நபிகளாரை அழவைத்த நபித்தோழர்!
நபிகளார் தோழர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இஸ்லாம் வருவதற்கு முந்தைய காலமான அறியாமைக் காலத்து நிகழ்வுகள் பற்றிய பேச்சு எழுந்தது. ஒரு தோழர் தன் அடி மனதில் உறைந்து கிடந்த நிகழ்வைச் சொல்லத் தொடங்கினார்.
“இறைத் தூதரே! அந்த அறியாமைக் காலத்தில் என் மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த நேரம். நான் வியாபார விஷயமாகப் பயணம் செல்ல வேண்டிய கட்டம். என் மனைவியிடம், ‘ஆண் குழந்தை பிறந்தால் பத்திரமாகப் பார்த்துக் கொள். பெண் குழந்தை பிறந்தால் கொன்று புதைத்து விடு’ என்று சொன்னேன். பிறகு நான் பயணத்தில் இருந்து திரும்பியபோது மனைவி என்னிடம், ‘நமக்குப் பெண் குழந்தை பிறந்தது. நல்லவேளை அது இறந்து விட்டது’ என்று சொன்னாள்.
சில ஆண்டுகள் சென்றன. ஒருநாள் என் வீட்டிற்கு ஒரு அழகான பெண் குழந்தை வந்து விளையாடுவதைக் கண்டு, ‘யாரவள்?’ என்று திடுக்கிட்டுக் கேட்டேன். அதற்கு என் மனைவி, ‘பக்கத்து வீட்டுக் குழந்தை’ என்றாள். அந்தக் குழந்தை என்னிடம் பழகத் தொடங்கியது. குழந்தைக்கும் எனக்கும் இடையே இருந்த பாசத்தைக் கண்ட என் மனைவி, ‘இந்தக் குழந்தை மீது உங்களுக்கு அவ்வளவு பாசமா?’ என்று கேட்டாள். ‘ஆம்.. இவள் என் உயிரல்லவா?’ என்றேன். அப்போது என் மனைவி, ‘அன்று நான் சொன்னது பொய். இது பக்கத்து வீட்டு குழந்தை அல்ல. நம் குழந்தைதான். உங்களுக்குப் பயந்து நான் அப்படிச் சொன்னேன்’ என்றாள்.
நான் மகிழ்ச்சியில் நனைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அறியாமைக் காலத்து வெறித்தனத்தில் நான், அந்தக் குழந்தையைக் கொல்ல முடிவு செய்தேன். ஆனாலும் பாசம் என்னை விடவில்லை. பாசத்திற்கும், அறியாமைக் கால சிந்தனைகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் பாசம் தோற்றது.
ஒருநாள் என் அன்பு மகளைப் பாலை வெளிக்கு அழைத்துச் சென்றேன். என்னுடன் அவள் விளையாடிக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் இருந்தாள். ஒரு இடத்தில் குழி தோண்டினேன். பாலை வனத்தின் மணல் என் தாடியில் பதிந்தன. அந்தச் செல்ல மகள் ஏதும் அறியாமல், தன் பிஞ்சு விரல்களால் என் தாடியில் உள்ள மணலைத் தட்டி விட்டாள். இறைத்தூதரே! நான் கல்நெஞ்சக்காரன். என் மகளைக் குழியில் தள்ளி மணலைப் போட்டு, உயிரோடு புதைத்து விட்டேன்” என்று நபித் தோழர் சொன்னபோது, நபிகளார் அழ ஆரம்பித்து விட்டார்.
அருகில் இருந்த தோழர்கள், அந்தத் தோழரைப் பார்த்து, “என்ன காரியம் செய்தீர்? நபிகளாரையே அழச் செய்து விட்டீரே!” என்றபோது, நபிகள் நாயகம், “அந்தக் காலம் மறைந்து விட்டது. நாம் பாவமன்னிப்பைத் தேடி மீண்டு விட்டோம்” என்று கூறியவண்ணம் தனது தாடி நனையும் அளவு அழுதார்கள்.
பின்னர் நபிகள் நாயகம் கூறினார்கள்: “நாம் எவ்வளவு கல் நெஞ்சகர்களாய் இருந்துள்ளோம். (இஸ்லாத்தின் வருகைக்கு முந்தைய) அறியாமைக் காலத்தில் செய்த செயல்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுவான். ஆகவே உமது நற்செயல்களை புதுப்பித்துக் கொள்வீராக!” என்று அத்தோழரைப் பார்த்துக் கூறினார்கள்.
நபிகளார் செய்த மாபெரும் புரட்சி!
---------------------------------
நபிகள் நாயகம் தாம் வாழ்ந்த காலத்திலேயே பெண் குழந்தைகளைப் புதைக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அன்று அவர் எடுத்த நடவடிக்கை காரணமாக பதினான்கு நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக கோடிக்கணக்கான பெண் சிசுக்களும் கருக்களும் பெண் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். மானுட வரலாற்றிலேயே ஒரு ஈடிணையில்லாத புரட்சியல்லவா இது!
= மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையிடம், “எந்தக் குற்றத்திற்காக நீ கொல்லப்பட்டாய்?” என்று கேட்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்று திருக்குர்ஆன் வசனம் (81:7-9) எச்சரிக்கிறது.
= "நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்." (திருக்குர்ஆன் 6:151)
===================
ஆணாதிக்கத்திற்கு தடைபோடும் பர்தா!
அறியாமைக் காலத்தில்
பதிலளிநீக்குசெய்திட்ட செயல் அநீயாயம்
என்பதை இஸ்லாத்தை ஏற்று
வாழ்கின்றபோது பாவம் என்று தெரிகிறது இதுதான் இஸ்லாம்.