இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 பிப்ரவரி, 2022

மரம் நடுவது ஒரு முஸ்லிமின் பொறுப்பு

மரம் நடுவதை, இஸ்லாம் நன்மையாக கணக்கீடு செய்து, தர்மமாக ஊக்குவிக்கின்றது

"முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).
"இறுதித் தீர்ப்பு நாள் வருகையில் கூட, ஒரு மரக்கன்றை ஒருவர் கையில் வைத்திருந்தால் அவர் விரைந்து அதனை மண்ணில் ஊன்றட்டும்" என்று இறைதூதர் (ஸல்) கூறினார்கள்.
இந்த நபிமொழியின் பொருள் குறித்து விளக்கம் தரும் அறிஞர் தாரிக் ரமழான் “இறுதி நாளில் கூட இறை நம்பிக்கை கொண்டவர் வாழ்க்கையையும் அதன் சுழற்சிகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வண்ணம் இயற்கையை மதித்து அதனுடன் உறவு கொள்ள வேண்டும்” என்கிறார்.
மேகண்ட இரண்டு நபிமொழிகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை சமநிலையை பேணவும் சொல்லப்பட்டவை.
மரம் நடுவதும், இயற்கை வளங்களை பராமரிப்பதும், பாதுகாப்பதும் ஒரு மனிதனின் கடமை குறிப்பாக இறைவனை ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கையாளனின் பொறுப்பு என்பதை மேற்காணும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.
இறுதித் தீர்ப்பு நாள் வந்துவிட்டால் அதற்குப் பின் பூமி ஏது? பூமியில் வாழ்க்கை ஏது? அந்த நேரத்திலும் கூட கையில் இருக்கும் மரத்தை நட்டுவிட வேண்டும் என்று மனிதர்களின் வழிகாட்டி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
இது மனிதர்களுக்கு இயற்கை வளங்கள் மேல் உள்ள பொறுப்பையும், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவையும் சுட்டிக் காட்டுகிறது. உலகம் அழிவது போன்ற பேரிடர்கள் ஏற்பட்டாலும் மனிதர்கள் தங்கள் பொறுப்பில் கவனமற்று இருந்து விடக்கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறது.
மேலும் மரம் நடுவது ஒரு அறச் செயல். பணமாக, பொருளாக பிறருக்கு கொடுப்பதையே தர்மம் என்று நினைக்கும் மனிதர்களுக்கு, மனிதன் இன்னொரு மனிதனைப் புன்னகையுடன் எதிர்கொள்வதையும் தர்மம் என்கிறது இஸ்லாம்.
அந்த தொடரில் மரம் நடுவது தர்மம். ஒரு மனிதன் நடும் விதை வளர்ந்து மரமாகி பூவாக, காயாக, பலமாக, நிழலகாக மனிதர்கள் உள்ளிட்ட உயிர்களுக்கு பயன் தருகிற போது விதைத்தவனுக்கு தர்மமாக பலனளிக்கிறது என்கிறது இஸ்லாம்.
இஸ்லாம் மதமல்ல வாழ்க்கை நெறி என்று உபதேசிப்பதல்ல ஒரு முஸ்லிமின் கடமை. இஸ்லாம் மனிதர்களின் இயல்புகளோடு இயைந்த வாழ்க்கை என்பதை வாழ்ந்துதான் காட்ட வேண்டும். பக்தி என்பதும், ஆன்மீகம் என்பதும் பிற உயிர்களுக்கு பயன் தந்து வாழ்வதில் இருக்கிறது என்பதே இஸ்லாத்தின் முழக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக