இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 செப்டம்பர், 2023

மனித வாழ்க்கையின் அடுத்தகட்டம்!


 கருவறை வாழ்க்கையில் இருந்து பூமிக்கு வந்தோம். இதைத் தொடர்ந்து நாம் கல்லறை அல்லது மண்ணறை வாழ்க்கைக்குள் செல்ல இருக்கிறோம். அதையடுத்து மீண்டும் இறைகட்டளை வரும்போது - இறுதித்தீர்ப்பு நாள் அன்று - மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட உள்ளோம்.  விசாரணைக்குப் பிறகு நம் உண்மையான நிரந்தரமான வாழ்விடம் சொர்க்கமா இல்லை நரகமா என்பது தெரியவரும்!

மண்ணறை வாழ்க்கை என்றால் என்ன?

மனிதர்கள் மரணித்ததி­லிருந்துமீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதற்கு மத்தியில் உள்ள காலகட்டமே மண்ணறை வாழ்க்கையாகும். இதற்கு பர்ஸக்” – அதாவது திரை மறைவு வாழ்க்கை என்று கூறப்படும்..

மண்ணறையில் கேட்கப்படும் கேள்விகள் என்ன?

ஒருவர் மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவுடன் வானவர்கள் அவனிடம் மூன்று கேள்விகளைக் கேட்பார்கள். அவை

1. உன்னுடைய இறைவன்  யார்?

2. உன்னுடைய மார்க்கம் எது?

3. உங்களுக்கு அனுப்பட்ட இறைத்தூதரான முஹம்மது நபியைப் பற்றி நீ என்ன கருதுகிறாய்?

ஆகிய மூன்று கேள்விகளாகும்.

இதற்கு விசுவாசிகள்,

1. என்னுடைய இறைவன் அல்லாஹ்

2. என்னுடைய மார்க்கம் இஸ்லாம்.

3. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று பதிலளிப்பார்கள்.

சத்திய மறுப்பாளர்களால் பதிலளிக்க முடியாதுஅவர்கள் மண்ணறையில் வேதனை செய்யப்படுவார்கள்.

மண்ணறையில் வேதனை செய்யப்படுமா?

ஆம், தீயவர்கள் மண்ணறையில் வேதனை செய்யப்படுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின்மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்திருப்பேன்.”

அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்  முஸ்­லிம் (5503)

மண்ணறையில் நல்லோர்களின் நிலை என்ன?

வானவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நல்லோர்கள் இறுதித்தீர்ப்பு நாளில் இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பும் வரை புதுமாப்பிள்ளை உறங்குவது போன்று உறங்குவார்கள். (திர்மிதி)

நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.” (திருக்குர்ஆன் 3:185)

மரணம் எப்போதும் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அவ்வாறு வருவதற்கு முன் நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மரணத்தருவாயில் இருந்து நடக்கும் நிகழ்வுகளை நபி (ஸல்) அவர்கள் மிக அழகிய முறையில் விளக்கியுள்ளார்கள். 

சந்தோஷமான செய்தி கூறப்படும்

நல்லவர்கள் மரணிக்கும் போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தறுவாயில் வானவர்கள் கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.

= அமைதியுற்ற ஆத்மாவே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்) (திருக்குர்ஆன் 89 : 27)

நற்செய்தியை பெறுதல்

நிச்சயமாக எவர்கள்: எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோநிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.

 “நாங்கள் உலக வாழ்விலும்மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். (திருக்குர்ஆன் 41 : 30,31)

நல்லவர் முந்துதல்! தீயவர் பிந்துதல்!!

இன்பமான வாழ்வு உறுதி செய்யப்பட்டுவிட்டதால் விரைவாக தன்னை அடக்கம் செய்யுமாறு நல்லவர் விரும்புவார். ஆனால் தீயவரோ தனக்குக் கிடைத்த கொடூரமான வாழ்வை நினைத்து தன்னை மண்ணறைக்குள் அடக்கிவிட வேண்டாம் என்று அலறிக் கொண்டிருப்பார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போதுஅந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின்,”என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின்,”கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?” என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ(ரலி)நூல் : புகாரி

இறைவனை சந்திக்க விரும்புபவரும்வெறுப்பவரும்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ”யார் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க இறைவனும் விரும்புகிறான். யார் இறைவனைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை இறைவனும் வெறுக்கிறான்” என்று சொன்னார்கள்.

அப்போது நான், ”இறைத்தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்)அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்?” என்று கேட்டேன்.

அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ”(இறைவனைச் சந்திப்பது என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாகஇறை நம்பிக்கையாளருக்கு, (மரண வேளையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் இறைவனைச் சந்திக்க விரும்புவார்இறைவனும் அவரைச் சந்திக்க விரும்புவான்.

இறை மறுப்பாளருக்கு, (மரணவேளை நெருங்கும் போது) இறைவன் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர் மீது  இறைவன் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் இறைவனைச் சந்திப்பதை வெறுப்பார். இறைவனும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்” என்று (விளக்கம்) சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : முஸ்லீம் (5208)

நல்லவர்களுக்கு வானவர்களின் வரவேற்பு

நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்வில் அழகான வரவேற்வு வானவர்களால் கொடுக்கப்படுகிறது.

மதீனாவாசி ஒருவருடைய பிரேத ஊர்வலத்தைப் பின் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். பிரேதம் அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் சமாதிக்கருகில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார்கள். திடீரென தன் தலையை உயர்த்தி “மண்ணறை வேதனையை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள்” என்று மூன்று தடவை கூறினார்கள்.

பின்பு மரணத் தறுவாயிலுள்ள ஒரு இறை நம்பிக்கையாளனுடைய நிலை பற்றிக் கூறினார்கள்.

“விசுவாசியான  ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து விட்டு மறுமையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானி­ருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சொர்க்கத்துத் துணிகளையும்சொர்க்கத்தின் நறுமணங்களையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள்.

நல்லவரின் உயிர் வெளியேறுதல்

அப்போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி “நல்ல ஆத்மாவே நீ இந்த உடலி­­ருந்து வெளியேறி இறைவனின் மன்னிப்பை நோக்கியும் அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல்” என்று கூறுவார். தோல் பையொன்றிலி­ருந்து நீர் வழிந்துவிடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறிவிடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.

அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சொர்க்கத்துத் துணியிலும் நறுமணத்திலும் அதனை வைத்துவிடுவார்கள். அதி­லிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனைச் சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கிச் சென்று வானத்தைத் திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.

அம்மலக்குகள் வானத்தைத் திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தைக் கடந்து சென்றதும் அல்லாஹ், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி “எனது இந்த அடியானுடைய செயல்களை இல்­லியீனிலே (இறை நம்பிக்கையாளர்களின் உயிர்கள் இருக்குமிடம்) பதிவு செய்துவிட்டு பூமியிலுள்ள அவனது உடலி­ல் அவனுடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள்” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)நூல் : அஹ்மத் (17803)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறை நம்பிக்கையாளரின் உயிர் பிரியும் போது அதை இரு வானவர்கள் எடுத்துக் கொண்டு (வானுலகிற்கு) ஏறிச் செல்கிறார்கள். அப்போது வானுலகவாசிகள் (வானவர்கள்), ”ஒரு நல்ல ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது. இறைவன் உனக்குப் பேரருள் புரிவானாக. நீ குடியிருந்து வந்த உடலுக்கும் பேரருள் புரிவானாக!” என்று பிரார்த்திப்பார்கள். பிறகு அந்த உயிர் வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனிடம் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு இறைவன், ”இதை இறுதித் தவணை வரை (மறுமை நாள் வரை தங்க வைக்கப்பதற்காகக்) கொண்டு செல்லுங்கள்” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), (நூல் : முஸ்லீம்)

============= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக