இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 நவம்பர், 2018

சபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா?


Image result for mosques in chennai flood
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்பியுள்ளது. அதைத் தொடந்து சில வகுப்புவாத சிந்தனையாளர்கள் பள்ளிவாசலுக்குள் ஏன் பெண்களை அனுமதிப்பதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்நிலையில், கேரளாவில் உள்ள பள்ளிவாசல்களில் பெண்களையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி இந்து மகாசபை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கேரள உயர் நீதிமன்றம் இம்மனுவை தாக்கல் செய்தவர்களுக்கு இவ்வாறு கோருவதற்கான உரிமை இல்லை என்று கூறி அதை தள்ளுபடி செய்தது.  இது தொடர்பாக முஸ்லிம் பெண்கள் யாரும் கோரிக்கை முன்வைக்கவில்லை என்றும்  சில பள்ளிவாசல்களில் பெண்கள் அனுமதிக்கப்படவே செய்கின்றனர் என்றும் கூறியது உயர்நீதிமன்றம்.
இஸ்லாத்தின் நிலைப்பாடு
ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் இயற்கைக்கும் அவர்கள் குடும்பத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கும் தகுந்தவாறு கடமைகளையும் உரிமைகளையும் பகிர்ந்தளிக்கிறது இஸ்லாம் என்ற இறை மார்க்கம். இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் ஒன்று தொழுகை. இதை ஆண்களைப் பொறுத்தவரையில் முடிந்தவரை கூட்டாக நிறைவேற்ற ஊக்குவிக்கிறது. அதற்காக கட்டப்படுபவைதான் பள்ளிவாசல் என்ற தொழுகைக் கூடங்கள். கூட்டுத் தொழுகையினால் உண்டாகும் தீண்டாமை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு போன்ற சமூகப் புரட்சிகள் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்.
இன்னும் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை என்பது மக்கள் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நின்று நிறைவேற்றப்படுவது. ஆணும் பெண்ணும் அவ்வாறு அருகருகே கலந்து நின்றால் அங்கு வழிபாடு நடைபெறாது. என்ன நடக்கும் என்பதை யாரும் ஊகிக்க முடியும். ஆண்களும் பெண்களும் அவ்வாறு கலக்காமல் உரிய தடுப்பு ஏற்பாட்டோடு பள்ளிவாசல்கள் இருந்தால்தான் அங்கு பெண்களும் தொழுகையை நிறைவேற்ற முடியும்.
தடை இல்லை   
பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு விருப்ப உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று கடமையான தொழுகைகளில் கலந்து கொள்வதற்கு இஸ்லாத்தில் எந்தவிதமான தடையும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். அதை நபி (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை ஏராளமான நபிமொழிகளில் நம்மால் காணமுடியும்.
= 'பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி 
= உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம். (நூல் : முஸ்லிம்)
= பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல் : புகாரி) 
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள். (நூல் : புகாரி 
= 'நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)  
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.” (நூல் : முஸ்லிம்)
வீடே பெண்களுக்கு சிறந்த தொழுமிடம்  
பெண்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டுள்ள அதே வேளையில் அவர்களுக்கு வீடே சிறந்த தொழுமிடம் என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.
= உங்கள் பெண்களை பள்ளிவாசல்களை விட்டும் தடுக்காதீர்கள்.  எனினும் அவர்களின்  வீடே அவர்களுக்கு  சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)நூல் : அபூதாவூத் 567,  பைஹகீ 5359 )
= பெண்களின் பள்ளிவாசல்களில் சிறந்தது அவர்களுடைய வீடுகளின் ஆழமான (ஓரப்) பகுதியாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.,( நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகீ 5360)
மூடநம்பிக்கைகளை இறைவன் கற்பிப்பதில்லை
ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமில் மூட நம்பிக்கைகள் கிடையாது. மற்ற மத நம்பிக்கைகளோடு ஒப்பிட்டு இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கலாம். இன்னார் நுழைந்தால் வழிபாட்டுத்தலங்கள் புனிதத்தை இழந்து விடும் அல்லது தீட்டாகிவிடும் என்பன போன்ற விடயங்களை இறைவன் நமக்குக் கற்றுத்தரவில்லை. முஸ்லிம் பெண்கள் மட்டுமல்ல மாற்று மதப் பெண்களும் பள்ளிவாசல்களில் நுழைவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் அவ்வப்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்தே அறியலாம்.
பேரிடரில் சரணாலயங்களாக   பள்ளிவாசல்கள்
சென்னை பெருவெள்ளம், கஜா புயல் போன்ற பேரிடர்கள் ஏற்படும் நேரங்களில் பள்ளிவாசல்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அனைவரும் ஜாதி மத பேதமின்றி அடைக்கலம் பெறும் இடங்களாக மாறுகின்றன என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்களைப் பொறுத்தவரையில் அங்கு படங்களோ உருவங்களோ சிலைகளோ எதுவும் இருக்காது. நான்கு சுவர்களுக்கு நடுவே அமைந்த ஒரு காலி அறைதான் பள்ளிவாசல். பழைய காலங்களில் வழிப்போக்கர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சத்திரங்கள் போன்றவை பள்ளிவாசல்கள்.  உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தால் இன்றும் கூட பள்ளிவாசல்களை வழிப்போக்கர்களுக்கான சத்திரங்களாக அவற்றை பயன்படுத்த முடியும்.
-------------- 
இஸ்லாம் என்றால் என்ன?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக