#திருக்குர்ஆன்_முதல்_அத்தியாயம்:
திருக்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயத்தின் பெயர் பாத்திஹா என்பது. இது ஏழு வசனங்களைக் கொண்டது. இதற்குப் பல சிறப்புகள் உள்ளன .
= உலகெங்கும் இவ்வேழு வசனங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. தொழுகையிலும் வெளியிலும் முஸ்லிம்கள் இதை ஓதிக்கொண்டே இருப்பார்கள்.
= இந்த ஏழு வசனங்கள் முஸ்லிம்களின் ஐவேளைத் தொழுகைகளிலும் பலமுறை ஓதப்படுகின்றன. ஒவ்வொரு தொழுகையாளியும் குறைந்தது ஒருநாளைக்குப் பதினேழு முறையாவது ஓதுகிறார்.
அந்த வசனங்களை அவற்றின் பொருள் சகிதம் கீழே தருகிறோம்:
. 1. (B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
. 2. அல்ஹம்து லில்லாஹி ர(B)ப்பில் ஆலமீன்.
. 3. அர்ரஹ்மானிர் ரஹீம்.
. 4. மாலிகி யவ்மித் தீன்
. 5. இய்யாக்க நஉ(B)புது வஇய்யாக்க நஸ்தஈன்.
. 6. இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம்
. 7. ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹீம் அய்ரில் மக்லூ(B)பி அலைஹீம் வலழ்ழால்லீன் – ஆமீன்
பொருள்:
. (1. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)
. 2. அனைத்துப் புகழும் அனைத்து உலகையும் படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்கே உரியது.
. 3. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
. 4. இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி.
. 5. உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
. 6. எங்களை நேரான வழியில் நடத்துவாயாக
. 7. நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியில் நடத்துவாயாக,. அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியும் அல்ல.
. அமீன்- எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக)
முக்கிய குறிப்பு இந்த அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் இறைவனே நமக்கு கற்றுத்தரும் பிரார்த்தனைகள். இங்கு நான்காவது வசனத்தை மிக ஆத்மார்த்தமாக கூற வேண்டும் “இறைவா படைத்தவனாகிய உன்னை மட்டுமே வணங்குவோம். உன்னையல்லாது வேறு யாரையும் தெய்வமாக பாவிக்க மாட்டோம்.அவைகளிடம் பிரார்த்திக்கவோ உதவி கோரவோ மாட்டோம்” என்ற உறுதி மொழியை இதன் மூலம் நாம் இறைவனுக்கு கொடுக்கிறோம் என்பதை உணர்க! நம் பிராத்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இது ஒரு நிபந்தனை என்பதை அறிக!
இந்த பாத்திஹா அத்தியாயத்தின் பொருள் இதோ கவிதை வடிவில்......
வெளிச்ச வாசல்
அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாயன் அல்லாஹ் திருப்பெயரால்...
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இலங்கும் உலகம் பற்பலவாம்
வல்லான் அவனே படைப்பவனாம்
வாழச் செய்திடும் ரட்சகனாம்
அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாளைய தீர்ப்பின் அதிபதியாம்!
அதிபதி உனையே வணங்குகிறோம்
அடிமைகள்,உதவியும் தேடுகிறோம்
எதுநேர் வழியோ அதில் செலுத்து...
இன்னருள் பெற்றோர் வழியதுவே!
நீசினந் தோரின் வழிவேண்டாம்
நெறிகெட் டோரின் வழிவேண்டாம்
மாசில் லாஉன் அருள்பொழியும்
மார்க்கப் படியே எமைநடத்து
வேதம் எதிலும் இல்லாத
வெளிச்ச வாசல் ஃபாத்திஹா
போதம் குர்-ஆன் சாரமிது!
புரிந்தோர் உணரும் ஞானமிது!!
ஆமீன்,ஆமீன் அவ்வாறே
ஆகுக,ஆகுக,ஆகுகவே
(கவிதை -ஏம்பல் தஜம்முல் முஹம்மது)
Like
Comment
Share
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக