இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 ஜூன், 2017

பலவீனமான தங்குமிடம்



இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அருளிய வேதவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன். அந்த வேதத்தில் இறைவன் அல்லாதவற்றை வணங்கும் மக்களின் அறியாமை குறித்து குறிப்பிடும்போது சிலந்தியை தொடர்பு படுத்தி பின்வருமாறு கூறுகிறான்: .

எவர்கள் இறைவனை விட்டுவிட்டு மற்ற பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்களின் உவமை தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளும் சிலந்திப்பூச்சியாகும். திண்ணமாக, வீடுகளிலேயே மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடாகும். அந்தோ! இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! (திருக்குர்ஆன் 29:41)

சிலந்தி தன் வலையில் சிக்கும் சிறு புழு பூச்சிகளை அதைக் கொண்டே கட்டிவைத்து அவற்றைக் கொல்கிறது. அதுவே அதன் நீண்டநாள் உணவாக சேமிக்கப்படுகிறது. சிலந்தி தான் விரும்பியபோது உணவுண்டு பசியாறவும் செய்கிறது. சிலந்தியைப் பொறுத்தவரையில் தான் பின்னிய வலைவீடு சக்திவாய்ந்த ஒன்றாக இருந்தாலும் அது எவ்வளவு நிலையற்ற பலவீனமான ஒன்று என்பதை நாமறிவோம். நம் கைவிரல் கொண்டோ சற்று பலமாக காற்றை ஊதுவதைக் கொண்டோ எளிதில் சிலந்தியின் ‘கோட்டையைக்’ கலைத்து விடலாம். அவ்வாறு கலைக்கப்ப்படும்போது அதன் சேமிப்பும் காணாமல் போய்விடுகிறது. தங்குமிடம் இல்லாமல் தவிக்கும் நிலையும் உண்டாகிறது. ஆபத்தில் சிலந்தி அழிந்துபோகவும் வாய்ப்புண்டாகிறது.

படைத்த இறைவனை விடுத்து அவனது படைப்பினங்களையும் மனிதர்களையும் இன்ன பிற பொருட்களையும் அவற்றுக்கு தெய்வ சக்தி உண்டு என்றும் அவை மனிதன் சந்திக்கக்கூடிய ஆபத்துகளில் இருந்து தங்களைக் காப்பாற்றும் என்று நம்பி அவற்றை வணங்கவும் காணிக்கைகள் செலுத்தவும் செய்யும் மனிதர்களின் நிலையும் அதுவே என்று இறைவன் மேற்படி வசனம் மூலம் தெரிவிக்கிறான்.
உண்மையில் படைத்த இறைவனை வணங்கி அவனது எவல்-விலக்கல்களை பேணி வாழும் நன்மக்களுக்கு இவ்வுலகில் அமைதியும் இறைவனின் பாதுகாப்பும் கிடைக்கிறது. அவர்கள் செய்யும் நல்லறங்கள் ஒவ்வொன்றும் அழியாத செல்வங்களாக இறைவன்பால் சேமிக்கப்படுகின்றன. இறுதியில் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு மறுமை வாழ்க்கைக்கு செல்லும்போது அந்த சேமிப்புகள் புண்ணியங்களாக வருகின்றன. அதன் பலனாக மறுமையில் முடிவுறாத இன்பங்கள் நிறைந்த நிரந்தரமான  வாழ்விடமும் – அதாவது சொர்க்கமும் - கிடைக்கிறது.
அதேவேளையில் இறைவன் அல்லாதவற்றை வணங்கி அவை தம்மைப் பாதுகாக்கும் என்று நம்பி வாழ்வோரின் கட்டமைப்பு தற்காலிக இன்பங்களை மட்டுமே தரும். அது மேற்படி இறைவசனம் கூறும் சிலந்தியின் வீட்டைப்போல மிக எளிதில் அழியக்கூடியதாகும். தவறான இறைநம்பிக்கை கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் செய்த நல்லறங்கள் சிலந்தி வீட்டில் சேமிப்பைப் போல காணாமல் போய்விடுகின்றன. படைத்த இறைவனுக்கு செலுத்த வேண்டிய வணக்கத்தை நன்றியை அவன் அல்லாதவற்றுக்கு செலுத்தியதான் இறைவனின் கோபத்திற்கும் தண்டனைக்கும் அவர்கள் ஆளாகிறார்கள். அவர்கள் நிரந்தர வேதனைகள் கொண்ட நரகத்திலும் நுழைகிறார்கள்.


= “இந்த உவமைகளை மக்களுக்காகக் கூறுகிறோம். அறிவுடையோரையன்றி வேறு எவரும் இதனை புரிந்து கொள்ள மாட்டார்கள்” (திருக்குர்ஆன் 29:43) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக