நம் மனிதகுலம் என்பது ஒரே தாய் ற்றும் ஒரே தந்தையில் இருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களால் ஆனதே. அனைத்து இறைத்தூதர்களும் நம்மவரே, அனைவரும் நமது மனித குடும்பத்துக்காக, நமது சகோதர சகோதரிகளை நேர்வழிப் படுத்த நமது இறைவனால் அனுப்பப்பட்ட சான்றோர் பெருமக்களே என்ற மனப்பாங்கோடு அவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.
வெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் நமது இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக அனுப்பப்பட்ட உத்தமர்களே என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் அனைவரையும் நாம் ஏற்றே ஆகவேண்டும். யாரையும் நிராகரிக்கக் கூடாது. அவர்கள் வேற்று நாட்டவர் அல்லது வேற்று மொழியினர் வேற்று காலத்தவர்கள் என்று கூறி புறக்கணிக்கவோ தரம் தாழ்த்தவோ இறைவிசுவாசிகளுக்கு அனுமதியில்லை,
2:177. நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள்.
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குரிய ஒரே இறைவன்’ என்பது பொருள்.
முஸ்லிம்களின் நிலைப்பாடு
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை பின்வரும் வசனத்தில் இறைவன் கூறுகிறான்:
= 2:285. இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். அவரை ஏற்றுக் கொண்டவர்களும் அந்த வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் மற்றும் அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் “அல்லாஹ்வுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை” என்றும், “எங்கள் இறைவனே! நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர்.
மறுப்பது வழிகேடு
இறைவன் அனுப்பிய தூதர்களிலும் வேதங்களிலும் ஒரு சிலதை ஏற்றுக்கொண்டு மற்றவற்றை மறுப்பது வழிகேடாகும். அவரவர் காலகட்டத்திற்கு அனுப்பப்பட்ட வேதத்தையும் தூதரையும் பின்பற்றவேண்டியது மக்கள் மீது கடமையாகும். ஆயினும் மற்றவற்றை தரக்குறைவாக எண்ணுவதும் மறுப்பதும் வழிகேடாகும்:
= 4:136. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும், அவன் தன்னுடைய தூதர் மீது இறக்கி அருளிய வேதத்தின் மீதும், இதற்கு முன்னால் அவன் இறக்கி வைத்த வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், மறுமைநாளையும் மறுக்கின்றானோ அவன் வழி கேட்டிலே உழன்று வெகுதூரம் சென்றுவிட்டான்.
இறைத்தூதர்களை வணங்குவது பாவம்
3:80. வானவர்களையோ இறைத்தூதர்களையோ உங்கள் கடவுளர்களாய் ஆக்கிக்கொள்ளும்படி உங்களுக்கு ஒருபோதும் அவர் கட்டளையிடமாட்டார். நீங்கள் முற்றிலும் இறைவனுக்குப் பணிந்துவிட்ட பிறகு (முஸ்லிம்களாய்த் திகழும்போது) நிராகரிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி ஒரு நபி உங்களுக்குக் கட்டளையிடுவாரா, என்ன?
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்... இன்று பற்பல மதங்களும் பரவியுள்ள நிலையில் உண்மையான தர்மம் எது என்பதை எப்படி அடையாளம் காண்பது?
அது எளிது. உண்மையான தர்மம் ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் அவனிடமே மீளுதல் (அதாவது மறுமை வாழ்க்கை) என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லும். தர்மம் இறைவனுக்கு கீழ்படிதல் என்ற பண்புப் பெயரால் அறியப்படும்! ஆனால் அதர்மமோ அந்தந்தக் காலத்து இறைத்தூதர்களின் அல்லது நாட்டின் அல்லது வமிசத்தின் பெயரால் மதமாக அறியப்படும்.
-------------------
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக