அனைத்துப் புகழும் அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது.அவன் அளவற்ற அருளாளன் , நிகரற்ற அன்புடையோன்.
அவனே இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதி. ( திருக்குர்ஆன் 1: 1-3 )
ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற அடிப்படையில் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர் நமது முன்னோர்கள். காலம் செல்லச் செல்ல படைத்தவனை மறந்து விட்டு படைப்பினங்களையும் இறைத்தூதர்களையும் சிறந்த மனிதர்களையும் அவர்களில் சிலர் வணங்கத் தலைப்பட்டதால் அவர்களுக்குள்ளே பிரிவினைகள் உருவாயின! இன்று நம்மைப் பிரித்து வைத்திருப்பது நமக்குள்ளே பரவி இருக்கும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கடவுள் கொள்கையே! நாம் மீண்டும் ஒரே குடும்பமாக இணைந்து அமைதியாக வாழ விரும்புவோமேயானால் முதன்மையாக நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த மாபெரும் கருணையாளனைப் பற்றிய நமது தவறான கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் நமது மனங்களை விட்டு அப்புறப்படுத்த வேண்டும். இறைவனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதோ அவற்றைப் பரப்புவதோ அவனைப் படைப்பினங்களோடு ஒப்பிடுவதோ மாபெரும் பாவம் என்பதை நாம் உணர வேண்டும்.
உதாரணமாக நமது தாயைப் பற்றி யாராவது இல்லாததையோ
போலாததையோ சொன்னால் நாம் சகித்துக் கொள்வோமா? யாராவது ஒரு தகாத உருவத்தைக் காட்டி 'இதுதான் உன்னைப்
பெற்றெடுத்த தாய்' என்று கூறினால்
எவ்வாறு வெகுண்டெழுவோம்? இந்த கோபம் ஏன்
நமது பரிபாலகனுடைய விஷயத்தில் வருவதில்லை?.....
நாம்
சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
ஒரு கணம் அந்த பரிபாலகனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்! நாம் அவனை நினைத்தாலும் நினைக்கா விட்டாலும் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நம்மீது அளவில்லாமல் தன அருட்கொடைகளை அள்ளிச்சொரிபவன் அவன். உதாரணமாக நம் உடலில் நாடியும் இதயமும் துடிப்பதும், இரத்தம் ஓடுவதும், ஜீரணம் நடப்பதும், அதனால் உடல் சக்தி பெறுவதும், அசுத்தங்கள் சிறுநீராகவும் மலமாகவும் பிரிவதும்.... என ஒன்று விடாமல் எல்லாமே அவன் செயலே! இவற்றில் ஏதேனும் தடைபட்டுவிட்டால்........ நாம் படும் பாட்டை சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் உடலில் ஒவ்வொரு செல்களும் நரம்புகளும் தசைகளும் உறுப்புக்களும் அவை அவ்வாறு இயங்க வேண்டும் என்று அவற்றுக்குக் கட்டளை இடுவது யார்? அந்தக் கட்டளையின் விளைவு தானே நம் உயிரோட்டம் என்பது? டவரில் இருந்து சிக்னல் வந்து கொண்டிருக்கும் வரைதான் நம்மிடம் உள்ள மொபைல் இயங்கிக் கொண்டிருக்கும். அந்த சிக்னல் நிறுத்தப்பட்டால் நமது மொபைலும் செயலாற்றுப் போகும்.அல்லவா? அதைப் போலவே, இறைவனிடமிருந்து உயிர் என்ற கட்டளை நிறுத்தப் பட்டால் நம் உடலும் இறந்த பிணமே! இவ்வாறு உடலும் உயிரும் அதைச் சுற்றி உள்ள உலகும் அதில் உள்ளவற்றின் இயக்கங்களும் என எல்லாமே நம்மை இங்கு வளமாக வாழ வைப்பதற்காகவே என்பதை சிந்திப்போர் உணரலாம். இவ்வாறு அவன் நம் மீது அளவின்றி காட்டும் பாசத்திற்கும் நேசத்திற்கும் எவ்வாறு கைமாறு செய்யப் போகிறோம்?
#தாய்ப்பாசம்_என்ற_அருட்கொடை
இவ்வுலகில் மனிதர்களிலேயே நம் மீது மிக மிக
அதிகமாக நேசம் கொண்டவர் நமது தாயார்தான் என்றறிவோம் . அந்தத் தாய் மனதில் தாய்ப்பாசம் என்பதை விதைத்தவன் யார்? அந்தத் தாய்ப்பாசம் மட்டும் அங்கு
விதைக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் யோசித்துப் பாருங்கள்...... அவள் பத்து
மாதம் அனுபவித்த கஷ்டங்களின் விளைவாக ஒவ்வொரு தாயும் தான் குழந்தையைப்
பெற்றெடுத்த உடனேயே 'சனியன்...தொலையட்டும்' என்று குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து இருப்பாள்! அந்தத்
தாய் கூட நீங்கள் குழந்தையாக வெளியில் வந்த பிறகுதான் உங்களை
கவனிப்பாள். ஆனால் பத்து மாதங்களாக கருவறைக்குள் மெத்தை அமைத்து உங்களுக்கு
உணவூட்டியவன் யார் ? சிந்தித்தீர்களா? கருவறை முதல் அனைத்து நிலைகளிலும் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து பரிபாலித்து
வரும் இறைவனின் கருணை எவ்வளவு மகத்தானது?
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள் :' இறைவன் தனது கருணையை நூறு பாகங்களாகப்
பிரித்தான். அதில் ஒரு பாகத்தை மட்டுமே இந்த பூமியில் விதைத்தான். அதன்
விளைவாகத்தான் ஒரு தாய்ப் பறவை தன குஞ்சிடம் பாசம் காட்டுவதைப் பார்க்கிறீர்கள்.'
ஆம் அன்பர்களே, மற்ற அனைவரையும் விட இறைவன் நம் மீது
காட்டும் பாசம் அளவிட முடியாதது. அதை நாம் அலட்சியப் படுத்தவோ மறக்கவோ கூடாது. அதை
உள்ளார உணர்ந்து செயல்படுவதில்தான் வாழ்கையின் வெற்றி அமைந்துள்ளது. நமது அன்புக்கும் மரியாதைக்கும் முழு முதற்தகுதி வாய்ந்த நமது
இரட்சகனை சிறுமைப் படுத்தும் செயல்களை நாம் அறவே தவிர்க்க வேண்டும். அவன்
அல்லாதவற்றைக் காட்டி அவற்றை எல்லாம் கடவுள் என்று கற்பிப்பது மேல் சொல்லப்பட்டது
போல் பெற்றெடுத்த தாயை நாய்க்கு
ஒப்பிடுவதை விட மிக மோசமானது. அவ்வாறு செய்வோமேயானால் அந்த இறைவனின் கோபத்திற்கு
நாம் ஆளாவோம், இவ்வுலக வாழ்விலும் பற்பல
இழப்புகளுக்கும் அமைதியின்மைக்கும் உள்ளாவோம், மேலும் மறுமை வாழ்வில் நிரந்தர நரக வாழ்வுக்கும் உரியவர்களாவோம்
அவன் அளவற்ற அருளாளன் , நிகரற்ற அன்புடையோன்.
அவனே இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதி. ( திருக்குர்ஆன் 1: 1-3 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக