இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

தீண்டாமை கற்பிப்போருக்கு நரகமே புகலிடம்!


பொதுவாக சமூகத்திற்கு கேடு விளைவிப்பவர்களை, சமூகத்தில் குழப்பம் உண்டாக்குபவர்களை தண்டிப்பதும் அவர்கள் திருந்துவதற்காக வேண்டி பொது சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதும்  சரியான மற்றும்  அவசியமான நடவடிக்கை ஆகும். உதாரணமாக திருடர்களை சிறையில் அடைப்பது இந்த வகையைச் சார்ந்த நடவடிக்கையே. ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகளை எந்தவித காரணமும் இன்றி இன்ன குடும்பத்தில் பிறந்தார் அல்லது இன்ன நிறத்தை உடையவர் அல்லது இன்ன மொழியைப் பேசுபவர் என்றெல்லாம் காரணங்களைக் கூறி அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்துவதும் அவர்களின் உரிமைகளை மறுப்பதும் கடுமையான குற்றமாகும்.

காரணம் ஒரு மனிதன் சக மனிதனிடம் பிறப்பின், நிறத்தின் அல்லது மொழியின் அடிப்படையில் மேன்மை பாராட்ட எந்தவித முகாந்திரமும் இல்லை. நம்மைப் படைத்தவன் திருக்குர்ஆனில் மனித சமத்துவத்துக்கான அடிப்படையை தெளிவுற அறிவிக்கிறான்:

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு த் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

அனைத்துலக மக்களும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியவர்களே என்ற உண்மையை பறைசாற்றி மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வை கற்பிப்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது என்று தெளிவாகக் கூறுகிறது இந்த வசனம். அத்துடன் மானுட சகோதரத்துவத்துக்கான அடிப்படையும் இங்கே கூறப்படுவதை நாம் கவனிக்கலாம்.

மேன்மையுடையோர் யார்?

அதையும் இறைவன் தெளிவு படுத்துகிறான்:

  “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில்உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (குர்ஆன் 49: 13) 

அதாவது இறையச்சம் என்பதும் வெளிப்படையாக அறிய முடியாத ஒன்று. அதைக் கூறியும் மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது என்பது தெளிவு!

கடவுளின் பெயரால் தீண்டாமை!

அனைத்து மனிதர்களும் ஆதித் தந்தை மற்றும் ஆதித் தாயின் வழித்தோன்றல்களே என்று மனிதகுலத்தைப் படைத்தவனான இறைவனே கூறியிருக்க அந்த இறைவனின் பெயராலேயே தங்களுக்கு இனமேன்மை உண்டு என்று வாதிடுவதும் அதன் அடிப்படையில் மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமை கற்பிப்பதும் அதைக் கடைபிடிப்பதும் ஆதரிப்பதும் எல்லாம் இறைவனிடம் பெரும் தண்டனைக்குரிய பாவங்களே!

 = அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்; “இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். (திருக்குர்ஆன் 11:18)

= எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) சத்திய மறுப்பாளர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா? (திருக்குர்ஆன் 39:32)

இனமேன்மை உண்டு என்று வாதிடுவோருக்கு இறைவன் விடுக்கும் சவால்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த யூதர்கள் அவர்கள்தான் மற்ற மக்களை விட இறைவனுக்கு நெருங்கியவர்கள் என்று கூறிக்கொண்டு மற்ற மக்களை தாழ்ந்த பிறவிகளாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் நடத்தை வந்தார்கள்.  அவர்கள் கூறுவது போல இறைவனுக்கு நெருங்கியவர்கள், அவர்கள்தான் மற்றவர்களை விட  சொர்க்கத்திற்குத் தகுதியானவர்கள் என்பது அவர்களின் வாதமாக இருந்தால் ஏன் இந்த பூமியில் கஷ்டப்பட வேண்டும்? உடனே மரணத்தைக் கேட்டு ஏன் பிரார்த்திக்கக் கூடாது? என்ற கேள்வியை அவர்களிடம் கேட்கச் சொல்கிறான் இறைவன்.

= அவர்களிடம் நீர் சொல்வீராக: “இறைவனிடம் இருக்கும் மறுமை வீடு மற்ற மனிதர்களுக்கன்றி உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாய் இருக்குமானால், (உங்களின் இந்த நம்பிக்கையில்) நீங்கள் உண்மையானவர்களாய் இருந்தால்நீங்கள் மரணத்தை விரும்புங்கள் (பார்ப்போம்!)(திருக்குர்ஆன் 2: 94) 

====================== 

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
https://www.quranmalar.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக