இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 டிசம்பர், 2020

உலகளாவிய சுயமரியாதை இயக்கம்!


 கடவுள் மறுப்பை கொள்கையாகக் கொண்ட ஒரு சிலர் ஒன்று சேர்ந்தால் உடனே அதை "சுயமரியாதை இயக்கம்" என்று பெயரிட்டுக் கொள்வதை நாம் காண்கிறோம். உண்மையில் பெயரளவில்தான் அவர்களிடம்  சுயமரியாதை பேணுதல் உள்ளதே தவிர நடைமுறையில் அதைக் காண முடிவதில்லை. மறைந்த தலைவர்கள் சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்தல், தன்னைவிட உயர்பதவியில் அல்லது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் காலில் விழுந்த வணங்குதல் போன்றவை அவர்களிடம் சகஜமாக இன்றும் இருப்பதை நாம் காண முடிகிறது.  ஆனால் இஸ்லாம் என்ற உலகளாவிய வாழ்வியல் கொள்கை அதனை ஏற்றவர்களை எவ்வாறு பண்படுத்தி வருகிறது என்பதை இங்கு காண்போம். 

மனிதனை மனிதன் வணங்கத் தடை!

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்று கற்பிக்கும் இஸ்லாம் அவன் அல்லாதவற்றுக்கு தலைவணங்குவதையோ பூஜைகள் செய்வதையோ அறவே கூடாது என்கிறது. எல்லாக் காலங்களிலும் இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் இக்கொள்கையையே தத்தமது மக்களுக்கு போதித்தார்கள். ஆனால் பிற்கால மக்கள் ஷைத்தானின் தூண்டுதலால் அந்த இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின் அவர்களுக்கு உருவப்படங்களும் சிலைகளும் உருவாக்கி அவற்றையே கடவுளாக வணங்க ஆரம்பித்தார்கள். நபிகளாருக்கு முன்னர் வந்த இயேசு (அலை) அவர்களும் இதற்கு விலக்கல்ல! ஆனால் இறுதி இறைத்தூதராக இப்பூமிக்கு வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பதினான்கு நூற்றாண்டுகள்  ஆகியும் உலகில் எங்குமே உருவப் படமும் சிலையும் கிடையாது என்பதை நீங்கள் கவனிக்கலாம். அவரே இறுதித் தூதர் என்பதால் தன்னை மக்கள் ஆராதிக்கக் கூடாது என்பதற்காகக் அதற்குண்டான எல்லா வாசல்களையும் தன் வாழ்நாளிலேயே அடைத்துவிட்டுச் சென்றார்.

காலில் விழத் தடை

 நபிகள் நாயகம் (ஸல்) ஆன்மீகத் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் இருந்த நேரம் அது.

  கைஸ் இப்னு ஸஅத் என்றொரு நபித்தோழர், வெளிநாடு ஒன்றிற்கு விஜயம்  செய்திருந்தார்.  தங்களுடைய தலைவருக்கு முன்னால்  அந்நாட்டு மக்கள் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்துவதைக் கண்டு அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.  இப்படி கூட மரியாதை செலுத்தலாம்  என்றிருந்தால்  அதற்கு  மிகவும் தகுதியானவர் இறைத்தூதர் மட்டும்தான் என்று அவர் மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டார்.  ஊர் திரும்பியவுடன் இறைத்தூதரை சந்தித்து தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். 

ஒரு போதும் அவ்வாறு செய்யலாகாது.  ஒரு வேளை, யாருக்காவது சிரம் தாழ்த்தி ஸஜ்தா செய்யுமாறு நான் ஆணையிடுவதாக இருந்தால்  பெண்களிடம் தங்கள் கணவர்களுக்கு ஸஜ்தா  செய்யுமாறு  ஆணையிடுவேன்! என்று இறைத்தூதர் கூறினார்.

இன்னோர் அறிவிப்பின் படி, “என்னுடைய அடக்கஸ்தலத்தின் வழியாக நீங்கள் சென்றால் என் கல்லறைக்கு ஸஜ்தா செய்வீர்களா? என்று இறைத்தூதர் கேட்டார்கள்.  இல்லை, மாட்டோம் என்று அவர் பதிலளித்தார்.  அப்படியென்றால் இப்போதும் நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது என்று இறைத்தூதர் கூறினார்கள்.

இன்னுமொரு சம்பவம்

 இன்னொரு நபித்தோழர் மஆத் சிரியா நாட்டுக்குச் சென்று திரும்பிய போது இறைத்தூருக்கு முன்னால் சிரவணக்கம் செய்தார்கள்.  இறைத்தூதர் திகைப் போடு  மஆதே என்ன இது? என்று கேட்டார்கள். ரோம தேசத்து மக்கள்   தங்கள்   தலைவர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் முன்னால் இவ்வாறு சிரம் தாழ்த்திப் பணிவதை நான் கண்டு வந்துள்ளேன்.  ஆகையால், அது போன்றே தங்களுக்கும் நான் ஸஜ்தா செய்ய ஆசைப்பட்டேன்  என்று அவர் கூறினார்.  அதற்கு அண்ணலார் இறைவனுக்குத் தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது.  அப்படி செய்ய அனுமதி இருந்திருந்தால் தங்களுடைய கணவர்களுக்கு மனைவிகள் சிரம் பணியட்டும் என்று நான் ஆணையிட்டிருப்பேன்எனக் கூறினார்கள்.

 மரணவேளையிலும் எச்சரிக்கை:

அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி, மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள் என்று எச்சரித்தார்.

இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள் என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.

 எழுந்து நிற்கவும் தடை!

அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல, தனக்காக பிறர் எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள்.

"எவனொருவன் தனக்காக மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென விரும்புகிறானோ, அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் தேடிக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

 இது அவரது எச்சரிக்கை சரி,  நடைமுறை எவ்வாறு இருந்தது? இதோ அதையும் ஒரு நபித்தோழர் கூறுகிறார்கள்:

 'நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்களை விட மிக விருப்பத்துக்குரிய எந்த ஒரு மனிதரும் இருக்கவில்லை. இருப்பினும் நபியவர்களைக் கண்டால் அவர்கள் (மரியாதைக்காக) எழுந்து நிற்க மாட்டார்கள். நபியவர்கள் இதனை வெறுப்பதனாலேயே அவ்வாறு எழுந்து நிற்க மாட்டார்கள்' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

 இவ்வாறு  சுயமரியாதை பேணும் கலாச்சாரத்தை உலகெங்கும் தன்னைப் பின்பற்றும் மக்களிடையே உருவாக்கிச் சென்றார்

--------------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக