இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 டிசம்பர், 2020

ஈடிணையில்லா சீர்திருத்தவாதியாக நபிகளார்!

 

 அறிவுரை கூறுவது என்பது எவருக்கும் எளிது! ‘நியாயமாக நடக்கவேண்டும்’, ‘நேர்மையாக நடக்க வேண்டும்’, ‘உண்மையே பேச வேண்டும்’, ‘எவரையும் அவதூறு பேசக்கூடாது’ என்றெல்லாம் ஆன்மீக அறிவுரைகளை பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் அவற்றை ஏன் பின்பற்றவேண்டும் என்ற கேள்விக்கு வலுவான பதில் இல்லாதவரை அவற்றை மக்கள் ஒரு காதில் வாங்கி மறுகாதில் வெளிவிடும் நிலையே தொடரும். ஆனால் முஹம்மது (ஸல்) என்ற மாமனிதர் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் போதித்த அறிவுரைகள் ஏற்படுத்திய விளைவுகள் தன்னிகரற்றவை! அவர் இப்பூமியில் வந்து சென்றதில் இருந்து நூற்றாண்டுகளாக – தலைமுறை தலைமுறையாக- கோடிக்கணக்கான மக்களை அவை சீர்திருத்தியுள்ளன. தொடர்ந்து சீர்திருத்தி வருகின்றன. உலகம் அழியும் நாள்வரை இப்புரட்சி தொடரவே செய்யும் என்று உறுதியோடு சொல்லலாம். ஏனெனில் அவர் இறைவனால் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட இறுதி சீர்திருத்தவாதி! அவரது வாழ்நாளில் ஒருமுறை சொன்ன சொற்கள் அன்று ஆயிரக்கணக்கானோரை சீர்திருத்தின. இன்று கோடிக்கணக்கானோரை சீர்திருத்திக் கொண்டிருக்கின்றன.

வெற்று அறிவுரைகளும் போலி சீர்திருத்தமும்:

இஸ்லாமியர்கள் திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் மேற்கோள்காட்டி சீர்திருத்தக் கருத்துகளை சொல்லும்போது சமூக வலைத்தளங்களில் பல நாத்திக மற்றும் ஆத்திக அன்பர்கள் இவ்வாறு கேட்பதுண்டு: “உண்மை பேசவேண்டும், நன்மை செய்யவேண்டும், பொய், மோசடி, கொள்ளை போன்றவை செய்யக்கூடாது” என்ற அறிவுரைகளை நேரடியாக மக்களுக்குக் கூற வேண்டியதுதானே? எதற்காக நீங்கள் என் குர்ஆன் மற்றும் நபிமொழிகளை மேற்கோள் காட்டி கூறவேண்டும்? இது மதப்பிரச்சாரம் செய்வது போலத்தானே? என்ற குற்றச் சாட்டையும் வைக்கிறார்கள்.

இது உண்மையில் தவறான புரிதல் ஆகும். வெற்று அறிவுரைகளின் போலித்தன்மையை அவர்கள் உணராததே இதற்குக் காரணம்!  “குடி குடியைக் கெடுக்கும்” என்று மதுக்கடைகளில் விளம்பர பலகைகள் தொங்குவதை அறிவோம். “புகை நமக்குப் பகை” என்றும் “பான்பராக் போன்ற போதை உண்டாக்கும் பொருட்கள் கேன்சர் நோயை உண்டாக்கும்” என்ற எச்சரிக்கைகளை படங்கள் சகிதம் அவற்றின் பாக்கெட்டுகளில் அச்சடித்தும் வருவதையும் நாம் அறிவோம். அவை எத்தனை பேரை அந்த தீமைகளில் இருந்து தடுத்துள்ளன என்பதையும் அவை தடுப்பதில்லை என்பதையும் நாம் நன்றாக அறிவோம். அவற்றின் பயனாளர்கள் அவற்றை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. என்ன காரணம்?

ஆம், இவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற எந்த உந்துதலும் இதன் பின்னணியில் இல்லை. இந்தத் தீமைகளில் ஈடுபடும் நபர்களுக்கு தங்களைக் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற உணர்வுதான் மேலோங்குகிறது. இத்தீமைகளை சட்டம் போட்டு தடுத்தாலும் சட்டத்தின் பிடியில் சிக்காதவரை அவர்கள் அதை செய்யவே செய்வார்கள். அதிலிருந்து விலகவே மாட்டார்கள். இவற்றின் மூலம் தங்களை நம்பியுள்ள பெண்களும் குழந்தைகளும் முதியோர்களும் துன்பமடைவார்கள் என்பதை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை என்பது தெளிவு!

வாழ்க்கையைப் பற்றிய குறுகிய கண்ணோட்டம்

தான் வாழும் வரையே வாழ்க்கை, தன் கண்ணுக்குப் புலபடுவது மட்டுமே உலகம் இதற்கு அப்பால் ஒன்றுமே இல்லை என்ற குறுகிய கண்ணோட்டமே இந்த மனோநிலைக்குக் காரணம். இந்தக் குறுகிய வட்டத்தில் இருந்து மனிதனுக்கு வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்தி அவனைப் பரந்த மனப்போக்கு உள்ளவனாகவும் வாழ்க்கையில் பொறுப்புணர்வு உள்ளவனாகவும் மாற்றுகிறது இஸ்லாம். தனது வினைகளுக்கு இங்கில்லாவிட்டாலும் மறுமை உலகில் பரிசோ அல்லது தண்டனையோ கிடைக்க உள்ளது என்ற உணர்வோடு அவனை வாழவைக்கிறது இஸ்லாம்.

இஸ்லாமிய அறிவுரைகளுக்கு உள்ள சிறப்பு

 இஸ்லாம் இறைவனைப்பற்றியும் மறுமை வாழ்க்கையைப்பற்றியும் பகுத்தறிவு பூர்வமாக எடுத்துச் சொல்லி அந்த நம்பிக்கையை மனித மனங்களில் ஆழமாக விதைக்கிறது. கீழ்கண்ட உண்மைகளை அது போதிக்கிறது.

1.      இந்தக் குறுகிய வாழ்க்கை ஒரு பரீட்சை - இவ்வுலகம் பரீட்சைக் கூடம்:

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறதுபரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)

 2. இன்று நம் வினைகள் பதிவாகின்றன!

 நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம். (திருக்குர்ஆன் 36:12)
இறைவன் கூறும் வினைப்பதிவேடுகள் ஒருபுறம் இருக்க நாம் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கவனித்தாலே இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இன்று CCTV கேமராக்களில் நிகழ்வுகள் பதிவாகி அவற்றிற்கு சாட்சிகளாக பயன்படுவதை நாமறிவோம். அவற்றைவிட நமது கண்களும் காதுகளும் அதிநுட்பமான தொழில் நுட்பம் கொண்டவை . இவையும் மறுமை நாளில் நம் வினைகளுக்கு சாட்சிகளாக வரும் என்றும் கூறுகிறது திருக்குர்ஆன்.

3. உலகம் அழியும் மீண்டும் உயிரோடு வருவோம்!

இந்த உலகம் முற்றாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைக் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள்:

= அந்நாளில்மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டுபல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:6-8)

4.      4. இறுதித்தீர்ப்பு நாளில் விசாரணை பக்குவமாக நடைபெறும்.

= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)

5.      5. நல்லோர் சொர்க்கத்தில் நுழைவர்!

 = (அவர்களில்) எவர்கள் இறைநம்பிக்கைகொண்டுநன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம்அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம். (திருக்குர்ஆன் 4:57) 

6.      6. தீயோர் நரகில் நுழைவர்!

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-26)  

 இவைபோன்ற பற்பல இறைவசனங்களையும் நபிமொழிகளையும் நீங்கள் காணமுடியும். இவ்வாறு தங்கள் வினைகள் பற்றிய பொறுப்புணர்வை மனித மனங்களில் விதைப்பது மூலம் பாவங்களில் இருந்து விலகி வாழும் பெரும் சமூகத்தை உலகளாவ உருவாக்குகிறது இஸ்லாம். அந்த வகையில் இஸ்லாத்தை போதித்து அதை நடைமுறைப்படுத்தி அதைப் பின்பற்றிவரும் உலக மக்கள்தொகையின்  கால்பங்கு மக்களை– தொடர்ந்து சற்றும் அயராமல் – சீர்திருத்திவரும் நபிகள் நாயகம்தான் உலக வரலாற்றில் ஈடிணையில்லாத பெரும் சீர்திருத்தவாதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக