இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 செப்டம்பர், 2023

கல்வியின் குறைபாடே தற்கொலை!

 நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (திருக்குர்ஆன் 23:115)

தற்கொலை செய்துகொள்ளும் நபரைப் பொறுத்தவரையில் அவர் எதையுமே இழப்பதில்
லை என்று அவர் கருதலாம். ஆனால் அந்த ஒரு  ஆளுமையை உருவாக்க வேண்டி அவ்வளவு காலம் இரவுபகலாக உழைத்த பெற்றோர்கள் சந்திக்கும் அதிர்ச்சியை அல்லது இழப்பை அவ்வளவு இலேசாக எடுத்துக்கொள்ள முடியுமா? அப்படிப்பட்ட ஒரு பேரிழப்பு ஏற்படாமல் இருக்க அதற்கான முன்னேற்பாடுகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா?

தற்கொலை உணர்வு:

தோல்விகள் அல்லது இழப்புக்கள் அல்லது அவமானங்கள் வரும்போது தனக்குத் துணையாக யாரும் இல்லையே என்ற உணர்வு, மனிதனில் நிராசையையும் விரக்தியையும் தூண்டும் காரணியாகும். தொடர்ந்து வாழ்க்கை அர்த்தமற்றது என்று உணர்வும் தன் வாழ்வை முடித்துக்கொண்டால் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று விடலாம் என்ற அறியாமை உணர்வும் எல்லாம் சேர்ந்து தற்கொலைகளாக அரங்கேறுகின்றன. 

 ஆனால் அதேவேளையில் ஒரு சில மறுக்கமுடியாத உண்மைகளை மனிதனுக்கு நினைவூட்டினால் அவனுள் தற்கொலை உணர்வே எழாமல் பாதுகாக்கலாம். 

படைத்தவனையும் அவன் நெருக்கத்தையும் அறிதல் 

நம்மை இவ்வளவு பக்குவமாக படைத்ததோடு நில்லாமல் நம்மை சற்றும் கைவிடாமல் அயராது பரிபாலித்து வரும் அவனது இறைவனைப் பற்றிய அறியாமையே நமக்குத் துணையாக யாரும் இல்லையே என்ற உணர்வுக்குக் காரணம். 

இறைவனைப்பற்றிய தவறான கருத்துக்கள் 

ஒருபுறம் இறைவனே இல்லை என்று சொல்லும் நாத்திகமும் மறுபுறம் இறைவன் அல்லாத அற்பமான படைப்பினங்களைக் காட்டி அவைகளே கடவுள்கள் என்ற தவறான சித்தரிப்பும் இறைவனைப் பற்றிய அறியாமையை மக்களிடையே வளர்க்கின்றன. பகுத்தறிவை பயன்படுத்தி நம்மைப் பற்றியும் நமது நிலையைக் குறித்தும் சற்று சிந்தித்தால் மட்டுமே இந்த அறியாமை விலகும். இல்லாமையில் இருந்து இபேரண்டத்தையும் அவற்றில் உள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து அந்த சர்வவல்லமையும் நுண்ணறிவும் அளவற்ற ஆற்றல்களும் கொண்டவனையே இறைவன் அல்லது 'அல்லாஹ்' என்கிறது இஸ்லாம்.  மாறாக மனிதர்கள் சித்தரித்து உருவம் கொடுக்கும் அளவுக்கு அற்பமானவல்ல இறைவன் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்களின் தலையாய பணி:

அறிவியல் என்ற பெயரில் பரிணாமக்கொள்கை போன்ற வெற்று  ஊகங்களைத் திணித்தால் மாணவர்களிடையே நாத்திகத்தை வளர்த்தால் அங்கு மனிதனின் உயர் பண்புகள்  மறைந்து தானும் ஒரு மிருகமே என்ற உணர்வுதான் எழும். பகுத்தறிவு மறைந்து மடமையே அவனுள் உருவாகும். மிருகங்களைப் போல வாழ்க்கை நோக்கமற்றது என்றுதான் அவனை உணர வைக்கும். அதன் விளைவே இந்த தற்கொலைகள்! கல்வி நிறுவனங்கள் இப்போக்கை முதலில் திருத்த வேண்டும்! நிறுத்த வேண்டும்!

படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 

நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டுள்ள உடல் என்ற பேரற்புதமும் நம்மைச்சூழ்ந்து நிற்கும் இந்தப் பேரண்டம் என்ற அற்புதமும் தானாகவோ தற்செயலாகவோ தோன்றவும் முடியாது. தானாகவோ தற்செயலாகவோ அதி பக்குவமான முறையில் இயங்கவோ முடியாது என்கிறது பகுத்தறிவு! இதற்குப் பின்னால் ஒரு அளப்பரிய தன்னிகரற்ற சக்தியும் நுண்ணறிவும் அதிபக்குவமான திட்டமிடலும் அவற்றை அயராது இயக்குதலும் அவசியம் என்பதை பகுத்தறிவு நமக்கு உரக்கவே எடுத்துரைக்கிறது. அந்த தன்னிகரற்ற சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் நாம் அழைக்கிறோம்.

இந்த விசாலமான பிரபஞ்சமும் அது உட்கொண்டுள்ளவற்றின் பேரமைப்பும் நமது உடல் என்ற அற்புதமும் இவற்றின் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இவற்றைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:

= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)

= . நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்;பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28) 

இறைவனின் நெருக்கத்தை உணருதல் 

ஆம் அன்பர்களே, அந்த தன்னிகரற்ற சர்வவல்லமை கொண்ட இறைவன் நமக்கு மிக அருகில் இருக்கிறான், நம் அழைப்பை ஏற்று நமக்கு உதவக் காத்திருக்கிறான் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா? இதோ இறைமறைக் குர்ஆனில் அவன் கூறுவதைக் காணீர்:

= நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம். (திருக்குர்ஆன் 50:16) 

= (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186) 

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு நெருக்கத்தில் இருக்கிறான், நம் அழைப்பை ஏற்கக் காத்திருக்கிறான் என்ற ஆழமான புரிதல் யாருக்காவது உண்டாகிவிட்டால் அந்த மனிதனின் ஆளுமைக்கு மிக உறுதியான அஸ்திவாரம் அமைகிறது. அவனுக்குள் நிராசையும் மனச் சோர்வும் ஏற்பட வழியே இல்லை.

மேற்படி இறைநம்பிக்கையோடு இறைவன் நமக்குக் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களை ஏற்று அதன்படி வாழும்போது வாழ்க்கையில் கட்டுப்பாடும் (discipline) அமைதியும் உண்டாகிறது. அவ்வாறு கட்டுப்பாட்டோடு வாழ்ந்ததற்காக மறுமை வாழ்வில் சொர்க்கம் என்ற நிரந்தர இன்பமும் நித்திய வாழ்வும் பரிசாகக் கிடைக்கிறது. அவ்வாறு இறை  நம்பிக்கையோடு இறைவனுக்குக் கட்டுப்படும் வாழ்வியல் நெறியே 'இஸ்லாம்' என்று அறியப்படுகிறது. 

=  ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

1 கருத்து: