இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 மே, 2017

மழை நின்று போனால்... ?

Image result for prayer for rain
இவ்வுலகம் என்ற பரீட்சைக்கூடத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனிதன் மறந்து விடும்போது அவனுக்கு உண்மையை நினைவூட்டி அவன் இறைவன்பால் திரும்புவதற்காக இறைவன் அவ்வப்போது மழையை தடுத்து வைப்பதும் உண்டு.  ஆனால் கருணையுள்ள இறைவன் விரைவிலேயே அவர்களின் நிராசையைப் போக்கியும் விடுகிறான்.
42:28. அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் அருளைப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
பாவமன்னிப்பு கோரல் – மழைக்கான திறவுகோல்
பண்டைக்காலத்தில் வாழ்ந்த ஆது என்ற கூட்டத்தாரின்பால் அனுப்பப்பட்ட ஹூத் என்ற இறைத்தூதர் தனது மக்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறியதை திருக்குர்ஆன் கூறுகிறது:
= 11:52. என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).
ஹூத் நபிக்கு முன்னதாக வந்த நூஹ் நபியும் தம் மக்களுக்கு இவ்வாறே உபதேசித்து உள்ளதைக் குர்ஆனில் காண முடிகிறது:
= 71:10-12. மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்என்றுங் கூறினேன். “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். 

நபிகளார் நடத்திய மழைத் தொழுகை

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல இறைவனிடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது முன்னுதாரணம் மூலம் காட்டித் தந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் (சுற்றுக்கள்) தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
பின்வரும் ஹதீஸிலிருந்து மழைத் தொழுகை முறைகளை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
= மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் மழைப் பஞ்சத்தைப் பற்றி முறையிட்டார்கள்.  ஒரு மிம்பரை (சிறு சொற்பொழிவு மேடை) ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அது அவர்களுக்காக திடலில் வைக்கப்பட்டது. ஒரு நாளை மக்களுக்கு வாக்களித்தார்கள். மக்கள்  அந்நாளில் (திடலை நோக்கி) புறப்பட்டார்கள். சூரியனுடைய கீற்று வெளிப்பட்ட நேரத்திலே நபியவர்கள் (வீட்டிலிருந்து திடலை நோக்கி) புறப்பட்டார்கள். மிம்பரில் உட்கார்ந்தார்கள். அல்லாஹு அக்பர் (இறைவன் பெரியவன்) என்று கூறி இறைவனைப் பெருமைப் படுத்தினார்கள். கண்ணியமிக்கவனும், கீர்த்தி மிக்கவனுமாகிய இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு, ‘‘மக்களே! உங்கள் வீடுகளின் பஞ்சத்தைப் பற்றியும், உங்களுக்கு மழைபொழிய வேண்டும் ஆரம்ப காலத்தை விட்டும் மழை தாமதமாகி விட்டதைப் பற்றியும் நீங்கள்  முறையிட்டீர்கள்.  நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றான்.  உங்கள் பிரார்த்தனைக்கு அவன் பதிலளிப்பதாகவும் வாக்களித்திருக்கின்றான்’’ என்று கூறினார்கள்.
பின்னர்  பின்வருமாறு கூறினார்கள்:
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.
(பொருள்: எல்லாப் புகழும் இறைவனுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்; நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)
பிறகு தமது இரு (புறங்) கைகளையும் உயர்த்தினார்கள். தம்முடைய இரு அக்குள் பகுதியின் வெண்மை தெரியுமளவிற்கு உயர்த்தி (பிரார்த்தித்துக்) கொண்டேயிருந்தார்கள். பின்னர் மக்களை நோக்கி தமது முதுகுப் பகுதியைத் திருப்பினார்கள். தமது இரு கைகளையும் உயர்த்தியவாறே மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.
பிறகு மக்களை நோக்கித் திரும்பினார்கள். (மிம்பரிலிருந்து) இறங்கி (பெருநாள் தொழுகையைப் போன்று) இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.
இறைவன் மேகங்களை ஒன்று கூடச் செய்தான். இடி இடித்தது. மின்னல் வெட்டியது. இறைவன்வின் நாட்டப்படி மழைபொழிந்தது. அவர்கள் பள்ளிக்கு வருவதற்குள்  நீரோட்டமாக ஓடத்தொடங்கியது. மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் இடத்தை நோக்கி மக்கள் விரைந்து செல்வதைப் பார்த்தபோது தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்கு நபியவர்கள் சிரித்தார்கள்.  பிறகு இறைவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் பெற்றவன் என்றும், நான் இறைவனின் அடிமையும், அவன் தூதருமாவேன் என்றும் சாட்சி கூறுகிறேன்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: அபூதாவூத் (992)
----------
மழைக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை
= அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.
(இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய செழிப்பான உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: அபூதாவூத் 988
= அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா
(இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு வழங்குவாயாக!)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரீ 1013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக