இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 அக்டோபர், 2023

தற்கொலையில் தவறுண்டா?


 #தற்கொலையில்_தவறுண்டா?

இன்று படித்தவர்களும் பட்டதாரிகளும் உழைத்து பாடுபட்டு உயர் பதவி அடைந்தவர்களும் திடீரென்று அல்லது பொசுக்கென்று தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதை சகஜமாகக் கண்டு வருகிறோம்.
இவர்களை நம்பிய பெற்றோர்களை, உறவினர்களை, பிள்ளைகளை, இவர்களைச் சார்ந்த மக்களை, வேலைசெய்யும் நிறுவனங்களை, வாடிக்கையாளர்களை, மாணவர்களை எல்லாம் துச்சமாக அலட்சியப் படுத்திவிட்டு இவர்கள் செய்துகொள்ளும் தற்கொலை அனைவரையும் சங்கடத்திலும் மீளாத்துயரிலும் ஏமாற்றத்திலும் ஆக்கி விடுகிறது.
தற்கொலை செய்து கொண்டவர் இவை ஒவ்வொன்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அவற்றை எல்லாம் தட்டிக் கழித்துவிட்டு அவர் பொசுக்கென போய்விட்டாலும் படைத்தவன் அவரை விடுவதாயில்லை.
மற்ற கொள்கைகளும் மதங்களும் இதை அலட்சியமாகக் கருதக்கூடும். ஆனால் உண்மை இறை மார்க்கம் இஸ்லாம் இந்த விஷயத்தில் தெளிவான வழிகாட்டலைக் கொண்டிருக்கிறது. தற்கொலை கண்டிப்பாக பெரும் பாவம் என்றும் அதற்கு தண்டனைகள் உண்டென்றும் கூறுகிறது.
தற்கொலை பற்றி இறைவன் என சொல்கிறான்?
= உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! (அல்குர்ஆன்2:195)
= உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!- (குர்ஆன் 4:29)
இறைவனின் எச்சரிக்கையையும் மீறி தற்கொலை செய்து கொள்வோரின் நிலை என்ன என்பது பற்றி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுவதையும் பாருங்கள்:
"ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவர் (மறுமையில்) தீசூழ் நரகிலும் தமது கையில் அந்தக் கூராயுதத்தை வைத்துக் கொண்டு, அதனால் தமது வயிற்றில் தாமே என்றென்றும் முடிவின்றிக் குத்திக் கொண்டே இருப்பார். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகிலும் என்றென்றும் முடிவின்றி விஷத்தைக் குடித்துக் கொண்டேயிருப்பார். மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகில் (மீண்டும் மீண்டும்) தள்ளப் பட்டு, மேலும் கீழும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி
மட்டுமல்ல, #இறுதித்தீர்ப்பு_நாள் இல் அவற்றுக்கான முழு தண்டனையை அவர் அடைவார்.
"மரணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு...செத்துவிட்டால் எல்லாமே முடிந்துவிடும்" என்ற மூடமான சிந்தனைதான் இதற்கு காரணம்.
உண்மையில் மரணம், முடிவில்லா மற்றொரு வாழ்க்கையின் ஆரம்பம். இந்த உலகில் நாம் செய்யும் செயல்கள் தான் அந்த நிரந்தர வாழ்க்கையின் வசதிகளை முடிவு செய்யும் என்ற சிந்தனை முழுமையாக விதைக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற தற்கொலைகளை தவிர்க்க முடியும்.
இடிதாங்கிகளாக வாழும் முஸ்லிம் சமூகம்!
---------------------------------------------------------
முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாகிறார்கள்...வசதியாக வாழ்ந்தவர்கள் துரத்தப்பட்டு அகதிகளாக்கப் படுகின்றனர்..பொருட்கள் சூறையாடப் படுகின்றன.. இருந்தும் முஸ்லிம்களில் பெரும்பாலோர் தற்கொலைகளில் தஞ்சம் புகுவதில்லை! .. காரணம்?
இந்தக் குறுகிய வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இந்தத் தற்காலிக உலகத்தை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் இறைவன் படைத்துள்ளான் என்ற அடிப்படை உண்மை சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் நிச்சயம் சோதிக்கப்படுவோம். இறுதி வெற்றி பொறுமையுடன், சோதனைகளை எதிர்கொண்டவர்களுக்கே என்ற சிந்தனை தாய்ப்பாலோடு சேர்த்து உள்ளத்தில் விதைக்கப் படுகிறது.
"மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!" (திருக்குர்ஆன் 2:155)
இறைவனிடமே மீளுதல் என்ற அஸ்திவாரம்
---------------------------------------------------------
இறைவன் மீதும் மறுமை மீதும் கொள்ளும் உறுதியான நம்பிக்கையின் காரணமாக வாழ்க்கையில் எத்தனை பெரிய ஆபத்துகள் நேரிட்டாலும் சோதனைகள் அலைக் கழித்தாலும் இவர்கள் மனம் தளருவதில்லை. மறுமையில் இறைவனிடம் மீள இருக்கிறோம், இவற்றிற்கான பரிசுகள் நிரந்தரமான சொர்க்கச்சோலைகளின் வடிவில் காத்திருக்கின்றன என்ற ஆழமான நம்பிக்கை வாழ்க்கையை மன உறுதியோடு எதிர்கொள்ளத் துணைபோகின்றது.
"அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்! (திருக்குர்ஆன் 2: 156, 157
==============
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக