அவளது பிள்ளைகள் கேட்ட கேள்விகள் ஆஷாவை அன்றிரவு தூங்கவிடாமல் அலைகழித்துக் கொண்டிருந்தன... அன்று ஆபீசில் இருந்து களைப்போடு வீடு திரும்பி உடைமாற்றிக் கொண்டு இருக்கும்போதுதான் அந்தக் கேள்விகளைக் கேட்டார்கள் பிள்ளைகள்..
"எம்மா, வீட்டுக்குள்ளாற மட்டும் மாக்சி போட்டுட்டு சுத்தறே... வெளிலே போகும்போது உடம்பெல்லாம் தெரியற மாதிரி ஓட்டை ஓட்டையா இருக்கிற டிரெஸ்ஸெல்லாம் போட்டுட்டுப் போறே?"
எதிர்பார்க்காத கேள்வி... கேட்டது ஆஷாவின் ஆறுவயது மகன்.
என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை ஆஷாவுக்கு...
"ஆபீசிலே மாக்சி போட்டுட்டுப் போனா உடமாட்டாங்கடா கண்ணு"
பக்கத்து ரூமில் இருந்த மூத்தமகன் ராஜாவிடம் இருந்து வந்தது அடுத்த கேள்வி..
"சரிம்மா, அதுக்கு எதுக்கு ஆபீஸ் போகும்போது கழுத்துகிட்ட ஜன்னல், முதுகுல ஜன்னல், லெக்கிங்க்ஸ், லிப்ஸ்டிக்.. ? இப்படித்தான் போட்டுட்டு வரணும்னு ஆபீசிலே சொன்னாங்களா?"
ஏன் இந்த திடீர் கேள்விகள்?... திக்குமுக்காடிப் போனாள் ஆஷா...
"இதுதான் ஊர் வழக்கம் ராஜா.. இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது"
"சரிம்மா, என்னையும்தான் தண்ணியடிக்கறது ஊர் வழக்கம்னு பிரெண்ட்ஸ் கூப்பிட்டாங்க, போகட்டுமா?"
பதில் சொல்ல முடியவில்லை ஆஷாவால்...
"காலேஜ்லே சில பொண்ணுங்க பசங்கள சுண்டி இழுக்கறதுக்காக கவர்ச்சியா ட்ரெஸ் போட்டுட்டு வர்றாங்க.. நீ எதுக்கும்மா அப்படிப் போடணும்?"
மீண்டும் பதில் இல்லாமல் வாயடைத்து நின்றாள் ஆஷா.
“ஏம்மா, நாளைக்கு நம்ம சுதா கொஞ்சம் பெருசாகி உன்ன மாதிரி ட்ரெஸ் போட்டு போயி எவனாவது கொண்டுபோய் கற்பழிச்சா என்ன செய்வே? இல்ல, உன்னையே கூட நாலு பேரு கடத்திட்டுப் போயி கற்பழிக்க மாட்டாங்கன்னு ரொம்ப தைரியமா இருக்கியா?”
“ஏண்டா இப்படி ரொம்ப விபரீதமா கற்பனை பண்றே? அப்படியெல்லாம் நடக்காதுடா கண்ணு...” ராஜாவை தேற்ற நினைத்தாள் ஆஷா...
அடங்குவதாக இல்லை ராஜா..
“ஏம்மா இந்த உலகத்துலதான் இருக்கியா? நியுஸ், டிவி எல்லாம் பாக்கறதில்லையா நீ? ஊரு பூரா நடக்கறது ஒண்ணும் உன் கண்ணுக்குத் தெரீலையா?
--------------------------
ஒழுக்கமாக வாழ நினைக்கும் உள்ளங்களில் குறிப்பாக இளைஞர்கள் உள்ளங்களில் குமுறிக்கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஆஷாவைப் போல பெரும்பாலான பெண்கள் ஊர் வழக்கம்தானே என்று சொல்லி தாங்கள் அணியும் அரைகுறை ஆடையால் தவறில்லை என்று நினைகின்றனர். தங்களின் உடலின் அழகு அந்நிய ஆண்களின் கழுகுக் கண்களுக்கு விருந்தானாலும் அதனால் ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர். இலவசமாகக் கிடைக்கும் இன்பம் என்று இந்த காட்சிகளை அனுபவிப்பவர்களும் இதைப் பற்றி ஏதும் பேசுவதில்லை. பெண்களின் ஆடைக்குறைப்பு என்பது ஒரு தீமை என்பதையும் சமூகத்தில் அது உண்டாக்கும் குழப்பங்களையும் மறுமையில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்ற உண்மைகளை அறிந்த சில நல்லவர்களும் இதைப் பற்றி வாய் திறக்காமல் செல்கிறார்கள். மற்ற மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று பயந்து இத்தீமையை கண்டிக்காமல் செல்கின்றனர். அவ்வாறு செய்யும்போது இத்தீமைகளில் மூழ்கியுள்ளவர்களைப் பொறுத்தவரை தங்கள் செயலில் தவறு இல்லை என்பதாக உணர்கின்றனர்.
இப்படிப்பட்ட சமூகப் போக்கு ஆபத்தானது.
இறைவிசுவாசிகள் களமிறங்க வேண்டும்
இறைநம்பிக்கை கொண்டவர்கள் நாட்டையும் மக்களையும் நேசிக்காமல் இருக்க முடியாது! அவர்களால் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு அலட்சியமாக இருக்க முடியாது. இந்த பூமியில் தர்மத்தை நிலை நாட்டவேண்டிய பொறுப்பை நம் மீது இறைவன் சுமத்தியுள்ளான், நாளை மறுமையில் இறைவனால் இதுபற்றி நாம் விசாரிக்கப் படுவோம் என்ற பொறுப்புணர்வு நமக்கு இருக்கவேண்டும். அது இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகும்.
இறைமார்க்கம் அல்லது இஸ்லாம் என்பது வெறும் தொழுகை, தியானம், தானம், விரதம் மற்றும் இன்னபிற சடங்குகளுக்குப் பெயரல்ல. மாறாக நம்மைச்சுற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும். நடக்கும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும். இதோ தனது இறுதிவேதம் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் கூறுகிறான்
= “மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்......” (திருக்குர்ஆன் 3:110)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவன் என்று பொருள்)
மேலும் இறைத்தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
= உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம்)
ஆக, ஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் தீமைகளை எதிர்த்து எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறு போராடக் கடமைப்பட்டிருக்கிறான். எனவே இன்று நாம் உள்ள நிலையில் எந்தத் தீமைகளை நாம் கையினால் நேரடியாகத் தடுக்க முடியமோ அந்தத் தீமைகளை நேரடியாகத் தடுக்கவேண்டும். உதாரணமாக நம் அதிகாரத்திற்கு உட்பட்ட வட்டங்களில் ஆடைக்குறைப்பு என்ற தீமை நேராடியாகவோ அல்லது ஊடகங்கள் மூலமாகவோ ஊடுருவும்போது நேரடியான நடவடிக்கைகள் மூலம் தடுக்க முயற்சிக்க வேண்டும். நம் அதிகாரத்திற்கு உட்படாத வட்டங்களில் இத்தீமையின் விபரீதம் பற்றியும் மறுமை வாழ்வின் விளைவுகள் குறித்தும் நாவின் மூலமாக அல்லது எழுத்தின் மூலமாக மக்களை எச்சரிக்கை செய்வதன் மூலம் போராடலாம்.
---------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக