையை.. சாதனை உரையை.. நிறைவேற்றப்பட்ட பிரகடனங்களின் தொகுப்பை  மிகச்சிறந்த வாழ்வியல் அறிவுரையை.. வரலாற்றில் எவரும் நிகழ்த்தியது கிடையாது. அன்று அவரது வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் உலகெங்கும் சிதறிப் பரந்தன. மனித மனங்களைக் கொள்ளை கொண்டன. உலக வரலாற்றை மாற்றி அமைக்க எதுவாக அமைந்தன.

மற்ற தலைவர்களுக்கும் இவருக்கும் உள்ள வேறுபாடு  
= இறந்து போவதற்கு முன் வெறும் தத்துவம் பேசி மரித்தார் சாக்ரடீஸ்!
= தன் இனத்திற்கு இல்லாத பெருமையைஇருப்பதாகக் கூறி மக்களை கவர முயன்றார் ஹிட்லர்!
= தீண்டாமை ஒழியவும் ஜாதிக் கொடுமைகள் ஒழியவும் வாழ்நாள் முழுக்கப் பிரச்சாரம் செய்து அவற்றுக்கான தீர்வு காணாமலேயே மறைந்து போன பெரியார் அல்லது அம்பேத்கர் போன்ற சீர்திருத்த வாதிகளையும் நாமறிவோம்.
ஆனால் பெருமானாரின் அந்தப் பேருரை உலகெங்கும் மனித குலத்தின் மாண்பைப் போற்றுகின்ற புரட்சியை துவங்கி வைத்தது. மனித உரிமைகளை மீட்கும் உந்துகோலாக அமைந்தது.
குல வெறியும்மொழி வெறியும் கொண்ட மக்களைப் பண்படுத்தி அவர்களிடையே மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பிரகடனப்படுத்தி அதை அங்கீகரிக்க செய்த சாதனை வெற்று அரசியல் பேசி கைதட்டல்கள் வாங்கி பெருமை பாராட்டும் அரசியல் தலைவர்களின் செயல் போன்றதல்ல. தொடரும் சமூகப் புரட்சிக்காக ஊன்றப்பட்ட வேர் அது.
ஒவ்வொரு அசைவிலும் தனது சமூகத்தை வழிநடத்தும் ஒரு மகத்தான தலைவரின் அன்பும்கருணையும்அக்கறையும்கவனிப்பும்கண்காணிப்பும் எச்சரிக்கை உணர்வும் பொங்கி வழிந்த உரை அது.
சமூக அமைதியை நடைமுறைப்படுத்த விழையும் எவருக்கும் இந்த உரையின் ஒவ்வொரு அம்சமும் முக்கியத்துவம் வாய்ந்தது...  பின்பற்றப்பட வேண்டியது...
இதில் முக்கிய கவனத்திற்குரியவை.
= ஒன்றே குலம்!
= ஒருவனே இறைவன்!
= அக்கிரமம் கூடாது.
= வட்டி கூடாது.
= பழிவாங்கும் வஞ்ச உணர்ச்சி வேண்டாம்.                
= பெண்மையைப் போற்றுவோம்.
= இறைவாக்கும் நபி மொழியுமே நேர்வழிக்கான அடிச்சுவடிகள்.
= உலக சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்.
= இனமொழி நிற அடிப்படையில் பேதமில்லை.
அழியாத வரலாற்று சாதனை
இது போல உன்னதமான உண்மையான இலட்சியப் பிரகடனங்களைக் கொண்ட உரையை உலக வரலாறு அதுவரையும் கேட்டதில்லை. இனி கேட்கப் போவதுமில்லை. இந்த உரை மூலம் அன்று பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் இன்றளவும் உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற தலைவர்களின் உரைகளைப் போல காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கின்றன.
நபிகளாரைப் பின்பற்றுவோரின் சிறப்பு பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

"அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில்அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும்இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும்அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும்அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்திஉதவியும் புரிகின்றார்களோமேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளியினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்." ( திருக்குர்ஆன் 7:157. 

நபிகள் நாயகம் அவர்களின் இறுதிப்பேருரை

ஹிஜ்ரி பத்தாவது ஆண்டு (கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) இறைத்தூதரின் வாழ்க்கை இறுதி நாள்களை நோக்கி நகர்ந்தது. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக இறைத்தூதர்(ஸல்) மக்காவிற்கு வந்தார்கள். மக்காவின் அரஃபா மற்றும் மினா மைதானங்களில் மக்களிடையே உரை நிகழ்த்தினார்கள். மனித குலம் முழுமைக்கும் உலகின் இறுதிநாள் வரை மாற்றியமைக்க முடியாத உரிமைப் பிரகடனமாய் அவ்வுரை அமைந்தது. இதை அரஃபா உரை எனக் குறிப்பிடுகிறார்கள்.

இந்த உரை நிகழ்த்தப்பட்ட போது அதை கேட்கத் திரண்டிருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 1,40,000. ஒலி பெருக்கி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அத்தனை பேருக்கும் அவ்வுரை எவ்வாறு எட்டியிருக்கும் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். நபிகளாரின் உரையை செவியுற்றவர்கள் அடுத்தடுத்து பின்னால் நிற்பவர்களுக்கு எட்டச் செய்தார்கள். பிற்காலங்களில் அவற்றை ஏடுகளில் பதிவு செய்தவர்கள் ஏனைய நபிமொழிகள் எவ்வாறு அறிவிப்பாளர்களின் தரம் ஆராய்ந்து பதிவு செய்தார்களோ அதேமுறையில் இந்த இறுதி உரையின் முக்கிய பாகங்களையும் பதிவு செய்தார்கள். அவற்றின் தொகுப்பை நீங்கள் கீழே வாசிக்கலாம்:

வரலாற்று சிறப்புமிக்க அரஃபா உரை:

= புகழனைத்தும் ஏக இறைவனுக்கே! அவனைப் புகழ்கிறோம்; அவனிடமே உதவி தேடுகிறோம்; அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். நம் மனோ இச்சைகளின் கெடுதியைவிட்டும், நம் செயல்களின் தீங்கைவிட்டும் அவனிடமே காவல் தேடுகிறோம். யாருக்கு ஏக இறைவன் நேர்வழிகாட்டியுள்ளானோ அவரை வழிகெடுப்பவர் எவருமிலர்; யாரை அவன் வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமிலர். ஏக இறைவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை ஏதுமில்லை என நான் சாட்சியளிக்கிறேன். முஹம்மத் அவனுடைய அடியாரும் தூதருமாய் இருக்கிறார் என்றும் நான் சாட்சியளிக்கிறேன். (அல் பிதாயா - இப்னு கஸீர் 5/189)

= மக்களே! என் பேச்சைக் கவனமாகக் கேளுங்கள்! இவ்வாண்டிற்குப் பின்பு மீண்டும் உங்களை இவ்விடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது. ( இப்னு மாஜா 1892, 1893)

சமத்துவப் பிரகடனம்:

= மக்களே உங்களின் இறைவன் ஒருவனே! ஓர் அரபிக்கு அரபி அல்லாத ஒருவரை விடவோ, அரபி அல்லாத ஒருவருக்கு ஓர் அரபியை விடவோ மேன்மையோ சிறப்போ இல்லை. ஒரு வெள்ளையருக்கு ஒரு கருப்பரை விடவோ, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விடவோ சிறப்பேதும் இல்லை. இறையச்சமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக ஏக இறைவனிடம் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் இறையச்சம் அதிகமாய் உள்ளவரே. (பைஹகீ)

= மக்களே ஏக இறைவனை அஞ்சுங்கள்! அடிமையான கருப்பர் ஒருவர் உங்களுக்கு தலைவராய் ஆக்கப்பட்டாலும், அவர் இறைவேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் அவருக்கு செவி சாயுங்கள்; கீழ்படியுங்கள். (நஸாயீ 4192, திர்மிதி 1706 1706)

சக உயிர்களை மதியுங்கள்:

= மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த நாளும் (துல் ஹஜ் 9ஆம் நாளும்) இந்த நகரமும் (மக்கா நகரமும்) எந்த அளவிற்குப் புனிதமானவையோ அதே அளவிற்கு உங்கள் உயிர்களும், உடமையும், மானமும், மரியாதையும் உங்களுக்குப் புனிதமானவையே. (புகாரீ 1741, 1742, முஸ்லிம் 2334)

= அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பின்பு ஒருவரையொருவர் கழுத்தை வெட்டிக் கொண்டு வழிகெட்டவர்களாக இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள்.

அமானிதம் பேணுங்கள்:

= உங்களின் இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (நீதியில் நிலைத்திருங்கள்). நீங்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அப்போது உங்களின் செயல்கள் குறித்து இறைவன் விசாரிப்பான். மார்க்கத்தைத் தெளிவாக உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். உங்களில் ஒருவர் பிறரின் பொருளுக்குப் பொறுப்பேற்றிருந்தால் அதன் உரிமையாளரிடம் உரிய முறையில் ஒப்படைத்து விடட்டும். (புகாரீ 4406)

பணியாட்களும் சகோதரர்களே:

= மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! உங்களின் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களைச் சீராகப் பராமரியுங்கள். நீங்கள் உண்பதுபோல அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்நீங்கள் உடுத்துவது போல அவர்களுக்கும் உடுத்தக் கொடுங்கள்.

மோசடி வேண்டாம்:

= குறைஷிகளே! மறுமைக்கான தயாரிப்புடன் நாளை மக்கள் வரும்போது, உலகச் சுமைகளை உங்களின் பிடரியின் மீது சுமந்தவர்களாய் வராதீர்கள். அப்போது எந்த விஷயத்திலும் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பவனாக நான் இருக்கமாட்டேன்.

பழிக்குப்பழி மற்றும் வட்டிக்கு முற்றுப்புள்ளி:

= அறியாமைக் கால விவகாரங்கள் அனைத்தும் என்  கால்களுக்குக் கீழே புதைக்கப் பட்டுவிட்டன. அறியாமைக் காலத்தில் நிகழ்ந்த கொலைகளுக்குப் பழிவாங்குதல் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுவிட்டன. நம்மிடையே நடந்த கொலைகளில் ரபீஆ இப்னு ஹாரிஸின் மகன் கொலை செய்யப்பட்டதற்கான பழிவாங்குதலை முதலில் நான் தள்ளுபடி செய்கிறேன். - பனூ ஸஅத் குலத்தாரிடம் அவன் பால்குடிச் சிறுவனாக இருந்துவந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்றுவிட்டனர். அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப் படுகிறது. நம்மவர் கொடுத்திருந்த வட்டியில் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்புக் குரிய வட்டியை முதலாவதாக நான் தள்ளுபடி செய்கிறேன். அவருக்குரிய வட்டி அனைத்தும் அசலுடன் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ( முஸ்லிம் 2334)

சொத்துரிமை மற்றும் விபச்சாரம் பற்றிய தீர்ப்புகள்:

= மக்களே! சொத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவரின் உரிமையை இறைவன் வழங்கியுள்ளான். இனி எவரும் தன் வாரிசுகளுக்கு உயில் எழுதக்கூடாது.

= அறிந்து கெள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது.

= திருமணத்திற்குப் பின்பு ஒரு பெண் விபச்சாரம் செய்து அதன் மூலம் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை திருமணம் முடித்துள்ள ஆணுக்கே உரியதாகும்.

= திருமணத்திற்குப் பிறகும் விபச்சாரத்தில் ஈடுபடுபவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.

= தந்தை அல்லாத ஒருவரை தம் தந்தையாக அழைப்பவரின் மீதும், தம் எஜமானனுடன் தன்னை இணைத்துக் கொண்டவரின் மீதும் ஏக இறைவன், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும். அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (நஸாயி 3642, அபூ தாவூத் 2870)

குடும்பத் தலைமைக்கு கட்டுப்படுதல்:

= “ஒரு பெண் கணவனின் வீட்டிலிருந்து அவனுடைய அனுமதி இல்லாமல் எதையும் செலவிடக்கூடாது.”

"உணவையுமா?” என அப்போது கேட்கப்பட்டது.

"ஆம்! அதுதான் நம்முடைய செல்வங்களில் மிகச் சிறந்ததுஎன்று இறைத்தூதர் (ஸல்) பதிலளித்தார்கள். (அபூ தாவூத் 3665)

இரவல் கொடுத்தோர் உரிமைகள்:

= இரவலாக வாங்கப்பட்ட பொருள் உரியவரிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். பாலைக் கொண்டு பயன்பெற அளிக்கப்பட்ட கால்நடைகள் (பயன்பெற்ற பின்னர்) உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்படவேண்டும். இழப்பீடு நிறைவேற்றும் பொறுப்பு தலைவனையே சாரும். (அபூ தாவூத் 3665)

கணவன்மார்களின் உரிமையும் கடமைகளும்:

= மக்களே கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் ஏக இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவர்களுக்கு நன்மையே நாடுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்! ஏக இறைவனின் அமானிதமாக அவர்களைப் பெற்றுள்ளீர்கள். உங்களின் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருப்பதுபோலவே உங்கள் மீதும் அவர்களுக்கு உரிமைகள் உள்ளன. நீங்கள் விரும்பாதவர்களை அவர்கள் உங்களின் வீடுகளுக்குள் அனுமதிக்காதிருப்பது அவர்களின் கடமையாகும். மானக்கேடான காரியங்கள் செய்யாமல் இருக்கவேண்டும். அவர்கள் குற்றம் இழைத்தால் அவர்களைத் தண்டிக்கிற உரிமை உங்களுக்கு உண்டு. அதாவது அவர்களை உங்களின் படுக்கையைவிட்டு ஒதுக்கிவையுங்கள்! காயம் ஏற்படாத வகையில் இலேசாக அடியுங்கள்; அவர்கள் தங்களின் தவறிலிருந்து விலகிக் கொண்டால் அவர்களுக்கு முறையாக உணவும் உடையும் அளியுங்கள்! அவர்களுக்கு நன்மையையே நாடுங்கள்! ஏனெனில் உங்களிடம் உங்களின் உதவியாளர்களாகவும், உங்களையே சார்ந்தவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அதைத் தவிர (பாலுறவு கொள்வதைத் தவிர) வேறுஎதையும் உரிமையாகக் கொள்ளமாட்டீர்கள். ஏக இறைவனின் பெயரை முன்மொழிந்து அவர்களுடன் மணவாழ்க்கை ஒப்பந்தம் செய்துள்ளதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். (முஸ்லிம்  2334, திர்மிதீ 1163, 3087)

ஷைத்தான் மற்றும் தஜ்ஜால் பற்றிய எச்சரிக்கை:

= மக்களே! உங்களின் இந்நகரத்தில், தான் வணங்கப்படுவது குறித்து ஷைத்தான் நம்பிக்கை இழந்துவிட்டான். இருப்பினும் அவன் மகிழும் விதமாக அற்பமாக நீங்கள் கருதும் சில விஷயங்களில் அவனுக்குக் கீழ்ப்படிவீர்கள். எனவே உங்களின் மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாய் இருங்கள். (முஸ்த்தரகுல் ஹாகிம்)

= (பிற்காலத்தில் தோன்றும் பெரும் பொய்யன்) அல் மஸீஹுத் தஜ்ஜால் குறித்து எச்சரிக்கிறேன். இறைவன் அனுப்பிய இறைத் தூதர்களில் எவரும் தம் சமுதாயத் தாரை தஜ்ஜால் குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. இறைத்தூதர் நூஹ்(அலை) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர்களும் (அவனைக் குறித்து) எச்சரித்தார்கள்.

அவன் (இறுதிகாலத்தில்) தோன்றுவான். அவன்  தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், உங்களின் இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்ல என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதை மும்முறை கூறினார்கள். உங்களின் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்ல. அவனோ (தஜ்ஜாலோ) வலக்கண் குருடானவன். அவன் கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப்போல இருக்கும். ( புகாரீ 4402)

மாதத்தின் நாட்களை முன்பின் ஆக்குதல்:

= (மாதத்தின் நாள்களை ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கு) முன்பின் ஆக்குதல் இறைமறுப்பை அதிகரிக்கும் செயலாகும். இதனால் இறைமறுப்பாளர்களே வழிகெடுக்கப்படுகிறார்கள். அவர்களே ஒரு மாதத்தின் நாள்களை முன்பின் ஆக்கி ஓர் ஆண்டில் அம்மாதங்களில் போரிடுவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதத்தில் போரிடுவது கூடாது என தடுத்துக் கொள்கிறார்கள். தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை இறைவன் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கைக்கு சரியாய் ஆக்கி இறைவன் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமானதாய் ஆக்கிக் கொள்வதற்காகத்தான் இவ்வாறு செய்கிறார்கள். (இப்னு மாஜா 3055)

= அறிந்து கொள்ளுங்கள்! வானங்களையும் பூமியையும் இறைவன் படைத்த நாளிலிருந்தே அதன் அமைப்புப்படி இப்போதும் காலம் சுற்றிவருகிறது. ஏக இறைவனிடம் மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டாகும். வானங்களையும் பூமியையும் இறைவன் படைத்த அன்று இவ்வாறுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. அவை துல் கஅதா, துல் ஹஜ் மற்றும் முஹர்ரம். நான்காவது ரஜப் மாதமாகும். (புகாரீ 4662, அபூ தாவூத் 1942)

சகோதரத்துவம் பேணுதல்:

=ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! மனமுவந்து கொடுத்தால் தவிர, ஒரு முஸ்லிமின் பொருள் மற்றொரு முஸ்லிமுக்கு ஆகுமானதன்று. உங்களுக்கே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள். (திர்மிதீ 3078)

இஸ்லாமிய கடமைகள் பேணுதல்:

= மக்களே! உங்களின் இறைவனை வணங்குங்கள்! அவனையே அஞ்சுங்கள்! கடமையான ஐவேளைத் தொழுகையைத் தவறாது பேணுங்கள்! நோன்பு நோற்றுவாருங்கள்! மனமுவந்து ஸகாத் கொடுத்துவாருங்கள்! இறைஇல்லத்தை (கஅபாவை) ஹஜ் செய்யுங்கள்! உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்குக் கட்டுப் படுங்கள்! (அப்போதுதான்) நீங்கள் சுவர்க்கம் செல்வீர்கள். (திர்மிதீ 616)

= ஒருவர் குற்றமிழைத்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுக்கப்படும். மகனின் குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (இப்னு மாஜா 1015)

இறுதி வேண்டுகோள்கள்:

= என் பிரார்த்தனையைத் தவிர இறைத்தூதர் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் (உலகிலேயே) முடிந்துவிட்டது. மறுமை நாளுக்கு அதை நான் என் இறைவனிடம் சேமித்து வைத்துள்ளேன். அறிந்து கொள்ளுங்கள்! மறுமையில் இறைத்தூதர்கள் தங்களின் சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்வார்கள். அப்போது என்னைக் கேவலப்படுத்திவிடாதீர்கள்! நான் உங்களுக்காக கவ்ஸர் எனும் நீர்தடாகத்தின் அருகில் அமர்ந்திருப்பேன்.

= மக்களே! எனக்குப் பின்னர் எந்த இறைத்தூதருமிலர். உங்களுக்குப் பின்னர் எந்தச் சமுதாயமும் இல்லை. இங்கு வந்திருப்பவர்கள் வராதிருப்பவர்களுக்கு (இச்செய்தியை) எட்டச் செய்யுங்கள்! செய்தி சென்று சேர்பவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவரை விட நன்றாய் ஆராயும் தன்மை கொண்டவராய் இருக்கலாம். (புகாரீ 67, 105, 1741)

= மக்களே! நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். என் பேச்சைக் கவனமாகக் கேளுங்கள். என்னுடைய பிரச்சாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். உங்களிடையே இறைவேதத்தையும், அவனுடைய தூதரின் வழிமுறையையும் விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பின்பற்றினால் வழிதவறமாட்டீர்கள். (முஸ்லிம்  2334, இப்னு மாஜா 3074)

 இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) உரை நிகழ்த்திவிட்டு மக்களை நோக்கி,

"மறுமை நாளில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கப்படும் போது என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டார்கள்.

“(இறைச்செய்திகள்) அனைத்தையும் தெரிவித்துவிட்டீர்கள்; தங்களின் பொறுப்பை தாங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள்; நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியளிப்போம்என மக்கள் கூறினார்கள்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) தம் ஆட்காட்டி விரலை வானத்தின் பால் உயர்த்தி சைகை செய்துவிட்டு பின்னர் மக்களின் பால் தாழ்த்தி, "இறைவா இதற்கு நீயே சாட்சிஎனக்கூறி தங்களின் அரஃபா உரையை நிறைவு செய்தார்கள். (முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் உரை நிகழ்த்திய இடத்தில் திருக்குர்ஆனின் 5:3 வசனம் அருளப்பட்டது.

இன்று உங்களுக்காக உங்களின் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கிவிட்டேன். உங்கள்மீது என் அருட்கொடையையும் பூர்த்தி ஆக்கி விட்டேன். இன்னும், உங்களுக்காக இஸ்லாத்தை உங்களின் மார்க்கமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். (திருக் குர்ஆனின் 5:3)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக